wonder women
wonder women

WONDER WOMEN (2022) - திரை விமர்சனம்

பெண் ரசிகைகளுக்காக பெண் நடிகைகளை வைத்து ஒரு பெண் இயக்குநர் திரைக்கதை எழுதி உருவாக்கிய இந்தப்படம் பெண்களுக்கு மட்டுமல்ல பெண்களை  தன்னில் பாதியாக மதிக்க வேண்டிய ஆண்களுக்கும் சேர்த்துத்தான். மொத்தம் 80 நிமிடங்களே ஓடும் இந்தப்படத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான அடிப்படைப் பாடமாக, மன ரீதியாக , உடல் ரீதியாக அவர்கள் எப்படித்தயார் ஆக வேண்டும் என பாடம் எடுக்கும் படமாக இருக்கிறது 

ஏழு பெண்கள் மட்டுமே முக்கிய கதாபாத்திரங்கள்: கர்ப்பமான ஆறு பெண்களில் கர்ப்பவதிகளுக்கான பயிற்சி நடத்தும் ஒரு பெண்ணின் பெற்றோர் பராமரிப்பு மையத்தில் நிகழும் சம்பவங்கள் தான் கதை. அந்தப் பெண்கள் ஒரு வாட்சப் க்ரூப் ஓப்பன் பண்ணி அவர்களுடைய சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் . அந்த வாட்சப் க்ரூப்பின் பெயர் தான் வொண்டர் விமன் (அதிசயப் பெண்கள்). 

பெற்றோர் பராமரிப்பு மையம் நடத்தும் பெண்ணாக நதியா மிக கண்ணியமான தோற்றத்தில் ஒரு தாயாக , ஆசிரியையாக, தோழியாக படம் முழுக்க வந்து அங்கே இருக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறார்.

நித்யாமேனன் வசனங்களை நம்புவதை விட தன் முக பாவனைகளையே பெரிதும் நம்பி இருக்கிறார், அவரது உற்சாகமான சிரிப்பு அனைவர் மனதையும் எளிதில் கவர்ந்து விடுகிறது. 

பார்வதி திருவோத்து யாருடனும் சகஜமாகப் பழக விரும்பாத ரிசர்வ் டைப் பெண்ணாக வந்து க்ளைமாக்சில் மனம் மாறுபவராக கவனிக்க வைக்கும் நடிப்பு. 

பத்மப்ரியா, கணவனின் அன்போ, அரவணைப்போ கிடைக்காமல் எதற்கு எடுத்தாலும் மாமியார் தயவை நாட வேண்டியவராக வந்து பின் கணவரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்துபவராக கச்சிதமான குடும்பப்பாங்கான நடிப்பை வழங்கி இருக்கிறார். 

wonder women movie still
wonder women movie still

லிவ்விங் டுகெதர் லைஃப் மூலம் கர்ப்பம் ஆன சயனோரா தன் மொழி ஆளுமையாலும் விழி ஆளுமையாலும் ஆடியன்ஸ் மனதை எளிதில் கவர்கிறார். 

பராமரிப்பு மையத்தில் பணிபுரிந்து கொண்டே இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து மற்றவர்களுடன் பழகும் அர்ச்சனா பத்மினி பக்கத்துவீட்டுப்பெண் போல எளிமையான உடல் மொழியால் கவனம் ஈர்க்கிறார் 

ஏற்கனவே இருமுறை கர்ப்பம் ஆகி கலைந்த நிலையில் இதுதான் கடைசி வாய்ப்பு என டாக்டரால் எச்சரிக்கப்பட்ட அம்ருதா சுபாஷ் கண் கலங்க வைக்கும் நடிப்பை வழங்கி இருக்கிறார்.

இந்த ஏழு கதாபாத்திரங்கள் போக  அவரவர் கணவன், காதலன், மாமியார், கார்டியன் என சில பாத்திரங்கள் கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்திருக்கின்றனர். 

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அஞ்சலி மேனன் . ஒரு பெண்ணோட கஷ்டம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் எனும் ஃபார்முலாப்படி  கர்ப்பம் ஆன பெண்களுக்கு நிகழும் உளவியல் ரீதியான மாற்றங்கள், எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள், செய்ய வேண்டிய உடல் மற்றும் மன பயிற்சிகள் ஆகியவற்றை கச்சிதமாக பின்னி இருக்கிறார்.

மணிஷ் மாதவன் ஒளிப்பதிவில் கண்களை உறுத்தாத இயல்பான காட்சிகள் கவர்கின்றன. பிரவீன் பிரபாகரனின் எடிட்டிங்கில் கனகச்சிதமாக  72 நிமிடங்களில் படம் முடிகிறது.

இந்த படத்தைத் தயாரித்திருப்பவர்கள் இரு பெண்கள் என்பது கூடுதல் ஆச்சரியங்கள். இது ஜனரஞ்சகமான படம் அல்ல. அனைத்துத்தரப்பினரும் ரசிக்க முடியாது. பெண்களின் மனதைப் பெரிதும் கவரும் மெலோ டிராமா... சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி  என பல மொழிகள் பேசும் 6 வெவ்வேறு மாநில பெண்களை பாத்திரைப் படைப்பாக உருவாக்கியது புத்திசாலித்தனம்

ரசித்த வசனங்கள்

1) வலியை விட வேதனையானது வலி பற்றிய பயம் தான் 

2) பய உணர்வு உங்களை ஆட்கொள்ள நீங்கள் விடவே கூடாது 

3) ஒவ்வொரு குழந்தையும் இயற்கையின் ஒரு அதிசயம் தான்

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com