”ரன் பேபி ரன்” விமர்சனம்: யூகிக்க முடிந்த திரில்லர்

”ரன் பேபி ரன்” விமர்சனம்: யூகிக்க முடிந்த திரில்லர்

ஆர்.ஜெ. பாலாஜி முதல் முறையாக கேலி கிண்டல், இல்லாமல் மிக சீரியஸாக நடித்துள்ள திரில்லர் படம் ரன் பேபி ரன். ஜியன் கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்ச்சர் இப்படத்தை தயாரித்துள்ளது.

வங்கி ஒன்றில் பணியாற்றும் ஆர். ஜே பாலாஜியின் காரில், தன்னை கொல்ல வரும் நபர்களிடம் இருந்து காத்துக்கொள்ள ஒரு பெண் (ஐஸ்வர்யா ராஜேஷ் ) ஏறுகிறாள். பாலாஜியும் ஐஸ்வர்யாவை தன் வீட்டில் தங்க வைக்கிறார். எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பிணத்தை டிஸ்போஸ் செய்ய ஒரு பெட்டியில் பிணத்தை அடைத்து செஞ்சியை நோக்கி பயணம் செய்கிறார். போலீஸ் கெடுபிடியால் பெட்டியை பயணம் செய்த வேனில் விட்டு செல்கிறார். வேன் டிரைவர் பெட்டியை திறந்து பார்த்து பிணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பிணத்தை எரித்து விடுகிறார். போலீஸ் நெருங்கி வரும் போது டிரைவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது, கொலை செய்யபட்ட பெண் யார் என தேடுகிறார் பாலாஜி. பல திருப்பங்கள், ட்விஸ்ட் என நகர்கிறது படம். பர பரப்பான கிரைம் நாவல் படிப்பதை போன்ற உணர்வை தருகிறது படம். பெட்டியை தூக்கி கொண்டு பயணம் செய்யும் போது பாலாஜி மாட்டிக் கொள்ள கூடாது என்ற உணர்வு நமக்கு வருகிறது.

படத்தின் முதல் பாதி மிகுந்த பரபரப்புடன் நகர்கிறது. இரண்டாவது பாதியில் இது குறைவுதான். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்துளார் பாலாஜி. பிணத்தை பெட்டியில் வைத்து கொண்டு தவிக்கும் தவிப்பில் நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார். ஜோ மல்லூரி என்ற சிறந்த நடிகரை இப்படம் அடையாளம் காட்டி உள்ளது என்று சொல்லலாம். 

சாம் சி. எஸ் இசை பல காட்சிகளில் நம்மை பயமுறுத்துகிறது. யுவா வின் ஒளிப்பதிவும் மதனின் எடிட்டிங்கும் இணைந்து படத்தை ஒரு சிறந்த தரத்திற்கு கொண்டு செல்கிறது.  படம் செல்லும் போக்கில் கொலையாளி யார் என்பதை ஓரளவு பார்வையாளர்களால் ஊகிக்க முடிகிறது. ஊகிக்க முடியாத திருப்பங்கள் இன்னமும் இருந்திருந்தால் படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். ரன் பேபி ரன் - இன்னும் வேகம் வேண்டும் பேபி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com