விமர்சனம்: பருந்தாகுது ஊர் குருவி!

விமர்சனம்: பருந்தாகுது ஊர் குருவி!

நாம் பல படங்களில் பார்த்த தேனி - கேரள எல்லை வன பகுதியில் நடக்கும் கதைதான் பருந்தாகுது ஊர் குருவி.

தனபால் கோவிந்தராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார். தமிழக கேரள எல்லை கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவன் ஆதி. சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறான். ஒருவரை கொலை செய்து விட்டதாக இரு நபர்கள் காவல் நிலையத்தில் சரண் அடைக்கிறார்கள். கொல்லப்பட்ட நபரின் பிணத்தை கைப்பற்ற உதவி ஆய்வாளரை அனுப்புகிறார் நிலைய ஆய்வாளர். உதவிக்கு வழி காட்ட ஆதியை அழைத்து செல்கிறார் உதவி ஆய்வாளர். உதவி ஆய்வாளரை காடு மேடு என்று அலைக்கழித்து பிணம் இருக்கும் இடத்திற்கு கூட்டி செல்கிறான் ஆதி. ஆதியின் செயலால் கோபமடையும் உதவி ஆய்வாளர் ஆதியை பிணத்துடன் இணைத்து கை விலங்கை மாட்டி விடுகிறார். பிணம் என்று நினைத்தவர் உயிருடன் இருக்கிறார். இந்த தகவலை ஆதியால் உதவி ஆய்வாளரிடம் சொல்ல முடியவில்லை. வெட்டு பட்டவரின் பெயர் மாறன் (விவேக் பிரசன்னா) என்று தெரிய வருகிறது. மாறனை முதுகில் சுமந்து கொண்டு காடு மலைகளில் அலைகிறார் ஆதி. ஒரு கும்பல் மாறனை கொல்ல துடிக்கிறது. இந்த கொலை முயற்சியின் பின்னணியில் தனது மனைவியே இருப்பதை கண்டுபிடிக்கிறார் மாறன். இதற்கான காரணம் என்ன என்பதாக கதை செல்கிறது.

கதை கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், பார்ப்பதற்கு சுவாரசியமாக இல்லை. மிக சுமாரான திரைக்கதையில் நகர்கிறது காட்சிகள். ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை இந்த எதிலும் புதுமையும் இல்லை வித்தியாசமும் இல்லை. நிஷாந்த், மாறன் இருவரும் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். துடுக்கான, கோபக்காரா இளைஞராக நிஷாந்த் நன்றாக நடித்துள்ளார். வலியும், துரோகம் தரும் வேதனையுமாக வித்தியாசமான நடிப்பை தந்துள்ளார் பிரசன்னா.வாழ்த்துக்கள் பாய்ஸ். கதை மட்டும் நன்றாக இருந்து வேறு எந்த அம்சமும் வலுவாக இல்லாததால் படம் ஈர்க்கவில்லை. மொத்தத்தில் பருந்தாகுது ஊர் குருவி - பருந்தாகாத ஊர் குருவி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com