ஷாட்.. பூட்.. த்ரீ.. விமர்சனம்

ஷாட்.. பூட்.. த்ரீ.. விமர்சனம்

அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கி தயாரித்துள்ள படம் ஷாட் பூட் த்ரீ.பல்வேறு உலக நாடுகளில் நடை பெற்று வரும் திரைப்பட விழாக்களில் சிறந்த குழந்தைகள் திரைப்படமாக ஷாட் பூட் த்ரீ படம் திரையிடப் படுகிறது.இன்னும் ஒரிரு நாட்களில் நம் இந்திய ரசிகர்களுக்காக திரையரங்கிற்க்கு வரவுள்ளது இப்படம்.

வெங்கட் பிரபு, சினேகா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒரு  பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும்  சியாமளா (சினேகா ) சாமிநாதன் (வெங்கட் பிரபு ) தம்பதிகளுக்கு ஒரே மகன் சிறுவன் கைலாஷ் (கைலாஷ் ஹிட் ) இவன் ஆசையாய் ஒரு நாய் வாங்கி செல்லப் பிராணியாக  வளர்க்கிறான் நாய் ஒரு நாள் காணாமல் போய் விடுகிறது.

நண்பர்களுடன் சேர்ந்து நாயை தேடுகிறான். நாயை கொன்று புதைக்க திட்டம் போடுகிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள். நாய் மீட்கப்பட்டதா? என்பதை சிறுவர்களின்  பயணம் வழியே சொல்லி இருக்கிறார் டைரக்டர். ஒரு சிறிய ஒன் லைன், இதன் வழியே திரைக்கதை என ஒரு நல்ல குழந்தைகள் பொழுது போக்கு படமாக தந்துளார் வைத்திய நாதன். இது குழந்தைகள் படமாக இருந்தாலும் பெற்றோர்களுக்கான பாடமாகவும் வந்துள்ளது ஷாட் பூட் த்ரீ. கார்ப்பரேட் நெருக்கடிகளால் ஒரே குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் உயர் நடுத்தர பெற்றோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சொல்கிறது இப்படம்.                 

சினேகாவும் வெங்கட் பிரபு வும், ஒரு நடுத்தர வயது பெற்றோர்களாக வாழ்ந்து காட்டிஉள்ளார்கள்.கைலாஷ் ஹிட், பிரணித்தி, வேதாந்த் இந்த மூன்று சிறுவர்களும் சம கால சிறுவர்களை கண் முன் காட்டி விடுகிறார்கள். சிறுமி பிரணித்தி நடிப்பில் மட்டும் கொஞ்சம்  முதிர்ச்சி தெரிகிறது. யோகிபாபு இருக்கிறார் ஆனால் அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நகைசுவைதான் இல்லை.

வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை சுமார் ரகம் தான் மிகவும் சராசரி இசையாக நம்மை கடந்து செல்கிறது. விலங்குகள், சிறுவர்கள் என பல விஷயங்கள் படத்தில் பேசப்பட்டாலும், ஷாட் பூட் த்ரீ இன்றைய பெற்றோர்கள் குழந்தைகள் விஷயத்தில் செய்யவேண்டிய விஷயத்தையும் சொல்லி செல்கிறது.கை நிறைய சம்பளம், கேட்கும் பொருள்களை வாங்கி தருவது, பெரிய வீடு இந்த அனைத்தையும் தாண்டி குழந்தைகளிடம் பேச நேரம் ஒதுக்குங்கள் என்கிறது ஷாட் பூட் த்ரீ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com