
தலைநகரம் 2 - ரத்த நகரம். துரை VZ இயக்கத்தில் சுந்தர் சி நடித்து வெளிவந்துள்ள படம் தலைநகரம் -2. சென்னையில் உள்ள மூன்று முக்கிய தாதாக்களில் ஒருவனான நஞ்சுண்டா மற்ற தாதாக்களை அழிக்க ரைட் என்ற முன்னால் ரவுடியை பயன்படுத்த நினைக்கிறான். அடிதடியில் இருந்து ஒதுங்கி இருக்கும் ரைட் மீண்டும் கத்தி எடுக்க ஆரம்பித்தவுடன் நடக்கும் பல்வேறு விஷயங்கள் தான் தலைநகரம் 2 படத்தின் கதை.
மற்ற டான் படங்களில் இருப்பதை போலவே இந்த படத்திலும் வன்முறை இருக்கிறது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. தார் ஊற்றி உயிருடன் கொளுத்துவது,நெஞ்சில் கத்தியை இறக்குவது இப்படி பல.படத்தில் பல வன்முறை காட்சிகள் நம்மை போதும் என்று சொல்ல வைக்கிறது. படத்தின் திரைக்கதை வேகமாக நகர்வது ஆறுதல். படத்தில் பாராட்ட பட வேண்டிய அம்சம் கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவுவும், விஜய் ரத்தினத்தின் ஒலி வடிவமைப்புதான். இந்த இருவரின் ஒளியும், ஒலியும் சேர்ந்து காட்சிக்கு பலம் சேர்க்கிறது. ஜிப்ரானின் இசை கேட்கும் படியாக உள்ளது. சுந்தர்.C கொஞ்சம் அமைதி, கோபம், ஆக்ரோஷம் என கலந்து நடித்துள்ளார். வில்லன் பாகுபலி பிரபாகர் உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் ஒரு நிஜ சென்னை தாதாவை கண் முன் நிறுத்துகிறார். பாலக் லால் வாணி கவர்ச்சிக்கு மட்டுமே பயன் படுத்தபட்டிருக்கிறார். தம்பி ராமையா இருக்கிறார். ஆனால் நகைச்சுவை இல்லை. தலைநகரம் 1 படத்தில் நகைச்சுவை மிக பெரிய பலம். இந்த படத்தில் இது போல இல்லாதது ஒரு மைனஸ்தான். சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் இருந்தாலும் இதை தாண்டி வன்முறையை நியாயப்படுத்தும் படமாக வந்துள்ளது தலைநகரம் -2