விமர்சனம்: சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் - கம்ப்யூட்டர் காதலி!
நிஜத்தில் இல்லாத, மெய்நிகர் தொழில் நுட்பம் (virtual) மூலமாக ஒரு அழகான காதலி உருவானால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவான படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் திரைப்படம். K. குமார் தயாரிக்க டாக்டர் பிரபு திலக் இந்த படத்தை வெளியிட்டுள்ளார். விக்னேஷ் ஷா இந்த படத்தை இயக்கி உள்ளார்.
திருமணம் ஆகாத ஒரு விஞ்ஞானி தனது ஆய்வகத்தில் கம்ப்யூட்டர் மூலமாக ஒரு பெண்ணை உருவாக் குகிறார்.இந்த நுட்பத்தை தனது கைபேசியில் இணைத்து கொள்கிறார். இந்த செல்போன் தவறுதலாக உணவு டெலிவரி செய்யும் ஷங்கரின் (சிவா ) கையில் கிடைக்கிறது.
செல் போனில் உள்ள கம்ப்யூட்டர் பெண்ணான சிம்ரன் (மேகா ஆகாஷ்) தனது ஐடியாவால் ஷங்கரை முன்னேற்றுகிறார். சிம்ரன் ஷங்கரை காதலிக்கிறார். ஷங்கரோ மாடலான துளசியை (அன்ஜூ குரியன் ) காதலிக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் சிம்ரன் பல்வேறு குழப்பங்களை ஷங்கரின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிறார். இறுதியில் ஸ்மார்ட் போன் காதல் ஜெயித்ததா? அல்லது நிஜக் காதல் ஜெயித்ததா என்பதை காட்சிக்கு காட்சி சிரிக்கும்படி சொல்லியிருகிறார் டைரக்டர்.
எந்த வித லாஜிக்க்கும் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிடுவதால் லாஜிக்கை நாம் பார்க்க வேண்டியது இல்லை. திரைக்கதை,நடிப்பு, வசனம் என அனைத்தும் காமெடி என்ற ஒற்றை புள்ளியை நோக்கியே செல்கிறது.பெரிய அளவில் கருத்து சொல்ல முயற்சி எதுவும் எடுக்காமல் நம்மை சிரிக்க வைப்பதே குறிக்கோளாக கொண்டு இதில் வெற்றியும் பெற்று விட்டார் டைரக்டர்.
இந்த வெற்றியை முழுவதும் கொண்டு சேர்ப்பது நமது அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்சி சிவாதான். காட்சிகளில் முக பவாங்களை பெரிய அளவில் மாற்றாமல் டயலாக் டெலிவரியிலேயே நம்மை சிரிக்க வைக்கிறார். மேகா ஆகாஷ் அழகான ஒரு பெண்ணிற்கே உரிய உணர்வை தந்துள்ளார். பாடகர் மனோவிற்குள் உள்ள காமெடி நடிக்கரை இந்த படம் அடையாளம் காட்டியுள்ளது.மா. கா. பா. ஆனந்த், சாரா, அன்ஜூ குரியன் என அனைத்து கலைஞர்களையும் நன்றாக வேலை வாங்கிஉள்ளார் டைரக்டர். லியோன் ஜேம்ஸ் இசை அளவாக உள்ளது. படத்தின் மிக பெரிய பலமே பூபதி செல்வராஜின் படத் தொகுப்புதான். பரபரப்பான வாழக்கை சூழலில் இது போன்ற நகைச்சுவை படங்கள் ஒரு ஸ்பீட் பிரேக்கரை போன்று உள்ளது. சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட் போன் சிம்ரனும் - பார்த்து சிரிக்கலாம்.