
ஒரு காலகட்டத்தில், எந்தவொரு ஆக்ஷன் படங்களிலும் நடிக்காமல், காதல், பாடல் என மென்மையான நடிகராக வலம்வந்து தமிழ்த்திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியவர் மைக் மோகன். சூப்பர்ஸ்டார், உலக நாயகன், கேப்டன் என முன்னணி நடிகர்கள் ஒரு பக்கம் அதிரடியாக நடித்துவந்தாலும் அவர்களுக்கு இணையாக பயணங்கள் முடிவதில்லை, 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'உதயகீதம்', 'மெல்ல திறந்தது கதவு', 'இதயகோயில்', 'மௌனராகம்' என பல வெள்ளி விழா படங்களை மோகன் கொடுத்துள்ளார்.
இவர் நடித்துள்ள படங்களில், இளையராஜாவின் இசையில் இவரது பாடல்கள் பெரும்பாலும் ஹிட் அடித்து விடுவதும் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இன்றளவும் இரவு நேரங்களில் ரசித்து கேட்கப்படும் பாடல்களில் இவரது பட பாடல்களும் முக்கியாக இடம்பெறும்.
அதுமட்டுமல்லாமல், இவரது குரலும் பட வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த குரலுக்காகவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனால் அந்த குரலுக்கு சொந்தக்காரர் மோகனின் நண்பரான சுரேந்தர்தான். இவர்தான் மோகனின் ஒவ்வொரு படத்திற்கும் டப்பிங் கொடுத்துவந்தார். அந்த குரலைக் கேட்கும்போது மெல்லிய குரலாக இனிமையாக இருக்கும்.
எதிர்பாராதவிதமாக, அந்தக் குரலே இருவருக்குமிடையே பிரச்னையை வளர்த்தது. தனது குரலால் தான் மோகனின் படங்கள் வெற்றி பெறுவதாக சுரேந்தர் ஒருமுறை கூறியதையடுத்து, இது பெரிய பிரச்சனையாக வெடித்தது.
அதைத் தொடர்ந்து மோகன் அடுத்தடுத்து மூன்று படங்களுக்கு தன்னுடைய ஒரிஜினல் குரலில் டப்பிங் கொடுத்த நிலையில் அந்தப் படங்கள் பெரிதாக கைகொடுக்காமல் போனது.
தொடர் தோல்வியைத் தொடர்ந்து சினிமா வேண்டாம் என மோகன் ஒதுங்கியிருந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும், விட்ட இடத்தைப் பிடிக்க 'ஹரா' என்ற படத்தில் கதாநாயகனாக மைக் மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்போது மைக் மோகனுக்கு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 'ஹரா' படத்தில் மோகனுக்கு டப்பிங் யார் கொடுப்பது என்ற பிரச்சனை தான் புதிதாக முளைத்துள்ளது. காரணம் மோகனின் படத்திற்கு அவருடைய குரலும் பிளஸ் பாயிண்ட் என்பதால், அவருடைய குரலுக்கு ஏற்றவாறு டப்பிங் ஆர்டிஸ்ட்டை படக்குழுவினர் தேடி வருகின்றனராம்.
பல வருடங்களுக்குப் பிறகு மோகன் ரீ என்ட்ரி கொடுக்கும் சமயத்திலும் இந்த குரல் பிரச்சினை தலை தூக்கியதால், இது எல்லாத்தையும் தாண்டி 'ஹரா' திரைப்படம் எப்போது வெளியாகும் என மோகன் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.