ஏதிலிகளின் குரல்களை ஒலிக்கும் யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
இலங்கை தமிழர் பிரச்சனைகளை பற்றி பேசும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் பலர் வீராவேசமாக உணர்ச்சி பொங்க பேசுவார்கள். ஆனால் நம் ஊரில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி பேசமாட்டார்கள். அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாததே இதற்கு காரணம். ஒரு இலங்கை அகதியின் பார்வையில் சந்திக்கும் பிரச்சனையாக வந்துள்ளது யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம்.
இப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோஹிந்த் இயக்கி உள்ளார். இலங்கையின் மோசமான போர் சூழலில் ஆதரவு அற்ற சிறுவன் புனிதனை பாதிரியார் ஒருவர் லண்டனில் உள்ள இசை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். செல்லும் வழியில் ராணுவத்தினர் பிடியில் மாட்டி சிறையில் அடைக்கப் படுகிறான். விடுதலை அடைந்து கள்ள தோணியில் கேரளா செல்கிறான். அங்கே உள்ள இசை கருவிகள் செய்யும் கடையில் வேலை செய்கிறான்.லண்டன் இசைப்பளியில் போட்டியில் ஆன் லைன் மூலமாக கலந்து கொள்கிறான்.எந்த ஒரு நாட்டின் குடியுரிமையும் இல்லாததால் நிராகிக்கப்படுகிறான். இந்த உரிமையை பெற நடக்கும் போராட்டமே இந்த படத்தின் கதை. படம் ஆரம்பித்து சில காட்சிகள் சென்ற பின் கதை நமக்குள் பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறது.இலங்கை அகதிகளை நமது அரசு குறிப்பாக காவல் துறையினர் நடத்தும் விதம் பற்றி சரியாக பதிவு செய்துள்ளார் இயக்குனர்.முள்ளி வாய்க்காலின் மரண ஓலம் படம் விட்டு வெளியே வந்த பின்பும் நமக்கு கேட்டு கொண்டே இருக்கிறது. வெற்றிவேலின் ஒளிப் பதிவும் நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் வலியையும், உணர்வையும் நமக்கு சரியாக கடத்தி உள்ளது. ஒரு இலங்கை அகதியாக இலங்கை தமிழில் பேசி சிறப்பாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மறைந்த விவேக் நடிப்பை பார்க்கும் போது 'வி மிஸ் யு விவேக் சார் 'என்று சொல்ல தோன்றுகிறது. மேகா ஆகாஷ், கனிகா, மகிழ் திருமேனி என அனைவரும் சரியான கதாப்பாத்திர தேர்வுகள்.நாட்டின் எல்லை கோடுகள் நிர்வாக வசதிக்கு மட்டுமே என கிளாமாக்ஸ் வசனம் நம்மை யோசிக்க வைக்கிறது. கணியன் பூகுன்றனாரின் வரியை படத்தின் டைட்டிலாக வைத்து அன்பையும், மனிதத்தையும் சொல்கிறது இப்படம்.யாதும் ஊரே யாவரும் கேளிர் -டைரக்டருக்கு ஒரு ராயல் சலுயூட்.