‘துடிக்கும் கரங்கள்’ டீசர் வெளியீட்டு விழாவில் பரபரப்பு!

‘துடிக்கும் கரங்கள்’ டீசர் வெளியீட்டு விழாவில் பரபரப்பு!

‘ஓடியன் டாக்கீஸ்’ சார்பாக கே.அண்ணாதுரை தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘துடிக்கும் கரங்கள்.’ நடிகர் விமல் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை வேலுதாஸ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தை வேலுதாஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் மிஷா நரங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படிப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்தத் திரைப்படத்தின் டீசர் காட்சிகள் வெளியீட்டு விழா, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எழில், லிங்குசாமி, பேரரசு, ரமேஷ்கண்ணா, புவனா, சந்தோஷ் மற்றும் திருச்சி மாவட்ட வினியோகஸ்தர் ஜின்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும், ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் வெளியாகாவிட்டால், வேறு மொழி படம் இங்கு தமிழகத்தில் வெளியாகாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவர் பேசுகையில், “தற்போது ஆந்திராவில் பண்டிகைக் காலங்களில் தமிழ் படங்களை திரையிடக்கூடாது, தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. ‘வாரிசு’ படத்தை தயாரித்தவரும் இயக்கியவரும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள்தான். ஹீரோ மட்டும்தான் தமிழ். அதனால் ஹீரோவை கார்னர் பண்றாங்க. தென்னிந்திய வர்த்தக சபை இதில் தலையிடவேண்டும். அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் குரல் கொடுக்க வேண்டும். ‘வாரிசு’ படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகவில்லை என்றால், அடுத்து இங்கே வேறு எந்த மொழி படமும் ரிலீஸ் ஆகாத அளவுக்கு பிரச்னை பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என்று பேசினார்.

விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் டைட்டிலை இந்தப் படத்துக்கு வைத்துள்ளார்கள். அவரது படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தும்போது சென்டிமென்டாக அந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம்” என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் அண்ணாதுரை, இயக்குநர் வேலுதாஸ் ஆகியோரும் படம் தயாராகியிருக்கும் விதம் குறித்துப் பேசினார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com