காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்!

காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்!

முத்தையா இயக்கத்தில், G. V. பிரகாஷ் இசையில் ஆர்யா, சித்தி இத்தானி, பிரபு, பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்.   தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள  பெண்ணான செல்வியை (சித்தி இத்தானி ) உறவினர்களில் சிலர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள்.இதை மறுக்கும் செல்வி மதுரை சிறையில் இருக்கும் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கத்தை பார்க்க செல்கிறார். பல சிறைகளில் பல அடிதடி செயல்களில் ஈடுபட்டதால் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கிறார் காதர் பாஷா. சிறையில் வில்லன்கள் துரத்தி வர காதரை பார்க்காமல் செல்கிறார் செல்வி. காதர் ஜாமீன் பெற்று செல்வியின் சொந்த ஊருக்கே சென்று செல்வியை பார்க்கிறார். செல்வி தன் முறைப்பெண் என்று தெரிந்து காதலிக்க ஆரம்பிக் கிறார்.அதன் பிறகு வரும் பிளாஷ் பேக், கதைக்குள் இன்னொரு கதை என படம் செல்கிறது. ஐந்து நிமிடம் டயலாக் வந்தால் பத்து நிமிடம் சண்டைகாட்சிகள் வருகிறது. பல காட்சிகளில் அடிதடி, அருவா வெட்டுதான்.திரைக்கதையிலும் புதுமை இல்லை. நேரடியாக இந்த படம் ஜாதியை பேசவில்லை. ஆனால் ஜாதிய குறியீடுகளை வைத்துள்ளது "அறுத்து கட்றது நமக்கு     ஒன்னும் புதுசு இல்லை" என்பது போன்ற வசனங்களும்,குலதெய்வ வழிபாடு தெய்வங்களும் ஜாதியை அடையாள படுத்துகின்றன. பெண் விடுதலை பற்றி பேசும் இந்த கால கட்டத்திலும் பெண் விவாகரத்து கேட்டால் ஊர் பஞ்சாயத்தில் வைத்து முடிவு செய்கிறார்கள்.படத்தில் பின் பாதியில் வரும் மத நல்லிணக்க வசனங்கள் மட்டும் ஆறுதல். நரேன், கே. ஜி. எப். அவினாஷ், மது சூதன ராவ் என பல நடிகர்கள் இருந்தும் சரியாக பயன் படுத்தவில்லை. ஆர்யா கதைக்கு தேவையான நடிப்பை தந்துள்ளார். பிரபுவின் நடிப்பு ஒரு பக்குவமான தலைவரின் நடிப்பை போன்று உள்ளது. இன்றைய தமிழ் நாட்டில் இளம் ஆண்களும், பெண்களும் ஆரோக்கியமாக பழகுகிறார்கள். பலர் ஜாதி, மதம்  தாண்டி காதலித்து திருமணம்   செய்து கொள்கிறார்கள்.இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒரே ஜாதி, உறவுக்குள் திருமணம், முறை மாமன் என்று படம் எடுப்பார்களோ தெரியவில்லை? பழைய கதையில் புதுமுகங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com