'மாடர்ன் அரக்கன்' பகாசூரன் - விமர்சனம்!

'மாடர்ன் அரக்கன்' பகாசூரன் - விமர்சனம்!

நம் கையில் உள்ள மொபைல் போனில்  இருக்கும் செயலிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை புரிய வைக்கும் முயற்சிதான் மோகன். ஜி  இயக்கி உள்ள பகாசூரன்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூத்து கலைஞராக இருப்பவர் பீம ராசு (செல்வராகவன் ) இவரது மகள் மேற்படிப்பிற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் சேர்க்கிறாள். படிப்பை முடிக்கும் சில மாதங்கள் முன்பு எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொள்கிறார். தற்கொலைக்கான காரணம் மகள் படித்த கல்லூரி விடுதியும், நிர்வாகமும் என கண்டறிந்து, தொடர்புடையவர்களை கொலை செய்கிறார். மற்றொரு கதையில் முன்னாள்  ராணுவ நபரின்  (நட்டி ) அண்ணன் மகள் தற்கொலை செய்து கொள்கிறார். இறந்த பெண்ணின் மொபைலை பரிசோதனை செய்து பார்க்கும் போது, தற்கொலைக்கு மொபைலில் உள்ள செயலி ஒரு காரணம் என்று தெரிய வருகிறது. இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கிறது. படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார் மோகன்.ஜி. படம் சிறு பிசிறு கூட இல்லாமல் மிகுந்த பரபரப்புடன்  நகர்கிறது. படத்தில் பெண்களுக்கு நடக்கும் பாதிப்பு நம் வீட்டு பெண்களுக்கு நடப்பதை போல் உணர்கிறோம். உன் பிரச்சனையை வேறு யார் கிட்ட சொன்னாலும் உன்னை தப்பா வழி நடத்துவாங்க என்று மிரட்டப்படும் பெண்ணிடம் சொல்வது மிக யதார்த்தம். தனக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை தனது பெற்றோர்களிடம் சொல்லும்  சூழ்நிலை உருவாக வேண்டும் என்று உணர்த்தி உள்ளார் இயக்குனர்.

பாபநாசம் சிவன் வரிகளை சாம் C. S. இசையில் பார்ப்பது புது அனுபவமாக உள்ளது. செல்வ ராகவன் அப்பாவாக தவிப்பதும், கூத்து கலைஞராகவும் வாழ்ந்திருக்கிறார். நட்டியும், கே. ராஜனும் சரியான பங்களிப்பை தந்துள்ளார்கள். தாராக்சி இன்னமும் சிறக்க வாழ்த்துக்கள். எடிட்டிங் இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம். மொபைலை நமது குழந்தைகளிடம் தந்து விட்டு அவர்கள் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் கண்காணிக்கிறோமா என்ற கேள்வியை இந்த படம் முன் வைக்கிறது. மொபைல் போனில் உள்ள செயலிகள் பல பகாசூரன்கள் தான் என்கிறது பகாசூரன் திரைப்படம். பகாசூரன் -மாடர்ன் அரக்கன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com