ஒரு சபரிமலை பயணம் - 'மாளிகப்புரம்'!

ஒரு சபரிமலை பயணம் - 'மாளிகப்புரம்'!

கடவுளுக்கும் ஒரு சிறுமி பக்தைக்கும் இடையே உள்ள ஒரு அன்பை அழகாக சொல்லியிருக்கும் படம் 'மாளிகப்புரம்' திரைப்படம். அபிஷேக் பிள்ளை எழுத்தில் விஷ்ணு சசி சங்கர் இயக்கி உள்ள படம் இது.

கேரளாவில் உள்ள ஒரு சிறிய ஊரில் அப்பா, அம்மா, பாட்டி என உறவினர்கள் சூழ மகிழ்வுடன் வாழ்ந்து வரும் சிறுமி கல்யாணி (தேவாநந்தா) பாட்டி சொன்ன சுவாமி ஐயப்பன் கதைகளை கேட்டு வளரும் கல்யாணி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க ஆர்வத்தை வளர்த்து வருகிறாள். சிறுமியின் தந்தையும் (ஷாஷு க்ரூப் ) சபரிமலை அழைத்து செல்வதாக சொல்லி மலைக்கு போவதற்காக மாலை போட்டு விடுகிறார்.

இந்த சூழ்நிலையில் அப்பா கடன் தந்தவர் தரும் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கிறார். இறந்த தனது அப்பா ஐயப்பனிடம் சென்று விட்டதாக கருதி சாமியை பார்க்க தனக்கு தெரிந்த சிறுவனுடன் வீட்டுக்கு தெரியாமல் பம்பைக்கு பஸ் ஏறி விடுகிறாள்.

பேருந்தில் மாயி (சம்பத் ராம் ) சிறுமியை கடத்த முயற்சிக்கிறார். திடீரென தனது கனவில் கண்ட சாமி ஐயப்பன் போல வாட்ட சாட்டமான இளைஞர் ஒருவர் (உன்னி முகுந்தன் ) பேருந்தில் ஏறுகிறார். இந்த இளைஞர் கடத்தல் கும்பலிடம் இருந்து சிறுமியை காப்பாற்றி சபரிமலைக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய வைக்கிறார்.

உண்மையில் யார் இந்த இளைஞர்? சிறுமி மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தாளா என்பதை ஒரு சபரிமலை பயணத்தில் புரிய வைத்துள்ளார் டைரக்டர். பக்தை அழைத்தால் கடவுள் வருவார் என்பதை விட மனித வடிவில் உதவி செய்வார் என்ற கருத்தை ஒரு செண்டிமெண்ட் திரைக்கதையில் தந்துள்ளார் இயக்குனர்.

சிறுமி தேவாநந்தா நடிப்பில் ஒரு பெரிய நடிகையை போல் நடித்துள்ளார். நம் வீட்டில் ஒரு பெண் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தால் வரும் உணர்வை நமக்கு தந்து விடுகிறார். சம்பத் ராமை மலையாள சினிமா நன்றாக பயன்படுத்தி கொண்டுள்ளது. நாம் வெறுக்கும் அளவுக்கு வில்லத் தனமான நடிப்பை தந்துள்ளார் சம்பத். அமைதியும் ஆக்ஷனுமாக நடித்துள்ளார் உன்னி முகுந்தன். ரன்ஜின் ராஜ் இசையில் பாடல்கள் பக்தியை தொடுகின்றன. இந்திய பரம்பரை கதைகளில் கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள அன்பை சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். இதை நன்றாக அழுத்தமாக புரிய வைக்கிறது மாளிகப்புரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com