
திருப்பதி மலைப்பகுதிகளில் செம்மர கடத்தல்களில் ஈடுபட்ட தமிழர்களை ஆந்திர காவல் துறையினரால் சுடப்பட்டு இறப்பதை ஊடகங்களில் நாம் அடிக்கடி பார்த்திருப்போம். இந்த செம்மர கடத்தலை மைய்யமாக கொண்டு உருவான படம்தான் ரெட் சாண்டல் உட். இப்படத்தை குரு ராமானுஜம் இயக்கி உள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் வசித்துவரும் படத்தின் ஹீரோ வெற்றி காணாமல் போன தனது நண்பனை தேடி திருப்பதி செல்கிறான். அங்கே எதிர்ப்பாராத விதமாக செம்மரக்கடத்தலுக்காக பொய் குற்றம் சாட்டப்பட்டு திருப்பதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அடைக்கப்படுகிறான். அந்த காவல் நிலையத்தில் தன்னை போன்ற பல அப்பாவி தமிழர்கள் இருப்பதை பார்க்கிறான். காவல் அதிகாரி அனைத்து அப்பாவிகளையும் சுட்டுத்தள்ள திட்டம் தீட்டுகிறார்.
இதனை அறிந்த ஹீரோ பொய் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தப்பிக்கிறார். இவர்கள் யார்? செம்மர கடத்தலின் பின் உள்ள நெட்ஒர்க் என்ன என்பதாக படம் செல்கிறது. படத்தின் முதல் காட்சியிலேயே செம்மரம் பற்றியும் இதன் உலகலாவிய மார்க்கெட் பற்றியும் தெளிவாக புரிய வைத்து கதைக்குள் கொண்டு செல்கிறார் டைரக்டர். படத்தின் முதல் காட்சி சாதாரணமாக தொடங்கி , திரில்லர் போல மாறி, காவல் துறையினரின் அத்து மீறல்களையும் பேசி செல்கிறது.
இரண்டாவது பாதி அடிதடி, ஆர்பாட்டமான வில்லன், சேசிங் என வழக்கமான பார்முலாவில் இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவில் திருப்பதி மலையின் கம்பீரம் தெரிகிறது. ஹீரோ வெற்றி நடிப்பில் முந்தைய படங்களை விட தேறி வருகிறார் என்றே சொல்ல வேண்டும். சோகம், ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.எம். எஸ். பாஸ்கர் நடிப்பு ஒரு யதார்த்த கிராமத்து மனிதரை கண் முன் நிறுத்துகிறது. நாம் பக்தியுடன் பார்க்கும் திருப்பதி மலைக்கு பின் செம்மரம் என்ற பயங்கரமும் சோகமும் இருப்பதை இப்படம் சொல்கிறது. Red sandal wood தமிழர்களின் ரத்த சரித்திரம்!