செம்பி - சம காலத்தின் குரல்

திரை விமர்சனம்
sembi
sembi

ஒரு சிறிய இடைவெளிக்கு பின்பு தனது பாணியில் ஒரு படத்தை தந்துள்ளார் பிரபு சாலமன்.

பனி சூழ்ந்த மலைகள், பேருந்து, பயணிகள் என முத்திரைகளுடன் செம்பி படம் கொடுத்துள்ளார் டைரக்டர். ட்ரிடென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆறாவது படிக்கும் தனது பேத்தியுடன் (நிலா ) தேன், கனிகளை பறித்து சந்தையில் விற்று வாழ்ந்து வருபவர் வீரத்தாய் (கோவை சரளா ) ஒரு நாள் காட்டில் பேத்தி தனியாக நடந்து செல்லும் போது எதிர் கட்சி தலைவரின் (நாஞ்சில் சம்பத்) மகனும், அவனது நண்பர்களுக்கும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து விடுகிறார்கள். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றவாளிகளிடமே பண பேரம் பேசி, வீரத்தாயிடம் வழக்கை முடிக்க முயல்கிறார்.

இதனால் ஆத்திரம் அடையும் பாட்டி வீரத்தாய் இன்ஸ்பெக்டரை தாக்கி ஒரு பேருந்தில் பயணிக்கிறாள்.பேருந்தில் இருக்கும் வக்கீல் (அஸ்வின் குமார்) மற்றும் சக பயணிகள் உதவியுடன் ஆன் லைன் மூலமாக பேத்தியும், பாட்டியும் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். பேருந்தில் நடக்கும் போராட்டத்தை ஒரு அழகியலுடனும் வலிகளுடனும் சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன்.

ஒரு சஸ்பென்ஸ், எளிய மனிதர்களுக்கான சட்ட தீர்வு என நகர்கிறது திரைக்கதை. கோவை சரளாவிற்கு தேசிய விருது நிச்சயம். ஒரு பாட்டியாக அன்பை காட்டுவதிலும், கயவர்களிடம் பொங்குவதும் என சிறப்பாக நடித்துள்ளார். ஒரு சிறந்த நடிகையை நகைச்சுவையாக மட்டும் பயன் படுத்தி கொண்டுள்ளோம் என இப்படத்தில் சரளாவின் நடிப்பை பார்த்தால் தெரிய வருகிறது. .

சிறுமி நிலா நடிப்பில் நம்மை கண்ணீர் வர வைக்கிறார். தம்பி ராமையா, அஸ்வின்,பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் என அனைவரும் கட்சிதமான நடிப்பை தந்துள் ளார்கள். ஜீவனின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் இன்னமும் அழகாக தெரிகிறது. நிவாஸ் k. பிரசன்னாவின் பின்னணி இசை கதைக்கு நெருக்கமாக உள்ளது. சங்கர், எம். கே ராஜுவின் ஒப்பனை கவனிக்க வைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com