தேசப்பற்றைத் தூண்டும் 'மிஷன் மஜ்னு' - விமர்சனம்!

தேசப்பற்றைத் தூண்டும் 'மிஷன் மஜ்னு' - விமர்சனம்!

2023 ஜனவரி 20 ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது ’மிஷன் மஜ்னு’ இந்தி திரைப்படம். நேரடியாக தியேட்டர் வெளியீடாக இல்லாது ஓ டி டி யில் வெளியானதின் அனுகூலம் இதன் தமிழ் வெர்ஷனும் உடனடியாகக் காணக் கிடைக்கிறது.

கடந்த ஆண்டு தியேட்டரில் நேரடியாக வெளியாகி பரவலாக ஃபீல் குட் மூவி எனும் விமர்சனத்தைப் பெற்ற ’சீதா ராமம்’ போலவே இந்தத் திரைப்படமும் தேசப்பற்றை மையமாகக் கொண்டு அமைந்த ஸ்பை த்ரில்லர் வகைத் திரைப்படமே.

நடிகர்கள்: சித்தார்த் மல்ஹோத்ரா, ராஷ்மிகா மந்தனா, பர்மீத் சேதி, ஷரீப் ஹாஸ்மி, குமுத் மிஸ்ரா, ரஜித் கபூர்.

தயாரிப்பு: ரோனி ஸ்க்ரூவாலா, அமர் புட்டாலா, கரீமா மேத்தா

இயக்கம்: சாந்தனு பக்ஸி

படத்தின் கதை 1971 ல் இந்தியா பாகிஸ்தான் போர் நிகழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்தது, எனவே இதை பீரியட் ஃபிலிம் வகையில் சேர்க்கலாம்.

நாயகன் அமன் தீப் சிங் (சித்தார்த் மல்ஹோத்ரா) ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதோடு இந்திய உளவு அமைப்பான ’ரா’ வின் அண்டர் கவர் ஏஜெண்ட்டாகவும் செயல்படுகிறார். அதற்காக அவர் பாகிஸ்தான் குடிமகனாகத் தன்னைக் காட்டிக் கொண்டு அங்கேயே சென்று சில காலம் தங்க வேண்டியது கட்டாயமாகிறது. அங்கிருப்பவர்களை நம்ப வைக்க தன்னை ஒரு டெயிலராக காட்டிக் கொள்கிறார். அதன் காரணமாக ராணுவ அதிகாரிகளுக்கு யூனிஃபார்ம் உடைகளைத் தைத்து தரும் பாகிஸ்தானிய டெயிலர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டே பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளை உளவு பார்த்து இந்திய ‘ரா’ அமைப்பில் தனது உயரதிகாரிக்குச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார் அமன் தீப்.

70 களில் உலக நாடுகள் அனைத்துக்குமே பாகிஸ்தான் நியூக்ளியர் ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறதோ எனும் சந்தேகம் இருந்து வந்தது. ஏனெனில் அதற்கு முந்தைய ஆண்டில் இந்தியா பொக்ரானில் அணுகுண்டு பரிசோதனை செய்து வெற்றி கண்டதில் இருந்தே பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாகவே இருந்தன. அப்போது இந்தியாவிலும் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து மொரார்ஜி தேசாய்

இந்தியப் பிரதமரான மாற்றம் இந்தியாவில் நிகழ்ந்து முடிந்திருந்தது. இந்திராவைப் போல அதிரடி ராணுவ நடவடிக்கைகளை விரும்பாத மொரார்ஜி பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு வார்த்தை மூலமாகவே இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவைப் பேண முடியும் என நம்பினார். இதன் காரணமாக ’ரா’ அமைப்பு அளித்து வந்த ஒற்றுத் தகவல்களை அவர் சரியான ஆதாரங்கள் இன்றி ஏற்கவோ அல்லது மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவோ அனுமதி அளிக்க மறுத்தார்.

இங்கே இந்தியாவில் ரா வின் நிலமை இப்படி இருக்க பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவுக்காக உளவு பார்த்துக் கொண்டிருந்த ஏஜெண்டுகளின் நிலமை மிக மோசமாகிக் கொண்டிருந்தது. அவர்களுக்கென அரசு அளித்து வந்த சலுகைகள் மிகுதியாகக் குறைக்கப்பட்டன. ஆயினும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போது அரசின் கட்டுத்திட்டங்களைத் தாண்டியும் தமக்கு இடப்பட்ட பணிகளை செய்யும் மனோதிடம் மிக்கவர்களாக அமன் தீப்பும் அவரது சக ஏஜெண்டுகள் இருவரும் இருந்தனர்.

இதற்கிடையில் பாகிஸ்தானில் ஒற்று வேலை செய்யப்போன இடத்தில் பார்வைத் திறனை இழந்த நஸ்ரின் (ராஷ்மிகா) ஐ கண்டதும் காதலில் விழுகிறார் நாயகன். எதிர்ப்புகள் இருந்த போதும் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

ஒருபுறம் பார்வை இழந்த மனைவி, மறுபுறம் ரகசியமாக பாகிஸ்தான் நியூக்ளியர் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதை இந்திய அரசாங்கத்தை நம்பச் செய்வதற்கான ஆதாரங்களைத் திரட்டும் சவாலான பணியைத் தொடர்வது. இதற்கு நடுவில் தனது தந்தையின் அவல மரணத்தால் தனக்கு ஏற்பட்டு விட்ட அவமானத்தைத் துடைத்து தனது தேசப்பற்றை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம் என இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவரத் துடிக்கும் நாயகனின் துணிச்சலும், புத்திசாலித் தனமுமான தொடர் முயற்சிகள் என படம் தொய்வடையாது நீள்கிறது.

கிளைமாக்ஸில் இஸ்ரேலின் விமானத்தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் தப்பியதா? இந்தியப் பிரதமர் ரா அமைப்பின் செயல்பாடுகளை அங்கீகரித்தாரா? அவர் கேட்ட பிஸிக்கல் எவிடன்ஸை அமன் தீப் சிங்கால் சேகரிக்க முடிந்ததா? அதற்காக அவர் செய்த புத்திசாலித்தனமான முயற்சி என்ன? மிஷன் முடிந்த பின்பு அமன் தீப்பின் பார்வை இழந்த மனைவி நஸ்ரின் என்னவானார்?

இதற்கான விடை தான் ‘மிஷன் மஜ்னு’

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து சேர்ந்து பார்க்கத் தக்க விதத்திலான ஃபீல் குட் மூவி இது. படத்தில் முகம் சுளிக்கச் செய்யும் விதத்திலான காட்சிகள் எதுவும் இல்லை.

தேசத்தின் மீதான பற்றை மேம்படுத்தும் காட்சிகள் தான் அதிகமிருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com