வெளியே கோபம், உள்ளே பேரன்பு: காந்தாரா!

திரை விமர்சனம்
காந்தாரா
காந்தாரா

கன்னடத்தில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ள படம் காந்தாரா (அமானுஷ்ய காடு ). இந்த படத்தின் மிக பெரிய வரவேற்பை பார்த்த பிறகு இதை தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

1847 ஆம் வருடத்தில் கர்நாடகத்தின் ஒரு பகுதியை ஆட்சிசெய்யும் மன்னர் நிம்மதியை தேடி காடுகளில் அலைகிறார். காட்டில் ஒரு தெய்வத்தின் சிலையை கண்டெடுக்கிறார். தான் தேடும் நிம்மதி அந்த தெய்வத்தை பார்த்தவுடன் ராஜாவுக்கு கிடைக்கிறது.

ராஜா அந்த சிலையை எடுக்க முயற்சிக் கையில் அங்கே உள்ள மக்களில் ஒருவர் மீது தெய்வம் இறங்குகிறது. "நீ கேட்கும் நிம்மதியை நான் உனக்கு தருகிறேன். நீ இந்த மக்களுக்கு இவர்கள் வசிக்கும் இடத்தை தந்துவிடு" என்கிறது.

மன்னரும் மகிழ்வுடன் அம்மக்களுக்கு அந்நிலத்தை தந்து விட்டு தெய்வத்தை தனது அரண்மனையில் வைத்து நிம்மதியாக வாழ்கிறார்.

சுமார் 130 ஆண்டுகளுக்கு பிறகு 1970 ல் மன்னரின் வம்சத்தை சேர்ந்த ஒருவர் நிலம் தங்களுக்குதான் சொந்தம் என நீதிமன்றம் செல்கிறார். தெய்வம் வேண்டாம் என்கிறது. மன்னர் பரம்பரை நபர் தெய்வத்தின் வாக்கை மதிக்கவில்லை.ரத்தம் கக்கி இறக்கிறார்.

1990 ல் மன்னர் வகையில் வரும் ஓருவர் அந்த காட்டு மக்களை கைக்குள் வைத்து கொண்டு நல்லவன் போல் நடித்து நிலத்தை அபகரிக்க முயல்கிறார். தன்னை மிகவும் நம்பும் காடு பெட்டு சிவாவை (ரிஷப் ஷெட்டி ) வைத்து காய்களை நகர்த்துகிறார். இறுதியில் தெய்வ வாக்கு எப்படி ஜெயித்தது என்பதை கதையில் சொல்லியிருகிறார்.

ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாகவும் நடித்து உள்ளார். காட்டு மனிதர்களுக்கே உரிய அடங்காத திமிரும், முதலாளி என தேவேந்திரனிடம் (அச்சுத் குமார் ) உருகுவதும் என மிக சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

கிளைமாக்ஸில் ரிஷப்பின் நடிப்பு பல ஆண்டுகள் பேசப்படும். அதிகாரியாக வரும் கிஷோர், பெரிய மனிதர் அச்சுத் குமார், ஹீரோயின் சப்தமி கௌடா என அனைவரும் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

சஸ்பென்ஸ், ஆக்ஷன் என பரபரப்புடன் செல்லும் கதையில் கர்நாடக நாட்டார் வாழ்வியல் தெய்வங்களின் அடையாளங்களையும் சொல்லியிருகிறார். கதையில் வரும் கிராமத்து தெய்வம் முதலில் நம்மை பயமுறுத்துகிறது. பின்பு வரும் காட்சிகளில் நம்மில் ஒருவராக உணர வைக்கிறது.

அரவிந்த் எஸ். காஷ்யப்பின் ஒளிப்பதிவில் செய்துள்ள லைட்டிங் நம்மை காட்டிற்குள் அழைத்து செல்கிறது. அஜனீஷ் லோக்நாத்தின் இசை பயமுறுத்தவும், அன்பை உணரவும் பாலமாக இருக்கிறது.

நமது நாட்டில் உருவான அனைத்து நாட்டுப்புற தெய்வ வழிபாடுகளும் இயற்கையை நமக்கு உணர வைப்பதற்குதான் என காந்தாரா கொஞ்சம் சத்தமாக சொல்லியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com