மினிமம் பட்ஜெட்டில் பிரம்மாண்டத்தை அள்ளித் தெளித்த 'யாத்திசை'! வெளியான வீடியோ...
பொதுவாக வரலாற்றுக் கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் என்றாலே அதில் பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள், வித்தியாசமான ஆடை அலங்காரம், பிரம்மாண்ட செட்கள், கிராஃபிக்ஸ் காட்சிகள் என அந்த படத்தை தயாரிக்க 100 கோடி, 200 கோடி என பல கோடிகள் செலவாகும். அந்தப் படம் வெற்றிபெறும் பட்சத்தில், தயாரிப்பு செலவுகளையும் தாண்டி மிகப்பெரிய லாபத்தை ஈட்டினால் மட்டுமே தயாரிப்பாளர்களின் மனசும் நிறையும்.
அந்தவகையில், தற்போது பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு நாளை திரைக்கு வரவிருக்கும் படம்தான் 'யாத்திசை'. வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை தரணி ராசேந்திரன் எழுதி, இயக்கியுள்ள நிலையில், கே.ஜே. கணேஷ் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியிருந்தது. அப்போதே, 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்க்கு போட்டியாக இப்படம் அமையுமா என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டது. அந்தளவுக்கு டிரைலரில் இடம்பெற்ற விஷுவல் காட்சிகள், சவுண்ட் எஃபெக்ட் என அனைத்தும் பிரம்மாண்டமாக இருந்தது.

இதையடுத்து, தற்போது இப்படத்தின் ஒரு வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இரு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் சண்டைக்காட்சிதான் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்க்கும்போது, ஒவ்வொரு காட்சியும், மிகவும் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட படங்களை விரும்பி பார்த்துவரும் ரசிகர்களும் இந்த வீடியோவைப் பார்த்தபின், படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இப்படம் வெறும் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
'யாத்திசை' திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், இவ்வளவு மினிமமான பட்ஜெட்டில் அவ்வளவு தரமான காட்சிகளை பார்க்கும்போது, கண்டிப்பாக இப்படம் வெற்றிபெறும் என்றே தோன்றுகிறது.