
பிஜிஎஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிஜிஎஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 3.6.9. இயக்குநர் சிவமாதவ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் பிக் ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, படத்தொகுப்பு ஆர்.கே.ஸ்ரீநாத், கலை ஸ்ரீமன் பாலாஜி.
உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450 தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, ‘நாலேஜ் இன்ஜினியரிங்’ என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ‘வேர்ல்டு ரெக்கார்டு யூனியன்’ என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் பாண்டியராஜன், இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தீனா, எழுத்தாளர் அஜயன் பாலா, ‘லோக்கல் சரக்கு’ படத்தின் தயாரிப்பாளர் சாமிநாதன் ராஜேஷ், ‘நாலேஜ் இன்ஜினியரிங்’ அமைப்பின் நிறுவனர் ஷரிபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். கலைப்புலி தாணு இந்தப் படத்தின் இசைத்தட்டை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.