விமர்சனம் : வாத்தி - காலத்திற்கு தேவையான பாடம்!

விமர்சனம் : வாத்தி  - காலத்திற்கு தேவையான பாடம்!

ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு அரசு பள்ளியை மாற்றி காட்டலாம் என்பதற்கு உதாரணமாக வந்துள்ளது வாத்தி திரைப்படம்.

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். கணிதம் கற்றுக்கொள்ள திணறும் மாணவர்கள் சிலரின் கையில் ஒரு பழைய வீடியோ கேசட் கிடைக்கிறது.அந்த கேசட்டை டிவியில் இணைத்து பார்க்கும் போது அதில் ஒரு ஆசிரியர்  கணித பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்.    யார் இந்த ஆசிரியர் இந்த வீடியோ எப்போது எடுக்கப் பட்டது என்று தேடி போகிறார்கள் மாணவர்கள். கதை இருபது ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் முதலாளி  திருப்பதி  நோக்கில்  (சமுத்திரக்கனி )வணிக அரசு பள்ளிகளை எடுத்து நடத்த திட்டம் போடுகிறார். தன் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர் ஒருவரை  (தனுஷ் )  ஆந்திரா -தமிழக எல்லையில் உள்ள  சோழவரம் என்ற ஊரில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்ற அனுப்புகிறார். தனுஷ் பல முயற்சிகள் எடுத்து ஏழை மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகிறார். மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறுகிறார்கள். தனுஷ் செயல்பாட்டால் பொறாமைப்படும் தனியார் கல்வி நிறுவன முதலாளி சமுத்திரகனி தனுஷை மீண்டும் தனது நிறுவனத்தில் பணிபுரிய அழைக்கிறார்.ஆனால் தனுஷ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் கனி அரசியல் ரீதியாகவும், நேரடியாகவும் மாணவர்களுக்கும் பல்வேறு தொல்லை தருகிறார். இந்த பிரச்சனைகளை எதிர் கொண்டு தனுஷ் தீர்ப்பது தான் கதை. அரசு பள்ளிகள் தனியார் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கருத்து இங்கே முன் வைக்கப்படுகிறது. இது நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு வாத்தி படம் சிறந்த உதாரணம்.

சுவாரசியமாக சொல்ல வேண்டிய கருத்தை ஒரு பிரசாரமாக சொல்லி இருப்பது ஒரு குறைதான்.இருப்பினும் காட்சிகள் மூலமாக சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். ஜாதி தீண்டாமையை மாணவர்களின் மனதில் இருந்து அகற்ற இயற்பியல் பாடங்கள் speed மற்றும் velocity மூலம் புரிய வைப்பது, ஆசிரியரின் பாதம் வெயிலில் படாமல் இருக்க தண்ணீரை சாலையில் கொண்டு வருவது, ஒரு சினிமா தியேட்டரை பாடம் நடத்தும் இடமாக மாற்றுவது என சில காட்சிகளை சொல்லலாம். வாத்தியார் தனுஷ் ஆர்ப்பாட்டமாக இல்லாமல் பக்குவமாக நடித்திருக்கிறார். சம்யுக்தா அமைதியாக வந்து போகிறார். ஜி. வி. பிரகாஷ் இசை இனிமை. அரசு பள்ளியின் வெற்றி என்பது அரசு போடும் திட்டங்கள், தரும் நிதியிலும் மட்டும் இல்லை. அங்கு பணி புரியும் ஆசிரியர் மனதில்தான் உள்ளது என்பதை புரிய வைக்கிறார் இந்த வாத்தி. வாத்தி காலத்திற்கு தேவையான பாடம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com