புதிய படத்திற்கு மலேசியாவில் பூஜை போட்ட விஜய் சேதுபதி!
தமிழ்நாட்டில் எடுக்கப்படும் பெரும்பாலான படங்களுக்கு ஏவிஎம் ஸ்டூடியோ அல்லது இங்கேயே தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்யும் இடங்களில் படத்திற்கான பூஜை போடப்படும். ஆனால், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத அடுத்த படத்திற்கான பூஜை மலேசியா நாட்டில் இன்று நடைபெற்றது.
“ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” பட இயக்குநர் பி.ஆறுமுக குமார் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் ஈப்போ நகரில் தொடங்கியது.
கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு ஆர்.கோவிந்தராஜ்,கலை இயக்கம் ஏ.கே.முத்து ஆகியோர் மேற்கொள்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த படத்தை 7 சிஎஸ் என்டர்டெய்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
முன்னதாக இயக்குநர் பி.ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியான “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் விஜய் சேதுபதியும், கவுதம் கார்த்தியும் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் தயாரிப்பாளர்கள் நினைத்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள “யாதும் ஊரே யாவரும் கேளிர்” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.