பெண்கள் குறித்தான பார்வைகளை மாற்றக்கூடிய " தி கிரேட் இந்தியன் கிச்சன்"

திரை விமர்சனம் !
The great indian kitchen
The great indian kitchen

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இது தற்போது தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் , ராகுல் ரவீந்திரன் நடிப்பில் இன்று வெளியாகின்றது.

மலையாளத்தில் சூரஜ் வெஞ்சமூடு மற்றும் நிமிஷா சஞ்சயன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றிருந்தது. இது தமிழிலும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற அதே பெயரில் தயாராகி வருகிறது. இத்திரைப் படத்தை ஆர். கண்ணன் இயக்கியுள்ளார்.  துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்டிசி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

ஒரு பெண் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வருவதிலிருந்து எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள் என்பதே இப்படத்தின் மையக்கரு. பெண் அடிமைத் தனங்களையும், பிற்போக்கு தனங்களையும் சாடுகிறது இப்படம் . பெண்களின் வாழ்க்கையானது சமையலறையில் துவங்கி சமையலறையில் முடிவடைய வேண்டுமா? என்கிற கேள்வி படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் யோசிக்க வைக்கும்.

நடன ஆசிரியராக இருக்கும் ஐஸ்வர்யாவை ஆசிரியராக வேலை செய்யும் ராகுல் திருமணம் செய்கிறார். திருமணத்துக்கு பின்னர் ஐஸ்வர்யாவுக்கு காலையில் எழுந்ததும் குடும்பத்துக்கான உணவு தயாரிப்பது, பாத்திரங்களை சுத்தம்செய்வது, மதிய உணவு தயாரிப்பது, மதிய உணவுக்கு பின் பாத்திரங்களை சுத்தம்செய்வது, பிறகு சமையல் அறையில் இரவு உணவுக்குப்பின் சுத்தம் செய்வது பின்னிரவில் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை என திரும்ப திரும்ப செக்கு மாடு போல் இதே சம்பவங்கள், அதனால் ஐஸ்வர்யாவுக்கு பெரும் சலிப்பு ஏற்படுகிறது. இந்த வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படும்போது அந்த பெண் என்ன முடிவை எடுக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

ராகுலின் தந்தை பழங்காலத்து மனிதராகவே படம் முழுவதும் வலம் வருகிறார். அவருக்கு பிரஷில் பேஸ்ட் வைத்து நீட்டுவது , வெளியே செல்லும் போது செருப்பை எடுத்து போடுவதென அனைத்திற்கும் மனைவி மற்றும் மருமகளை எதிர்பார்க்கிறார். அடுப்பில் சோறு பொங்க வேண்டும், வாஷிங் மிசின் பயன் படுத்தாமல் கைகளால் துணி துவைக்கவேண்டும், சட்னிகளை அம்மியில் அரைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

கணவருக்கோ அந்த மாமனாருக்கோ சற்றுமே அந்த வீட்டிற்கு வாழ வந்திருக்கும் பெண்ணின் மனநிலையைப் பற்றிய புரிதல்கள் இல்லை. வேலைக்கு செல்ல கூட தடை என்கிற ஆணாதிக்க மனப்பான்மைகளோடு வலம் வருகிறார்கள்.

மேலும் சபரிமலை விவகாரம், மாதவிடாய், தீட்டு, வீட்டு விலக்கு என பெண்கள் குறித்தான பிற்போக்கு தனங்களையும் தோலுரித்து காட்டுகிறது இத்திரைப்படம். ஐஸ்வர்யா ராஜேஷ் அருமையாக நடித்துள்ளார்.

மொத்தத்தில் பெண்கள் குறித்தான ஆண்களின் பார்வைகளை மாற்றக்கூடிய வலிமை கொண்டது இத்திரைப்படம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com