குடும்பம் தான் உங்கள் அடையாளம் - 'வாரிசு' விமர்சனம்!

விஜய்
விஜய்

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளி வந்துள்ள படம் விஜய் நடித்துள்ள வாரிசு. கோடீஸ்வர தந்தை ராஜேந்திரனுடன் (சரத்குமார்) ஏற்படும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து செல்லும் மகன் விஜய் (படத்திலும் பெயர் விஜய்தான் ) தாயின் (ஜெயசுதா) வற்புறுத்துதலால் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வருகிறார் தந்தை, அண்ணன்கள் என குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் விஜய்யின் வருகை பிடிக்கவில்லை.

ராஜேந்திரன் தொழில் போட்டியார்கள் ராஜேந்திரனை வீழ்த்த நினைக்கிறார்கள். அப்பாவின் உடல் நிலை காரணமாக சேர்மன் பொறுப்பில் அமருகிறார் விஜய். அண்ணன்களும் எதிரிகளுடன் சேர்ந்து தம்பி விஜய்யை அழிக்க நினைக்கிறார்கள்.

இந்த சூழ்ச்சிகளையும், குழப்பத்தையும் முறியடித்து விஜய் வெற்றி பெறுவதை செண்டிமெண்ட், மாஸ் என கலந்து சொல்லியிருக்கிறார் டைரக்டர் வம்சி.

விஜய்
விஜய்

படம் தொடங்கி ஒரு சில காட்சிகளில் படத்தின் போக்கையும், முடிவையும் மிக எளிதாக பார்வையாளார்களால் தீர்மானிக்க முடிவது திரைக்கதையின் மிக பெரிய பலவீனம். குடும்பத்தில் பலர் இருந்தும் வீட்டில் ஒரு வெறுமை இருப்பதை டைரக்டர் நன்றாக உணர வைத்துள்ளார். யோகிபாபு இருந்தும் நகைச்சுவை இல்லை. டான்ஸ், ஸ்டைல் என இருக்கும் விஜய் இந்த படத்தில் தாய், தந்தை சகோதர பாசம் என மாறுபட்ட விஜய்யாக நடித்திருக்கிறார்.

அப்பாவிடம் கண்களால் பேசும் போது ஒரு மகன் இது போன்று அனைத்து வீட்டிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று உணர்வை வர வைக்கிறார். மிடுக்கான சரத்குமார், முகத்தில் அன்புக்கு ஏங்கும் அப்பவாக உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கிறார். ஜெயசுதா ஸ்ரீ காந்த், ஷாம், பிரகாஷ் ராஜ் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

ராஷ்மிகா மந்தனா வந்து போகிறார். படத்திற்கு நிறைய செலவு செய்தவர்கள் ராஷ்மிகாவின் ஆடைக்கும் கொஞ்சம் செலவு செய்து இருக்கலாம். பாடல் காட்சிகளில் அநியாய கவர்ச்சியாக வருகிறார். தமனின் இசையில் ரஞ்சிதமே பாடல் மட்டுமே சூப்பர். கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமும் உள்ளது. நுண்ணிய உணர்வும் உள்ளது.

 ரஞ்சிதமே பாடல்
ரஞ்சிதமே பாடல்

ஒருவன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள அவன் மரணத்தை பார்க்க வேண்டும் என்பது போன்ற வசனங்கள் யோசிக்க வைக்கிறது. ஒரு நல்ல கதையில் திரைக்கதையை வலுவாக்கியிருந்தால் இன்னமும் படம் நன்றாக இருந்திருக்கும். நீங்கள் யாராகயிருந்தாலும் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் குடும்பம்தான் உங்கள் அடையாளம் என்று சொல்கிறது வாரிசு.

வாரிசு -தந்தை -மகன் உறவும் -முரணும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com