லவ் டுடே : எச்சரிக்கை மணி !

திரை விமர்சனம் !
லவ் டுடே
லவ் டுடே

முன்பெல்லாம் ஒருவரின் குணத்தை பற்றி சொல்வதற்கு 'உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்' என்பார்கள். ஆனால் தற்சமயத்தில் உன் மொபைல் போனில் நீ வைத்திருக்கும் விஷயங்களை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பதுதான் சரியாக இருக்கும்.

நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஸ்மார்ட் போனின் இன்னொரு ஸ்மார்ட் இல்லாத கொடூர முகம்தான் லவ் டுடே படத்தின் கதை.டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

லவ் டுடே
லவ் டுடே

சமூகத்தில் வெவ்வேறு படிநிலைகளில் உள்ள உத்தமன் பிரதீப்பும் (பிரதீப் ரங்கநாதன் ) நிகிதாவும் (இவானா) காதலிக்கிறார்கள். நிகிதாவின் அப்பா வேணு சாஸ்திரி (சத்யராஜ் ) நான் உங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டுமானால் நீங்கள் இருவரும் பரஸ்பரம் உங்கள் செல்போனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்.

காதலர்களும் வேறு வழியில்லாமல் தங்களின் போனை மாற்றி கொள்கிறார்கள். வீட்டிற்கு செல்லும் பிரதீப் ஆர்வத்தால் நிகிதாவின் கைபேசியை ஓபன் செய்து தகவல்களை பார்க்கிறார்.

ட்விட்டர், பல்வேறு ஆண் நண்பர்கள், பழைய காதல், டேட்டிங் என நிகிதாவின் இன்னொரு பக்கத்தை தெரிந்து கொள்கிறார். இதே போல நிகியும் பிரதீப்பின் கை பேசியை திறந்து பார்க்கிறார். உள்ளே ஒரு ஆபாச கூடாரமே இருக்கிறது. பிரதீப்பின் நண்பர்கள் தனக்கும் தன் தங்கைக்கும் ஆபாச செய்திகள் அனுப்பியது தெரிய வருகிறது. காதலர்களுக்குள் சண்டை முற்றுகிறது.

படத்தின் முடிவை பக்குவமான பார்வையிலும் சில உரையாடல்களுடனும் சொல்லியிருகிறார் டைரக்டர். நமது வாழக்கை துணையிடம் நமது செல் போனை மாற்றிகொண்டால் என்னவாகும் என்று சிந்திக்க வைப்பதில்தான் படத்தின் வெற்றி உள்ளது. முதலில் பிரதீப் ரங்காநதான் ஹீரோவா? என்று யோசித்தால் பின்பு இவரை விட வேறு யாரும் இந்த ரோலுக்கு சரியாக இருக்கமாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு யதார்த்தமான நடிப்பை தந்துள்ளார்.

இவானா பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் போது நம் வீட்டு பெண் தவிப்பதை போன்று உணர்கிறோம்.சத்யராஜ் சைலன்ட்டாக வில்லத்தனம் செய்கிறார். நகைச்சுவை இல்லாத சீரியஸ் யோகிபாபுவை இப்படத்தில் பார்க்கலாம். யுவனின் இசை கதைக்கு பரபரப்பை தருகிறது.

அறிவியலின் சிறந்த கண்டுபிடிப்பான கை பேசி நம் இளையதலைமுறையினரில் சிலருக்கு வக்கிரத்தின் வடிகாலாக மாறிவிட்டது என்பதை லவ் டுடே சொல்கிறது.லவ் டுடே - எச்சரிக்கை மணி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com