கிரான்மா - ஹாரர், சஸ்பென்ஸ் திரில்லர் படம்!
இது ஒரு ஹாரர், சஸ்பென்ஸ் திரில்லர் படம். குறைவான கேரக்டர்களைச் சுற்றி இருக்கும் படம் இது. கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் 'கிரான்மா' அதாவது பாட்டி.
மிக அழகான, பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீடு. அதுதான் வக்கீல் பிரியாவாக நடித்திருக்கும் விமலா ராமனின் வீடு. இரண்டாம் வகுப்பு படிக்கும், பிடிவாத குணம் கொண்ட இவருடைய பெண் நிக்கியின் கேரக்டரில் தயாரிப்பாளர் ஜெயராஜின் மகள் பௌர்ணமி ராஜ் நடித்திருக்கிறாள். அவளுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியையாக, ‘திரிஷா’ என்ற கேரக்டரில் சோனியா அகர்வால் வருகிறார். வீட்டோடு தங்கி, பிடிவாத குணம் கொண்ட குழந்தையை நல்வழிப்படுத்துவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வேலைக்கு வருகிறார்.

வக்கீல் பிரியா, தொழில் பிஸியாக இருப்பதால் மகளை சரிவர கவனிக்க முடியவில்லை. சிறுமி நிக்கி மனதில் இறந்து போன அவளது கிரான்மா இருப்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது ஆவியாக வந்து நிக்கியுடன் உரையாடுகிறார். அதைப் பார்த்த பிறகு பீதியில் வேலையை விட்டுப் விலக முடிவெடுக்கிறார் சோனியா அகர்வால். ஆனால் கிரான்மாவின் ஆவி சோனியா அகர்வாலை சந்தித்து ஏதோ சொல்கிறது. வக்கீல் பிரியாவிற்கு
அடுத்தடுத்து வரும் பிரச்சினைகள், சோதனைகள் என்று விறுவிறுப்பாகப் போகிறது படம்.
சிஜின்லால் எஸ். எஸ். இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் யஸ்வந்த் பாலாஜி. இசை சங்கர் ஷர்மா.
வில்லன் ஹேமாத்மேனன், தாடி வைத்த உயரமான பர்சனாலிட்டியானவர். மலையாளத்தில் எட்டுப் படங்களில் ஹீரோவாக நடித்தவராம் இவர். இப்போதும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். மிகச் சிறப்பாக வில்லத்தனத்தை காட்டி நடித்திருக்கிறார் ஹேமந்த் மேனன் என்கின்றனர் படக் குழுவினர்.