கட்டா குஸ்தி - ஆணாதிக்க சிந்தனைக்கு ஒரு சவுக்கடி!

திரை விமர்சனம் !
கட்டா  குஸ்தி
கட்டா குஸ்தி

ஆஹா! இப்படி ஒரு படத்தை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.ஒரு நல்ல குடும்ப கதைக்குள் நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்து கட்டா குஸ்தி என்ற நல்ல படத்தை தந்திருக்கிறார் டைரக்டர் செல்லா அய்யாவு.

ரவி தேஜா தயாரிப்பில் விஷ்ணு விஷால், பவித்ர லக்ஷ்மி நடித்துள்ளார்கள். வேலைக்கு எதுவும் செல்லாமல் பொள்ளாச்சியில் ஊர் சுற்றும் படிக்காத இளைஞன் வீரா. (விஷ்ணு விஷால் ) அருகிலுள்ள பாலக்காட்டில் பட்டதாரி பெண்ணான கீர்த்தி (பவித்ர லக்ஷ்மி )குஸ்தி வீரங்கனையாக இருக்கிறார். இந்த இருவரும் உறவினர்களின் வற்புறுத்துதலால் தங்களை பற்றி உண்மைகளை மறைத்து திருமணம் செய்து கொள்கிறார்.

vishnu vishal
vishnu vishal

அமைதியாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் சூறாவளி வீசுகிறது.வீராவால் உள்ளூர் பிரச்சனையில் பாதிக்கப்பட்டும் தொழிலதிபர் ஒருவர் தனது அடியாட்களை விட்டு வீராவை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

இந்த அடியாட்களை வீராவின் மனைவி கீர்த்தி பொது வெளியில் தனக்கு தெரிந்த குஸ்தியை பயன்படுத்தி அடித்து துவம்சம் செய்கிறார். அப்போதுதான் தனது மனைவி ஒரு மிக பெரிய குஸ்தி சாம்பியன் என்று தெரிய வருகிறது. ஊர் வீராவை கிண்டல் செய்கிறது. இதனால் வீராவுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. மாமா வின் தூண்டுதலால் விவாகரத்து வரை செல்கிறான்.

இது போதாது என்று தனது மனைவியுடன் குஸ்தி சண்டை போட்டு ஜெயிப்பேன் என்று முட்டாள் தனமாக முடிவு எடுக்கிறான். குஸ்தி கிளப் இந்த சண்டையை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறது.

கட்டாந்தரையில் நின்று குஸ்தி போடும் விளையாட்டை இரண்டு வாரங்களில் அரை யும் குறையுமாக கற்றுக்கொள்கிறான்.பின்பு நடக்கும் காட்சிகளை காமெடியுடனும், ஆணாதிக்க சிந்தனைக்கு ஒரு சவுக்கடியாகவும் சொல்லியிருகிறார் டைரக்டர்.

பலர் தங்கள் குறைகளை மறைத்து வாழ்வார்கள். ஆனால் நமது நாட்டில் திருமணமான பெண்கள் திறமைகளையும் கூட மறைத்து கணவர் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கருணாஸ் மனைவியாக நடிப்பவர் மூலமாக சொல்லியிருகிறார் இயக்குனர். பெண்கள் குஸ்தி என்ற ஒன் லைனை யோசித்தற்காகவே டைரக்டர்க்கு ஒரு சபாஷ் போடலாம்.

குஸ்தி சாம்பியனாக வரும் போது ஆக்ஷனையும், கணவருக்கு பயப்படும் போது பவ்யத்தையும் நடிப்பில் தருகிறார் பவித்ர லக்ஷ்மி. விஷ்ணு விஷால் ஆணாதிக்க கணவராக சரியான நடிப்பை தந்துள்ளார். கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கிங்ஸ்லி இந்த நால்வரும் காமெடி திருவிழாவையே நடத்தி உள்ளார்கள். "விளையாட்டு போட்டிகளில் மத்த நாட்டு பொண்ணுங்க, இன்னொரு நாட்டுடன் மோதி ஜெயிக்கணும், ஆனா நம்ம நாட்டுல பொண்ணுங்க முதலில் வீட்டை ஜெயிக்கனும்," "உன் பொண்டாட்டிகிட்ட சண்டை போடணும்னு நினச்சப்பவே நீ தோத்துட்ட போன்ற வசனங்கள் சிறப்பு. நம் நாட்டில் மட்டும் தான் பெண்களிடம் கல்யாணத்துக்கு அப்புறம் நடிப்பையா, படிப்பை தொடர்வாயா, வேலைக்கு போவியா போன்ற கேள்விகளை கேட்கிறோம். இந்த படம் இந்த கேள்விகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஜஸ்டின் பிரபாகரின் இசை படத்திற்கு கூடுதல் பலம். குஸ்தி என்பதை இயக்குனர் ஒரு அடையாளமாக பயன்படுத்தி உள்ளார். கட்டா குஸ்தி - ஆணாதிக்க சிந்தனைக்கு ஒரு சவுக்கடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com