ரஜினி ஆன்மிகவாதியா?

ரஜினி ஆன்மிகவாதியா?
  • ஆன்மிகம்... அப்படியெனில் அமைதி – சாந்தி. மனிதனின் மனம் அமைதியாய் இருந்தால்தான், வன்முறையை நாட மாட்டான். ஆன்மிகம் என்பதை நான் பக்தியிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறேன். ஆன்மிகம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்கள் மனிதனைக் குழப்புகின்றன. எனவே, என்னை நான் ஆன்மிகவாதி என்றுதான் சொல்லிக்கொள்வேன். நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லை. முதலில் நான் மனிதன். பின்னர் இந்தியன். அவ்வளவுதான்.

  • ஒரு தடவை ரமண மகரிஷியிடம் ஒரு பக்தர், “சுவாமி! இந்த உலகம் இப்படிக் கெட்டு, நாசமாகிப் போய்க் கொண்டிருக்கிறதே! உங்களை மாதிரி மகான்கள் கீழே இறங்கி வந்து மக்களை நல்வழிப்படுத்தாமல், அருணாசலத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே!” என்று கேட்டாராம். அதற்கு ரமண மகரிஷி, “உன்னையும், என்னையும், இந்த ஆகாயத்தையும், பூமியையும் படைத்த இறைவனே அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நீ ஏன் கவலைப்படுகிறாய்? நீ உன்னை முதலில் திருத்திக்கொள். அதேபோல் ஒவ்வொருவரும் தன்னைத் திருத்திக்கொண்டால், உலகம் தானாகவே திருந்திவிடும்” என்று பதில் சொன்னார். அதன்படி, நான் முதலில் என்னைத் திருத்திக்கொள்ளுகிறேன். நான் என் மனச்சாட்சியின்படி வாழ்கிறேன். மற்றவர்களைத் திருத்துவது என் பிரச்னை இல்லை. நான் யாருடைய பாதையிலும் போக மாட்டேன். எல்லோருக்கும் ஆண்டவன் அறிவைக் கொடுத்திருக்கிறான். அதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும். தம் வாழ்க்கையைத் திருத்திக் கொள்ளட்டும்.

  • நடிப்பு என்னுடைய தொழில். ஆனால், ஆன்மிகம் இருக்கிறதே, அதுதான் என்னுடைய வாழ்க்கை. நடிக்கும்போதுகூட நான் ஆன்மிக விஷயங்கள் குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருப்பேன். நான் ஆன்மிகம் என்று குறிப்பிடுவது என் ‘ஆத்மா’வை – ஆத்ம விசாரத்தை. ஆன்மிகம் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிக்கிறேன். அது என் அறிவை விசாலப்படுத்துகிறது.

  • நான் எட்டு முதல் பதின்மூன்று வயது வரை பெங்களூரில் உள்ள ராமகிருஷ்ண ஆசிரமத்தில் வாழ்ந்தேன். அங்கே எனக்குக் கற்பிக்கப்பட்டவை சமஸ்கிருதம், உப நிஷதங்கள் மற்றும் பல நல்ல விஷயங்கள். எங்கள் குடும்பத்துக்கே குருவான ஸ்ரீராகவேந்திரரை, நான் என் ஆன்மிக குருவாய்க் கொண்டிருக்கிறேன். எந்தக் கடவுளுக்கும் நான் முக்கியத்துவம் தருவதில்லை.

  • நான் ஒரு பக்குவப்பட்ட நிலைக்கு வருவதற்கு ராமகிருஷ்ண மிஷன் அளித்த அடித்தளம்தான் காரணம். அதன்பின் நான் பெற்ற அனுபவம். கூலிக்காரனிலிருந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்து வரை பார்த்துவிட்டேன். அதுவும் ஒரு குறுகிய கால கட்டத்துக்குள்ளேயே பார்த்தவன். இந்தக் காலக் கட்டத்தில் எனக்கேற்பட்ட அனுபவங்கள்தான் என் மாற்றத்துக்குக் காரணம்.

  • நான் நல்ல நடிகன் இல்லை. But I am a good observer. நான் நிறைய கவனிப்பேன்; சிந்திப்பேன். என்னை நானே ஒவ்வொரு விஷயத்திலும் கேள்விகள் கேட்டுக்கொண்டு, பதில் தேடுகிறேன். ஆண்டவன் கொடுத்திருக்கும் அறிவை உருப்படியாய்ப் பயன்படுத்திக் கொள்வதுதானே முறை? அதில் நான் ஈடுபட்டிருக்கிறேன்.மேலும், மனிதனைப் பக்குவப்படுத்தும் இன்னொன்று, வயது. இவை எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுளின் ஆசியால்தான் இப்படி மாற முடிந்தது.

ரஜினி
ரஜினி
  • நான் வீண் வம்பை விலைக்கு வாங்குவதுபோல் நடந்து கொள்வதில்லை. ஆனால், நான் சாதுவும் இல்லை. எனக்கு நியாயம் என்று தோன்றுகிற விஷயங்களில் முரட்டுத்தனம் காண்பிப்பது என் இயற்கையான குணம்.

  • என்னுடைய இந்த இயற்கைக் குணத்துக்கும், நான் வளர்ந்த சூழ்நிலைக்கும் சம்பந்தமில்லை. ஒருவரி்ன் வாழ்க்கை முன் பிறவியின் தொடர்ச்சி என்று நான் நம்புகிறேன். அதைத்தான் பிராப்தம் என்கிறார்கள். போன பிறவியின் நல்லது, கெட்டதுக்கேற்பவே இந்தப் பிறவி அமைகிறது. எனவேதான், இந்தப் பிறவியில், நான் என் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறேன்; பொய் சொல்ல மாட்டேன்; என் மனச்சாட்சியின்படி நடப்பேன்; அதன் பயனாய் அடுத்தப் பிறவி, நன்றாய் அமையுமென்று நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.

  • உலகில் எங்கோ நடக்கிற விஷயங்கள் என்னைப் பாதிப்பதில்லை. நான் நேருக்கு நேர் சந்திக்கும் வறுமை, பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் இவை எல்லாம் என்னை மிகவும் பாதிக்கின்றன. இப்படி கஷ்டப் படுகிறவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று கண்டிப்பாய் நினைக்கிறேன். நிச்சயமாய்ச் செய்யத்தான் போகிறேன்.

பி.கு:-ரஜினிகாந்த் பத்திரிகைகளுக்கு அதிகமாகப் பேட்டி தர ஒப்புக் கொள்வதில்லை. 15.01.1989 பொங்கல் சிறப்பிதழுக்காக கல்கியிலிருந்து நாம் அணுகியபோதும் முதலில் அப்படித்தான் சொன்னார். பிறகு, “வித்தியாசமாய்க் கேள்வி கேட்பதாய் இருந்தால் பேட்டிக்குச் சம்மதம்” என்றார். சினேக பாவத்துடனும், ஆழ்ந்து சிந்தித்தும், அதே சமயம் ரஜினி ஸ்டைலில் படபடவென்றும் பேசினார். அப்பேட்டியிலிருந்துதான் மேற்படி செய்திகள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

போட்டி :

1.ரஜினிகாந்த துப்பறிவாளராக நடித்த படம் ? 

 2.காவல் அதிகாரியாக முதல் முதலில் நடித்த படம்?

 3.ரஜினி நடித்த முதல் சரித்திர திரைப்படம் என்ன?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com