கொன்றால் பாவம் : திரைப்பட விமர்சனம்!
ஆசை வெட்கமறியாது, ஆசை பல பாவங்களை செய்ய தூண்டுகிறது என்ற மைய்ய கருத்தை சொல்லும் படமாக வந்துள்ளது கொன்றால் பாவம் திரைப்படம். நாம் அனுபவிக்கும், அனுபவிக்க போகும் துன்பங்களுக்கு மூல காரணம் ஆசையே என்று புத்தன் சொன்ன சொல்லை ஒன் லைனாக வைத்து ஒரு நல்ல திரில்லர் படத்தை தந்துள்ளார் தயாள் பத்மனாபன்.
படத்தை விமர்சனம் செய்வதற்கு முன் டைரக்டரை பற்றி சில வரிகள். இயக்குனர் தயாள் பத்மனாபன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். கர்நாடகவில் செட்டிலாகி, கன்னட மொழியில் பதினெட்டு படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கிய தமிழர்.
அது 1981 ஆம் ஆண்டு. தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பகுதியில் ஒரு சிறு கிராமம்.குடும்ப தலைவர் சார்லி, மனைவி ஈஸ்வரி ராவ், மகள் வரலக்ஷ்மி மூவரும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். வறுமை காரணமாக வரலக்ஷ்மிக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு அந்த வீட்டிற்கு ஒரு இளைஞன் (சந்தோஷ் பிரதாப் ) வருகிறான். தான் ஊர் ஊராக செல்லும் வழிப்போக்கன் என்றும், இன்று ஒரு நாள் இங்கே தங்கி செல்கிறேன் என்று சொல்கிறான். குடும்பதினரும் ஒப்பு கொள்கிறார்கள். அந்த இளைஞனிடம் நன்றாக நட்பு பாராட்டுகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் அவனிடம் இருக்கும் நகைகள், பணத்தை பார்த்துவிட்டு அவனை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். அம்மாவும், மகளும் உணவில் விஷம் தந்து தீர்த்து கட்டும் முயற்சியில் தோல்வி அடைய, மகள் அந்த இளைஞன் தூங்கிய பின் கழுத்தை அறுத்து கொல்ல ஐடியா செய்கிறார். இதே நேரத்தில் சாராயக் கடையில் இருக்கும் குடும்பதலைவருக்கு தன் வீட்டிற்கு வழிப்போக்கனாக வந்திருக்கும் இளைஞன் வேறு யாருமில்லை. சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தனது மகன்தான் என்ற செய்தி தெரிய வருகிறது. மகளும், மனைவியும் மகனை கொலை செய்து விட கூடாது என்ற பதைபதைப்புடன் வீட்டிற்கு ஓடி வருகிறார். யூகிக்க முடியாத ஒரு கிளைமாக்ஸ் காட்சியை படத்தில் வைத்துள்ளார் டைரக்டர்.
சைக்கோ திரில்லர், க்ரைம் திரில்லர் என பலவகை திரில்லர் வகை படங்கள் வந்திருந்தாலும் கொன்றால் பாவம் புதுவகை திரில்லர் படமாக உள்ளது. படத்தின் முதல் பாதி மெதுவாக கடந்தாலும், இரண்டாம் பாதி மிகுந்த பரபரப்புடன் செல்கிறது.எடுத்து கொண்ட கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே இயக்குனர் வைத்துள்ளார். 80 களில் ஒரு கிராமத்து வீட்டில் இருக்கும் லைட்டிங்கை சரியாக காட்சிகளில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். தேன் மிட்டாய், சாராயக்கடை, சுவர் விளம்பரம் என 1980 களின் கால கட்டத்தை படத்தில் காட்சிகளில் கொண்டு வர ஆர்ட் டீம் உழைத்திருக்கிறது. இசையமைப்பாளர் சாம்மின் இசை திரில்லர் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒரு முதிர் கன்னியின் கோபத்தையும், ஏக்கத்தையும் மிக பிரமாதமாக நடித்து காட்டியுள்ளார் வரலக்ஷ்மி. இவர் சொல்லும் வசனங்கள் மிக கூர்மை. ஒரு தாய்மைக்கே உண்டான அன்பையும், பரிதவிப்பையும் அழகாக வெளிபடுத்தி உள்ளார் ஈஸ்வரி ராவ். ஒரு பொறுப்பற்ற தந்தையை கண் முன் நிறுத்துகிறார் சார்லி. மிடுக்கான, அலட்டல் இல்லாத நடிப்பில் பொருந்தி போகிறார் சந்தோஷ் பிரதீப்.
படத்தில் லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது.இருந்தாலும் படத்தின் நகர்வில் நாம் மறந்து விடுகிறோம். பேராசை பெரு நஷ்டம் மட்டுமல்ல பெரிய அழிவு என்பதை காட்டி உள்ளது கொன்றால் பாவம். கொன்றால் பாவம் -வாழ்க்கை பாடம்