குழந்தைகளின் வாழ்வியலை விளக்கும்: சிறுவன் சாமுவேல்!

குழந்தைகளின் வாழ்வியலை விளக்கும்: சிறுவன் சாமுவேல்!

தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான சினிமா என்பது அரிதிலும் அரிது. இந்த அரிய முயற்சியில் ஒன்றாக வந்துள்ளது சிறுவன் சாமுவேல் திரைப்படம். இந்த திரைப்படம் குழந்தைகளுக்கான சர்வதேச திரைப்பட விழா உட்பட பல்வேறு திரைப்பட விழாக் களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

எந்த ஒரு தொழில்முறை நடிகர்களையும் நடிக்க வைக்காமல் கதைக்களமான கன்னியாகுமரி மாவட்ட மக்களை  மட்டுமே நடிக்க வைத்து சிறந்த நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குனர் சாது பெர்லிங்டன். கன்ட்ரிசைட் பிலிம் ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது.

கிரிக்கெட் விளையாடுவதில் தீவிர ஆர்வமுள்ளவன் சிறுவன் சாமுவேல். இவன் சிறுவனாக இருப்பதால் பள்ளி கிரிக்கெட் குழுவில் சேர்த்து கொள்ள மறுக்கிறார் பள்ளி விளையாட்டு ஆசிரியர். ஊரில் உள்ள பல விளையாட்டு டீமும் சாமுவேலை சேர்த்து கொள்ள மறுக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் படங்கள் ஒட்டப்பட்ட அட்டைகளை சேகரித்தால் சச்சின் கையெழுத்து போட்ட கிரிக்கெட் பேட் கிடைக்கும் என்பதால் அட்டைகளை சேகரிக்கிறான். இதில் தன் நண்பனையும் சேர்த்து கொள்கிறான். சாமுவேல் செய்யும் சிறு தவறால், இவன் நண்பன் ஒரு திருட்டு பழியில் மாட்டி கொள்கிறான். நண்பனை பள்ளியிலிருந்து அவன் அப்பா நிறுத்தி விடுகிறார். தனது தவறுகளுக்கு வருந்துகிறான் சாமுவேல். அட்டைகளை நெருப்பில் போட்டு பொசுக்கி விடுகிறார் சாமுவேலின் அப்பா. எந்த வித ட்விஸ்ட்களும் இல்லாமல் இயல்பாக படத்தை முடித்துள்ளார் டைரக்டர்.

யதார்த்தம் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இந்த படம். எந்த வித பூச்சுகளும் படத்தில் இல்லை. கன்னியாகுமரி மாவட்ட மொழியும், மக்களும் மிகவும் யதார்த்தமாக இருக்கிறார்கள். சாமுவேலாக நடிக்கும் அஜிதன் தவசி முத்துவும், நண்பனாக நடிக்கும் விஷ்ணுவும் நாம் கிராமத்தில் பார்க்கும் சிறுவர்களை கண் முன் நிறுத்துகிறார்கள். அஜிதன் அமைதியாகவும், துள்ளல் நடிப்பாக ராஜேஷும் நடித்துள்ளார்கள்.ஆசிரியையாக நடிப்பவர், அப்பா அம்மாவாக நடித்துள்ளவர்கள், பள்ளி ஆசிரியர் அனைவருமே சரியான தேர்வு. சாம் எட்வின் மனோகர் மற்றும் ஸ்டான்லியின் இசை ஒரு மென்மையான வருடல் போல உள்ளது. சிவானந்த் காந்தியின் ஒளிப் பதிவு கன்னியாகுமரி மாவட்ட மக்களின் உணர்வையும், அழகையும் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார். மாற்று சினிமாவை விரும்புபவர்களும்,நல்ல படைப்புகளை ரசிப்பவர்களுக்கும் இந்த சிறுவன் சாமுவேல் சரியான தேர்வாக இருக்கும். சிறுவன் சாமுவேல் -மாற்று சினிமாவின் முதல் படி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com