
சிவக்கார்த்திகேயன் நடிப்பில் அனு தீப் இயக்கத்தில் வந்துள்ள படம் பிரின்ஸ். முற்போக்கான சிந்தனை கொண்ட உலகநாதன் (சத்யராஜ் ) தனது மகன் அன்புவை (சிவகார்த்திகேயன் ) ஜாதி மதம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துகிறார். வரலாற்று ஆசிரியரான அன்பு தனது பள்ளியில் உடன் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் மரியாவை காதலிக்கிறார். பிரிட்டிஷ்காரர்களை வெறுக்கும் உலகநாதன் பிரிட்டிஷ் பெண்ணான மரியாவையும் மருமகளாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.
வீட்டு பிரச்சனை ஊர் பிரச்சனையாக மாறி சிவாவை ஊரை விட்டு வெளியேரும் படி சொல்கிறார்கள் ஊர் மக்கள். இந்த பிரச்சனை எப்படி தீர்கிறது என்று கதை செல்கிறது. "நர்ஸ் உன்னை மாத்தி வெச்சுருந்தா உன் ஜாதியே மாறியிருக்கும் "என்று சத்யராஜ் அறிமுகம் ஆகும் காட்சியே சிறப்பாக இருக்கிறது. சமூக பிரச்சனைகளை நகைச்சுவயுடன் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால் எமாற்றமே கிடைக்கிறது.
காட்சிகளில் சொல்ல வேண்டிய நகைச்சுவையை வசனத்தில் கடத்த முயற்சி செய்திருப்பதால் பல இடங்களில் சலிப்பு ஏற்படுகிறது. திறமையான நடிகர் சத்யராஜை இன்னமும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம். சிவகார்த்திகேயனின் காமெடி வெற்றிக்கு உடன் நடக்கும் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம்.
இப்படத்தில் காமெடி நடிகர்கள் பெரிய சப்போர்ட் இல்லாமல் பல காட்சிகளில் வருகிறார்கள். இது ஒரு வித ஈர்ப்பு இல்லாமல்தான் இருக்கிறது. மரியா கொஞ்சும் தமிழில் பேசி அழகாக நடிக்கிறார்.வசனங்களை மட்டும் நம்பும் நகைச்சுவையால் பிரின்ஸ் பெரிதாக ஈர்க்கவில்லை. பிரின்ஸ் - அழகு மட்டுமே.