'கண்ணை நம்பாதே' திரைப்பட விமர்சனம்: இது ஒரு தரமான திரில்லர்!
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி, பிரசன்னா, ஸ்ரீ காந்த், ஆத்மிகா, பூமிகா நடித்துள்ள படம் கண்ணை நம்பாதே. வி என். ரஞ்சித் குமார் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் படத்தை வெளியிட்டுள்ளது.
பொய் சொன்னதற்காக தான் வசிக்கும் வீட்டிலிருந்து துரத்தப்படும் அருண் (உதயநிதி) வேறு வழியில்லாமல் சோமு(பிரசன்னா) என்பவருடன் தங்குகிறார். அன்று இரவு கார் ஓட்ட சிரமப்படும் ஒரு பெண்ணிற்கு (பூமிகா ) அந்த பெண்ணின் விருப்பதின் பெயரில் வீட்டிற்கு கொண்டு விடுகிறார். அந்த பெண் வற்புறுத்துவதால் காரை தனது வீட்டிற்கு கொண்டு செல்கிறார். மறு நாள் காலை அந்த காரின் டிக்கியில் அந்த பெண் பிணமாக இருப்பதை பார்க்கிறார். அருணும் பிரசன்னாவும் பிணத்தை எடுத்து சென்று பாலத்தில் இருந்து கீழே தள்ளி விட்டு தற்கொலை போல காட்ட முயற்சி செய்கிறார்கள். நடுவில் ஒரு நபர் மீது காரை மோத அந்த நபரும் இறந்து விடுகிறார். ஒரு பெண் போன் செய்து செய்த கொலைக்கு சாட்சி உள்ளது. பணம் தர வேண்டும் என்று மிரட்டுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் சோமு தான் என்று அருண் புரிந்து கொள்கிறார். இறந்து போனதாக சொல்லும் பெண் உயிருடன் இருக்கிறார். நடக்கும் சம்பவங்களுக்கு காரணம் ஒரு புள்ளியில் இருக்கிறது. படம் ஆரம்பித்து சில காட்சிகளுக்கு பிறகு கதை வேகமாக நகர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் சிறு ட்விஸ்ட் வைத்துளார் இயக்குநர். லேசாக கவனம் சிதறினாலும் கதை புரியாமல் போகலாம். ஆனால் கதை செல்லும் போக்கில் நமது முழு கவனமும் திரையின் மீது தான் இருக்கும். ஒரு பிணம் அதனை சுற்றி கதை என்ற தளத்தில் சிறந்த திரில்லர் படம் ஒன்றை தந்துள்ளார் டைரக்டர். இதே போல இன்னமும் சில திரில்லர் படங்களை தந்தால் மாறனை தென்னகத்தின் ஹிச்காக் என்று சொல்லலாம்.
ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவும் சித்துவின் இசையும் ஒரு அழகான திரில்லர் ஓவியத்தை வரைந்துள்ளது. நடிப்பில் அதிகம் ஈர்ப்பது பிரசன்னாதான். நட்பும், துரோகமும் சேர்ந்த கலவையாக பொருந்துகிறார். உதயநிதி கதையின் நாயகனாக உணர்ந்து அழகாக நடித்துள்ளார். ஆத்மிகா, பூமிகா, ஸ்ரீகாந்த் மூவரும் மிக சரியான தேர்வு. நாம் அதிகம் யோசிக்காத, நம்மில் பலருக்கு தெரியாத மெடிக்கல் கிரைம் என்ற விஷயம் படத்தில் பேசப்பட் டுள்ளது. தமிழ் சினிமாவில் மிக முக்கிய மான திரில்லர் படமாக கண்ணை நம்பாதே இருக்கும். கண்ணை நம்பாதே - நம்பி பார்க்கலாம்.