வசூலில் வெல்வானா ‘அகிலன்?’

வசூலில் வெல்வானா ‘அகிலன்?’

மரர் கல்கியின் அழியாத காவியமான, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிகப்பெரும் பிரம்மாண்டப் படைப்பாக வெளியாகி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்தில், பொன்னியின் செல்வன் நாவல் கதாநாயகனான அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் ஜெயம் ரவி தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஒரு சரித்திர நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், உலகம் முழுவதும் வெளியாகி பல கோடி ரூபாய்களை லாபமாக சம்பாதித்துக் கொடுத்து சாதனை புரிந்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரப்போகும் அடுத்த படத்தைக் காண அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த வேளையில், இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் ‘அகிலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளது. ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்கேற்ற ஸ்க்ரிப்டுகளை தேர்வு செய்து நடித்துவரும் ஜெயம் ரவி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் 80 சதவிகித படப்பிடிப்புக் காட்சிகள் துறைமுகங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தத் திரைப்படம் பல சட்டச் சிக்கல்களை சந்தித்துள்ளது. இந்தப் படத்தில் சுமார் இரண்டாயிரம் கண்டெய்னர்கள் இடம்பெறும் பிரம்மாண்டக் காட்சிகள் இடம்பெற்று உள்ளதாம். தற்போது அனைத்து பிரச்னைகளையும் தாண்டி இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘இறைவன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘அகிலன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கூடியுள்ளது. அதேசமயம், பொன்னியின் செல்வன் பட வசூலை ‘அகிலன்’ வெல்வானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com