அநீதி திரை விமர்சனம்: வசனங்களில் மாஸ் காட்டும் அநீதி!

அநீதி திரை விமர்சனம்: வசனங்களில் மாஸ் காட்டும் அநீதி!

சந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் முக்கிய கேரக்டரில் நடித்து வெளிவந்துள்ள படம் அநீதி. சிறு வயதில் ஏற்பட்ட மன பாதிப்பால், யாரை பார்த்தாலும் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருக்கிறான் ஒரு இளைஞன். இந்த இளைஞன் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் நபராக வேலை செய்கிறான். வேலை செய்யும் போதும், அவமானப்படுத்தப்படும் போதும் எழும் கொலை வெறி எண்ணத்தை கட்டுப்படுத்தி கொள்கிறான்.

பின்னர் ஒரு ஏழைப் பெண்ணை காதலிக்கிறான். அப்பெண் சந்திக்கும் பிரசனையில் மாட்டிக்கொள்கிறான்.இந்த பிரச்சனை என்ன என்பதுதான் படத்தின் களம்.

உளவியல் பிரச்சனை, வீட்டு வேலை செய்யும் இளம் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்,கார்ப்பரேட்டின் இன்னொரு முகம், காவல் துறையினர் எளிய மக்களை நடத்தும் விதம் இப்படி ஒரே படத்தில் பல விஷயங்களையும் தெளிவாக இல்லாமலும், ஆழமாக இல்லாமலும் சொல்லியிருக்கிறார் வசந்த பாலன். பல படத்தில் நாம் பார்த்த காட்சிகளை மீண்டும் இதே படத்தில் பார்ப்பது போலவே உள்ளது.வசந்த பாலனே இயக்கிய அங்காடித் தெரு, தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படங்களின் சாயல்கள் பல இடங்களில் உள்ளது.மேலும் பல படங்களில் சொல்லப்பட்ட கார்ப்பரேட் எதிர்ப்பு விஷயங்கள் பெரிய மாற்றமின்றி அப்படியே வந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனரை கொலை செய்து விட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்ற சினிமாத்தனமான தீர்வுதான் இந்த படத்திலும் இருக்கிறது.

அண்ணாச்சிகள் மீது வசந்த பாலனுக்கு இன்னமும் கோபம் தீரவில்லை போல தெரிகிறது. அங்காடித் தெரு போலவே இந்த படத்திலும் ஒரு அண்ணாச்சி மனிதாபிமானம் இல்லாதவராக இருக்கிறார். படத்தின் முடிவும் தெளிவாக இல்லை.

எந்த வித வித்தியாசமான முயற்சிகளும் இல்லாமல் மிக சாதாரணமாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் வரும் ஒரு சில வசனங்கள் மட்டுமே சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவு. பின்னணி இசையில் மட்டும் G. V பிரகாஷ் தெரிகிறார். அர்ஜுன் தாஸ் நடிப்பு நன்றாக இருந்தாலும் இவரது குரலே சில இடங்களில் மைனஸாக அமைந்து விடுகிறது. துஷாரா விஜயன் ஒரு வேலைக்காரப்பெண்ணாகவும், காதலிக்கும் போது நாம் அன்றாடம் பார்க்கும் பெண் போலவும் நடித்துள்ளார். மிகவும் சாதாரணமாக உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதையில் புதுமையான அம்சங்கள் எதுவும் இல்லாமல் வந்துள்ளது அநீதி. இப்படம் வசந்த பாலன் இயக்கத்தில் வெளி வந்துள்ள படங்களில் மற்றொன்று மட்டுமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com