மீண்டும் தெலுங்கு பட இயக்குநர் படத்தில் தளபதி விஜய்! யார் தெரியுமா?
நடிகர் விஜய் மீண்டும் தெலுங்கு பட இயக்குநருடன் 'தளபதி 68' படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த பொங்கலன்று, விஜய் நடிப்பில், 'வாரிசு' திரைப்படம் வெளியாகி பரவலான வெற்றியைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கியது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் 'லியோ' படத்தில் நடித்துவருகிறார். 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' என வரிசையாக ஹிட் கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். அதனால் இவருடன் மீண்டும் கூட்டணி அமைத்து, விஜய் நடித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

இதைத்தொடர்ந்து, விஜய்யின் 'தளபதி 68' படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி நிலவிவந்த நிலையில், அட்லி, ஹெச்.வினோத், கார்த்திக் சுப்புராஜ் என்று இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டாலும், இறுதியாக தெலுங்கு இயக்குநரான கோபிசந்த் மலினேனி இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ'வுக்குப் பிறகு, விஜய் இந்த படத்தை உடனடியாகத் தொடங்குவார் எனவும், மேலும் இப்படம் இரண்டு தயாரிப்பு பேனர்களின் கீழ் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ், 'தளபதி 68' படத்தை தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து, ஏற்கெனவே ஆர்.பி. சௌத்ரியின் மூத்த மகன், நடிகர் ஜித்தன் ரமேஷ், சமீபத்தில் ஊடக சந்திப்பின்போது, உறுதிப்படுத்தியபோது, கிட்டத்தட்ட சூப்பர் குட் பிலிம்ஸ் பேனரில் படம் செய்வது உறுதியான நிலையில், பிரபல டோலிவுட் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் உடன் இணைந்து தயாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு இயக்குநரான கோபிசந்த் மலினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் பொங்கல் அன்று வெளியான 'வீர சிம்மா ரெட்டி' திரைப்படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.