KOOMAN (2022) - மலையாளம் - திரை விமர்சனம்

'kooman'
'kooman'

ஜீத்து ஜோசப் ஃபிலிம் என டைட்டிலில் அவர் பெயர் வந்தாலே கேரள திரையரங்குகள் கைதட்டல்களால் அதிரும். இவரது இயக்கத்தில், 2013ல் ரிலீஸ் ஆன மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' மலையாளப்பட உலகையே புரட்டிப்போட்டது. இந்தியாவிலேயே அதிக மொழிகளில் ரீமேக் ஆன படம் என்ற பெருமையையும் பெற்றது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் 'கூமன்'.

கேரளாவில் நடந்த விசித்திரமான சில கொலை  வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு 'கூமன்' திரைக்கதை உருவாக்கப்பட்டது. முதல் பாதி ஒரு கதை. பின் பாதி முற்றிலும் வேறு ஒரு கதை. ஆனால் இரு கதைகளையும் ஒரே நேர்கோட்டில் இணைத்தது ஒரு சாமார்த்தியமே!

நாயகன் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள். ஆனால் அதிக புத்திக்கூர்மை உள்ளவர். எந்த ஒரு கேஸில் அவர் ஆஜர் ஆனாலும் மிக நுணுக்கமாக துப்பு துலக்குபவர் . மேலதிகாரிகளிடம் ஒரு பக்கம் பாராட்டு கிடைத்தாலும் சக போலீஸ் கான்ஸ்டபிள்கள் அவரை பொறமையாகப் பார்ப்பார்கள் . புதிதாக வந்த போலீஸ் ஆஃபீசர் நாயகனை  சிலர் முன் மட்டம் தட்டுகிறார்

இதனால் கடுப்பான நாயகன் அவரை அலைக்கழிக்க, மேலிடத்தில் மாட்டிவிட ஒரு திட்டம் தீட்டுகிறார். மிக சாமார்த்தியமான ஒரு திருடன் உதவியோடு ஆதாரங்கள் இல்லாமல் திருடுவது எப்படி? என சகல வித்தைகளும் கற்றுக்கொண்டு இரவில் நைட் டியூட்டி ஆக திருடன் வேலை பார்க்கிறார். பகலில் போலீஸ் ட்யூட்டி பார்க்கிறார்.

ஊர் முழுக்க அடிக்கடி திருட்டு நடப்பதால் போலீஸ்  ஆஃபீசருக்கு கெட்ட பேர். இதைக்கண்டு நாயகனுக்கு அளவில்லாத ஆனந்தம். இவர் தன் திருட்டு வேலைகளைத் தொடர்கையில் ஒரு சிக்கல், ஒரு வீட்டில் இவர் திருடும்போது அந்த வீட்டு ஓனர் நாயகனைப் பார்த்து விடுகிறார்.

தன்னை அடையாளம் கண்டு கொண்டு சாட்சி சொன்னால் நாம் மாட்டிக்கொள்வோம் என பயந்த நாயகன் பக்கத்து ஊரில் ஒரு லாட்ஜில் ஒரு நாள் தங்கி விட்டு பின் சொந்த ஊருக்கு வருகிறார். வந்தால் அதிர்ச்சி. இவரைத்திருடனாகப் பார்த்த சாட்சியான ஆள் கொலை செய்யப்ப்ட்டு இருக்கிறார்.

உடனே நாயகன் இந்த கேசை  துப்பு துலக்க களம் இறங்குகிறார். விசாரனையில் கடந்த இரு வருடங்களாக தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களில்  மாதம் ஒரு கொலை வீதம் 24 கொலைகள் நடந்தது தெரிய வருகிறது. எல்லா கொலைகளும் தற்கொலை போல ஜோடிக்கப்ப்ட்டுஇருக்கிறது. கொலையாளி யார்? என்ன காரணத்துக்காக இந்தக்கொலைகள்? என்பதை நாயகன் எப்படி  துப்பறிகிறார் என்பதே பின் பாதி திரைக்கதை.  

நாயகனாக அஷிஃப் அலி பிரமாதமாக நடித்திருக்கிறார். தன்னை அவமானப்படுத்தியவர்கள் தானாக வந்து  சிக்கும்போது அவர் முக்த்தில் காட்டும் க்ரூரம் ஒரு   தேர்ந்த சைக்கோவை கண் முன் நிறுத்துகிறது. 

உயர் அதிகாரியாக வந்து ரிட்டயர்ட் ஆகும் ஆஃபீசராக  ரஞ்சி பணிக்கர் கம்பீரமான நடிப்பு அவரது குரல் பெரிய  பிளஸ். ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் நாயகனை பளார்  என அடிக்கும் காட்சியில் அருமையான நடிப்பு. 

சாமார்த்தியமான திருடனாக வரும் இடுக்கி ஜாஃபர் கேரக்டர் டிசைன் அற்புதம். அவரது  கம்பீரமான குரலில் வாய்ஸ் ஓவரில் சாமார்த்தியமாகத் திருடுவது எப்படி? கோர்ஸ் கலக்கல் ரகம், லாக்கப்பில் அவ்ளோ அடி வாங்கியும் நாயகனை காட்டிக் கொடுக்காமல்  நாயகனிடம் தனிமையில் நான் திருடன் தான் ஆனால் காட்டிக்கொடுக்கும் துரோகி அல்ல என சொல்லும்போது என்ன மனுசன்யா இவரு என  ஆச்சரியபப்ட வைக்கிறார்.

சைக்யாட்ரிஸ்ட்டாக வரும் அனூப் மேனன் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கச்சிதமான பங்களிப்பு. 

லட்சுமியாக வரும்  ஹன்னா ரெஜி கோஷி  நாயகனுக்கு ஜோடி போல படம் முழுதும் அங்காங்கே தலை காட்டி  க்ளைமாக்சில் மிரட்டுகிறார்.

தமிழகத்தில் கதை நகரும்போது தமிழக போலீஸ்  ஆஃபீசராக வரும் கைதி புகழ் ஜார்ஜ் மரியம்  நிறைவான  நடிப்பு என்றால் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும்  ரமேஷ்  திலக் கனகச்சிதம். 

சதீஷ் க்ரூப் தனது ஒளிப்பதிவால் படத்துக்கு உயிர் ஊட்டுகிறார். விஷ்ணு ஷியாம் பின்னணி இசையில் மிரட்டுகிறார்.

வி எஸ் வினாயக் எடிட்டிங்கில் 153 நிமிடங்கள் படம் ஓடுகிறது. அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற இந்தப்படம் இப்போது அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com