
எம். சக்திவேல் இயக்கத்தில், டில்லி பாபு தயாரிப்பில் வெளி வந்துள்ள படம் மிரள். ஹரியும்( பரத் ) ரமாவும் (வாணி போஜன் ) இளம் தம்பதிகள்.ரமாவிற்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறது ஜோதிடரும் கட்டம் சரியில்லை என்று சொல்லி விடுகிறார். இந்த பிரச்சனைகள் தீர ரமாவின் குல தெய்வம் கோவில் உள்ள கிராமத்திற்கு செல்கிறார்கள் ஹரியும் ரமாவும்.
அங்கே உள்ள குல தெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அன்று இரவே தங்களது சிறு வயது மகனுடன் காரில் ஊர் திரும்புகிறார் வரும் வழியில் பல்வேறு அமானுஷ்ய உருவங்கள் இந்த மூவரையும் பயமுறுத்துகிறது. கொலை செய்ய பார்க்கிறது. இந்த மூவரும் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள். இறுதியில் இதெல்லாம் ஏன் நடக்கிறது? என்பதை நாம் ஊகிக்க முடியாத ட்விஸ்ட்டுடன் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.
படம் தொடங்கி முடியும் வரை எங்கேயும் சின்னதவறு கூட இல்லாமல் மிகுந்த சஸ்பென்ஸ் உடன் படத்தை கொண்டு செல்கிறார் டைரக்டர். நாம் பயம் கொள்ள பல காட்சிகள் இருக்கின்றன. காற்றாலை சுற்றும் சப்தமே நமக்கு பயத்தை தருகிறது. இந்த உருவங்கள் எல்லாம் பேய்கள் அல்ல. நடக்கும் விஷயம் நாடகம் தான் என்பதை நாம் ஒரு கட்டத்தில் புரிந்து கொள்வது கொஞ்சம் மைனஸ்தான்.
எஸ். என். பிரசாத் இசை நமக்கு பயத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரேஷ் பாலா ஒளிப் பதிவு மிக சிறப்பு. பரத்தும் வாணி போஜனும் பயம், சோகம், காதல் என அனைத்து உணர்வுகளையும் சரியான விகிதத்தில் பிரதிபலிக்கிறார்கள். குறைந்த நடிகர்கள், குறைந்த கால நேரத்தில் ஒரு அழகான படத்தை தந்ததற்கு மிர்ள் குழுவை பாராட்டலாம். மிரள் - நிறையவே மிரள வைக்கிறது