தன் மீதான வதந்திக்கு விளக்கம் சொன்ன யோகி பாபு!
ஒப்புக்கொண்ட படத்திற்கு நடிக்க வருவதில்லை என்று நடிகர் யோகி பாபு மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக உள்ள யோகி பாபு சில படங்களின் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் மேலும் சில படங்களுக்கு நடிக்கவே வருவதில்லை என்றும் குற்றச்சாட்டும் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் யோகி பாபு மீது காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார். அதில் யோகி பாபு 20 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற்றுக் கொண்டு தனது திரைப்படத்திற்கு நடிக்க ஒப்புதல் வழங்கியதாகவும், பிறகு நடிக்க பலமுறை அளித்தும் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தார்.
இப்படி யோகி பாபு மீது புகார்கள் கூறப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களிலும் அது பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில் நடிகர் யோகி பாபு அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து நடிகர் யோகி பாபு குறிப்பிட்டு இருப்பது, சில படங்களில் என்னை வைத்து சில காட்சிகள் மட்டுமே எடுக்கின்றனர். இப்படி நான்கைந்து காட்சிகளை எடுத்துவிட்டு படத்தின் போஸ்டரில் எனது புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.இது போன்று செய்வது ரசிகர்களையும் விநியோகஸ்தர்களையும் ஏமாற்றும் செயல் என்று தயாரிப்பு நிறுவனங்களை கேள்வி கேட்டேன். இதுவே பிரச்சனைக்கு காரணம்.
நான் கதையைக் கேட்டு நடிப்பதை விட, இயக்குனர்களின் கஷ்டத்தை கேட்டே நடிக்கிறேன். தற்போது நடித்து வரும் லக்கி மேன் திரைப்படம் எனது வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது போல் இருக்கிறது என்று தெரிவித்தார்.