பொன்னியின் செல்வன் 2 - விமர்சனம்!

பொன்னியின் செல்வன் 2 - விமர்சனம்!

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் போடப்பட்ட முடிச்சுகளை இந்த இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து அதில் ரசிகர்களின் இதயங்களைக் கட்டிப்போட்டு வைக்கிறார் டைரக்டர் மணிரத்தினம்.

கல்கியில் பொன்னியின் செல்வன் தொடராய் வந்த போது விழுப்புரத்தில் உள்ள மகாத்மா காந்தி பாடசாலையில் கல்கி அவர்களுக்கு அளித்த வரவேற்பு மடலில் உள்ள பாடல்

பொன்னியின் செல்வனும்

பூங்குழலி அம்மையும்

வந்தியத் தேவனும்

வானதியும் குந்தவையும்

பழுவூர் நந்தினியும்

பழுவேட்டையர்களும்

பாடாய்படுத்துகின்றார் - நாங்கள்

பாகாய் உருகுகின்றோம்.

பாகாய் உருகித்தான் போய்விட்டோம் நன்றி மணிரத்தினம் சார்.

தமிழ் திரை உயிரில் பதிந்து கொண்ட உலக நாயகனின் குரலால் முன் கதை சுருக்கம் உன்னதம்.

அன்று நாம் விட்டு வந்த அதே கோடியக்கரை. நடிப்புடன் போட்டி போடும் வசனங்கள். நடிப்புக்கு உயிரூட்டும் இசை. வழக்கம் போல வந்தியத்தேவனின் குறும்பு சிறப்பு. குந்தவை கம்பீரம் பெருமிதம் . ஆதித்த கரிகாலன் நேரில் தரிசித்த திருப்தி. நந்தினி பெயருக்கேற்றார் போல அனைத்தையும் தன்னுள் தரித்து வாழ்ந்து காட்டி விட்டார். இம்முறை இவை அனைத்தையும் பொன்னியின் செல்வன் கண்கள் மட்டுமே பேசி முடித்துவிட்டன.

● பொன்னியின் செல்வன் உயிருடன் இருக்கிறார் எனச் சொல்லும் ஆழ்வார்கடியானும் சரி, ஆதித்த கரிகாலனும் சரி நடிப்பில் சரி நிகர்.

● கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனைக் கொல்ல காத்திருக்கும் நந்தினி.

சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு ஏனடி நீங்கினையோ என்று பிரிந்தவர்கள், என்னைக்கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விடக் கூடுமே என உணர்வு பிரவாகத்தில் சிக்கித் தவிக்கும் காட்சி. இது ஆன்மாக்களின் சங்கமும் அங்கே நமக்கும் கொஞ்சம் இடமும். அதனால்தான் நம் வீடு வரை ஆதித்த கரிகாலனும் நந்தினியும்.

● ஆதித்த கரிகாலன் கொலையுண்டு கிடக்க, நண்பனை இழந்து விட்டோமே என வந்தியத் தேவனின் கதறலில் அந்த 'ஐயோ' மனதில் ஆணியாய்…

● சூடாமணி புத்த விஹாரத்தில் இருந்து பொன்னியின் செல்வன் யானையின் மேலேறிச் செல்லும் போது பார்வையிலேயே பல கதைகள் பேசுவது அழகு.

● குந்தவையும், வந்தியத்தேவனும் மனம் கடந்து, உயிர் கடந்து வளர்த்த காதலை 'வாள்' கடந்து வெளிப்படுத்தும் காட்சி காலத்தை வென்ற காதல் காட்சி.. அதிலும் தன் கண்கட்டை அவிழ்க்கச் செல்லும் வந்தியத்தேவனின் கைகளை தடுக்கும் குந்தவையின் கைகள்… உயிர்த் தீயினிலே வளர்ச்சோதியே-என்றன் சிந்தனையே என்றன் சித்தமே… நமக்குள் பாரதி சிரிக்கின்றான்.

குளோசப் ஷாட்டுகளைப் போலவே ஷார்ட் கட் வசனங்களும் மிளிர்கின்றன.

"என்னால முடியாது எதுவும் உன்னால முடியாது" - நந்தினி மந்திரவாதியிடம். கடம்பூர் மாளிகைக்கு ஆதித்த கரிகாலன் வருவானா என்ற கேள்விக்கு நந்தினி கூறும்" வருவார். சொல்லி அனுப்பியது நான் அல்லவா?" காளாமுகன் வேடத்தில் ஆழ்வார்கடியான் வந்தியத்தேவனிடம் "தம்பி எப்படி கண்டுபிடிச்ச…

ம்ம்.. நீ வருவதற்குள் உன் தொப்பை வந்துவிட்டது…"

"தலை ரொம்ப முக்கியம் ராணி"வந்தியத்தேவன் நந்தினியிடம்.

ஒளியையும் பேச வைத்து விட்டார் ரவிவர்மன். சோழ நாட்டுக்குள் ஓர் உலா தோட்டா தரணி.

ஆனாலும் ஒரு ரசிகனாய் நாம் இன்னும் எதிர்பார்த்தது, சிவனடியார்கள் மதுராந்தகனுக்கு ஆதரவாக குரல் எழுப்பாமல் இருந்திருக்கலாம் - பார்த்திபேந்திரன் ராஷ்டிரக்கூடர்களுடன் சேர்ந்திருக்காமல் வாழ்ந்திருக்கலாம் - சோழ மன்னர் முடிசூட்டு விழாவில் தமிழிசைக் கருவிகளை (பறை) பயன்படுத்தியிருக்கலாம் -பாரதம் போன்ற புதிய சொல்லாடல்கள் தவிர்த்திருக்கலாம் - ஊமைராணி, சேந்தன் அமுதன், பூங்குழலி, மந்தாகினி பாத்திரங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம்…

பழிவாங்கும் படலமாக இருந்தாலும் நந்தினியின் இன்னொரு முகத்தையும் டைரக்டர் காட்டி இருப்பது மேன்மை. சோழர்கள், பாண்டியர்கள், ராஷ்டிரக்கூடர்கள், ஆபத்துதவிகள், புத்த விஹாரங்கள், கோட்டை கொத்தளங்கள், ராஜதந்திரங்கள், போர், அரசன்,ஒற்றன் போன்ற வரலாற்று சொற்களுடன் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழ் மண்ணில் பதிந்த ஒரு ராஜ சரித்திரம் நம் இளையோருக்காக…

தமிழ் மண் மணம் கமழும் இம்முயற்சி பல விருதுகளைக் குவிக்கும். உலக அரங்கில் நம் தமிழ் மொழியை உயர்த்திய படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com