சினிமாவில் மூவாயிரம் கோடி முதலீடு!

சினிமாவில் மூவாயிரம் கோடி முதலீடு!

கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2, காந்தாரா போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களைத் தயாரித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம். ஹோம்பாலே பிலிம்ஸ். அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் சினிமா ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருப்பதோடு, சினிமாவில் தங்களது எதிர்காலத் திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

“கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது. இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. சினிமா வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது. அது நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகுக்குப் பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம். அதோடு, பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.

இந்தப் புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கம் கொண்ட சினிமாவைத் தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம். இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்றும் உறுதியளிக்கிறோம். அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என அந்த அறிவிப்பில் அவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே, ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது, ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில், ‘கேஜிஎஃப்’ படப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், ‘சலார்’ எனும் திரைப்படத்தையும், தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துவரும், ‘ரகு தாத்தா’ என்ற படத்தையும், இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில், ‘டைசன்’ எனும் திரைப்படத்தையும், ‘சார்லி 777’ படப் புகழ் ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில்,  ‘ரிச்சர்ட் ஆண்டனி’ எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com