வக்கிர புத்தி கொண்ட ஆண்களை சிக்க வைத்தாரா ஆன்ட்ரியா! 'அனல்  மேலே  பனித்துளி' திரை  விமர்சனம்

வக்கிர புத்தி கொண்ட ஆண்களை சிக்க வைத்தாரா ஆன்ட்ரியா! 'அனல் மேலே பனித்துளி' திரை விமர்சனம்

காலம் காலமாக ஒரு பெண் பாதிக்கப்படும்போது  பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எந்த  மாதிரி  ஆடைகளை  உடுத்திக்கொள்ள வேண்டும்? எந்த நேரத்தில் வெளியே போக வேண்டும்? எப்போது வெளியே போகக் கூடாது என பெண்களுக்குத்தான் அறிவுரை சொல்லப்படுகிறதே தவிர ஆண்களுக்கு யாரும் அறிவுரையோ எச்சரிக்கையோ தருவது இல்லை. 

ஒரு  பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது அந்த விஷயம் வெளியே தெரிந்தால் அந்தக்கொடுமையை செய்த ஆணுக்கு எந்தவிதமான அவமானம் நேரும், அவனது குடும்பம் எப்படி பாதிக்கப்படும்? அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் எப்படி இருக்கும்? என்னும் விதமாக எப்போது திரைப்படங்கள் உருவாகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் செய்ய ஆண்கள் அச்சப்படுவார்கள் 

நாயகி ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்சில் சூப்பர்வைசராக  பணி புரிகிறாள். அங்கே சேல்ஸ் கேர்ளாக பணிபுரியும் பெண்ணிற்கு, அவளது காதலனுடன் பிரேக்கப் ஆகிறது. முதலில் காதலித்தவள் பின் அவனது கேரக்டர் சரி இல்லாததால் காதல் வாழ்வை முடிவுக்குக்கொண்டு வர தீர்மானிக்கிறாள். ஆனால் காதலன் அவளை விடுவதில்லை. தொடர்ந்து வந்து டார்ச்சர் செய்கிறான். நாயகி அந்தப்பணிப்பெண்ணை டார்ச்சர் செய்யும் அவளது  காதலனை எச்சரித்து அனுப்புகிறாள். இதனால் காதலன் நாயகி மேல் கோபமாக இருக்கிறான்

இன்னொரு சம்பவம்: அந்த காம்ப்ளெக்சில் பணிபுரியும் ஒரு ஆண் தன் நண்பன் உதவியுடன் ஒரு உடையை திட்டம் போட்டு திருடுகிறான். அதைக் கண்டுபிடித்து அவனை பணியில் இருந்து நீக்குகிறார் நாயகி. இந்த ஒருமுறை மன்னித்து விட்டுவிடுங்கள் என அவன் கெஞ்சியும் நாயகி மனம் இரங்கவில்லை. இதனால் அவனும் அவனது நண்பனும் நாயகி மீது கோபமாக இருக்கிறார்கள்.

அதன்பின்பு, தான் பணிபுரியும் இடத்தில் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக கொடைக்கானல் செல்கிறார் நாயகி. அங்கே அடையாளம் தெரியாத 3 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். அந்த கொடுமைக்கு அவரை ஆளாக்கியவர்கள் யார்? மேலே சொன்ன சம்பவங்களில்  புதிதாய் முளைத்த அந்த எதிரிகளா? வேறு நபர்களா? இதற்குப்பின் நாயகியின் வாழ்வில் நடந்த திடுக்கிடும் சம்பவங்கள் என்ன? இதுதான் திரைக்கதை.

நாயகியாக ஆண்ட்ரியா. மனதில் தங்கிவிடும் அருமையான நடிப்பு. பணிபுரியும் இடத்தில் கம்பீரமாக நடந்து கொள்வது, பாதிக்கப்பட்ட பின் அவரது உடல் மொழியில் மாற்றம், அவமானப்படுத்தப்படும்போது அவரது உள்ளக்குமுறல்கள் எல்லாவற்றையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்  

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அழகம்பெருமாள் மாறுபட்ட நடிப்பை வழங்கி உள்ளார். போலீஸ் ஏட்டய்யாவாக வரும் இளவரசு மிரட்டி இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பெண்ணும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நாயகியின் காதலனாக ஆதவ் கண்ணதாசன் பொறுமையான நடிப்பை வழங்கியுள்ளார். 

ஆர் கெய்சர் ஆனந்த் முதல் 30 நிமிடங்கள் கதைக்கு உள்ளே போக நேரம் எடுத்துக்கொள்கிறார். அதற்குப்பின் காவல் நிலையத்துக்கு நாயகி புகார் கொடுக்கப்போகும் நிமிடத்தில் இருந்து திரைக்கதையில் வீரியம் பற்றிக்கொள்கிறது. சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான நிகழ்வுகள் கண்முன் நடக்க, பார்வையாளர்களின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் நிகழ்வுகள் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கிறது. 

வெற்றி மாறன் தான் இந்தப்படத்தை தயாரித்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் மனதில் தங்குகிறது. பின்னணி இசையில் போதுமான பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்தப்படம் 18+க்கான சென்சார் சான்றிதழ் வழங்கப் பட்டிருந்தாலும் கண்ணியக் குறைவான காட்சிகள் எதுவும் இல்லை. கதையின் கரு, காட்சியின் தீவிரம் இவற்றுக்காகத்தான் ஏ சான்றிதழ். மற்றபடி இது பெண்களுக்கான, சிறுமிகளுக்கான விழிப்புணர்வுப் படம்தான்.

ஆண்கள் என்றாலே அதிகாரம் தான், அதுவும் அதிகாரத்தில் ஆண்கள் இருந்தால்? 'மானம் என்பது  நாம போட்டிருக்கும் உடையில் இல்லை, நாம்  வாழும் வாழ்க்கையில் இருக்கிறது.', 'நம்ம ஊர்ப்பெண்கள் துப்பாக்கி முனையில் நிற்க வைத்தால் கூட நெஞ்சை நிமிர்த்திட்டு எதிர்த்து நிற்பாங்க, ஆனா துணியை அவுத்துட்டா ஒடுங்கி பயந்து ஓடிடுவாங்க' போன்ற வசனங்கள் அருமை .

பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னை கொடுமைக்கு ஆளாக்கிய ஆண்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை தத்ரூபமாக சொல்லும் படம்.  இது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com