விக்ரம் பட பிரபல வில்லன், 60 வயதில், 2வது திருமணம்! யார் தெரியுமா?
தமிழ், தெலுங்கு, இந்தி, ஒடியா, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபல நடிகராக அறியப்படுபவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தற்போது 2வது திருமணம் செய்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஷிஷ் வித்யார்த்தி 1991ம் ஆண்டு 'கால் சந்தியா' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடித்த 3வது படமான 'துரோகால்' என்ற இந்தி படத்தில் 'கமெண்டர் பத்ரா'வாக சிறப்பாக நடித்ததற்காக, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்தாலும், இடையிடையே வேறு மொழி படங்களிலும் நடித்து வந்தார். அந்தவகையில் தமிழில் அவர் அறிமுகமானது 2001ல் 'சியான்' விக்ரம் நடிப்பில் வெளியான 'தில்' படத்தில்தான். அதில் டிஎஸ்பி சங்கர் என்ற கதாபாத்திரத்தில் பக்கா வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். தொடர்ந்து, 'பாபா', 'பகவதி', 'தமிழன்' என பல தமிழ்ப் படங்களில் வில்லனாகவும், 'கில்லி' படத்தில் விஜய்யின் அப்பாவாகவும், 'மலைக்கோட்டை' படத்தில் விஷாலின் சித்தப்பாகவும் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஊக்கமூட்டும் பேச்சாளராகவும், ஒரு யூ-ட்யூபராகவும், ஃபுட் ப்ளாகராகவும் தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது 2வது திருமணம் செய்துகொண்ட விஷயம்தான் திரையுலகில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
தற்போது இவருக்கு 60 வயதாகும் நிலையில், ஏற்கெனவே இவருக்கு திருமணமான நிலையில், ரஜோஷி வித்யார்த்தி என்கிற மனையியும், குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், அஸ்ஸாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற தொழிலதிபரை மணந்துள்ளார். இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவுகள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, ஆஷிஷ் வித்யார்த்தி கூறும்போது, இருவருமே சில வருடங்களாக நண்பர்களாக பழகிவந்த நிலையில், பின்னர் அது காதலாக மாறவே, அதன் அடுத்த கட்டமாக பதிவுத்திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.
இவர்களின் திருமணம் திரையுலகினருக்கு அதிர்ச்சியான விஷயமாக ஒருபக்கம் இருந்தாலும், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவத்து வருகின்றனர்.