டிடி ரிட்டரன்ஸ் விமர்சனம் :காமெடி திருவிழா!

டிடி ரிட்டரன்ஸ்
டிடி ரிட்டரன்ஸ்

த்தம் தெறிக்கும் ஆக்ஷன் படங்கள், திரில்லர் படங்கள் என வந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்பு குடும்பத்தினருடன் பார்த்து மகிழும் நகைச்சுவை படமாக வந்துள்ளது டிடி ரிட்டரன்ஸ் திரைப்படம். RK என்டர்டையின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.

சந்தானம், சுரபி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். பண மூட்டை ஒன்று பேய் பங்களாவில் மாட்டிக்கொள்ள அதை மீட்க உள்ளே செல்லும் சந்தானம் மற்றும் நண்பர்களை தாங்கள் நடத்தும் மரண விளையாட்டில் வெற்றி பெற்றால்தான் பணத்தை தருவேன் என்று பேய்கள் கண்டிஷன் போடுகிறது. சந்தானமும் ஒப்புக்கொண்டு விளையாடுகிறார்.

படத்தின் முதல் காட்சியை தவிர்த்து மற்ற அனைத்து காட்சிகளிலுமே வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். பேய் படத்தை வைத்து ரசிகர்களை பயமுறுத்துவதை விட சிரிக்க வைக்க வேண்டும் என்று படம் எடுத்துளார் டைரக்டர். இந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். சந்தானம் தான் செய்யும் காமெடிகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டு உடன் நடிக்கும் மற்றவர்களுக்கு காமெடி செய்ய வாய்ப்பு தந்துள்ளார்.

கிங்ஸ்லி, முனீஸ்காந்த், லொல்ளு சபா மாறன்,மொட்டை ராஜேந்திரன் என ஒரு நகைச்சுவை பட்டாளமே கா ட்சிக்கு காட்சி நம்மை சிரிக்க வைக்கிறார்கள். மாறன் நம்மை அப்பாவித்தனமாக சிரிக்க வைக்கிறார். கிங்ஸ்லி மிகவும் சீரியஸாக பேசி நம்மை சிரிக்க வைக்கிறார்.மாஸ்டர் பெப்சி விஜயன், தினா போன்ற வில்லன் நடிகர்கள் தங்கள் பாணியில் நடிக்கிறார்கள் ஆனால் காட்சி அமைப்பு சிரிக்க வைக்கிறது.

சுரபிக்கு உடன் வருவதை தவிர பெரிய வேலை இல்லை.ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பொருத்தமாக உள்ளது. மிகப்பெரிய திருப்பங்கள் இல்லை, லாஜிக் இல்லை. ஆனால் படத்தின் கடைசி ஷாட் வரை நகைச்சுவை இருக்கிறது. படம் என்பது ஒரு கூட்டு முயற்சி என்பதை சந்தானமும் இயக்குனரும் டிடி ரிடர்ன்ஸ் மூலம் நிரூபித்து உள்ளார்கள் டி டி ரிடர்ன்ஸ் படம் பார்த்தால் மனக்கவலைகள் மறந்து சிரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com