யாத்திசை - ரத்த சரித்திரம்: விமர்சனம்!
சமீப காலமாக இந்திய, தமிழ் சினிமாக்களில் வரலாற்றின் வேர்களை தேடி படம் எடுக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இது போன்று நமது வரலாற்றை தேடும் ஒரு முயற்சிதான் யாத்திசை திரைப்படம்.
தரணி ராசேந்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார். யாத்திசை என்றால் தென்திசை என்று அர்த்தம். தென் தமிழகத்தில் நடக்கும் போரை பற்றி சொல்கிறது இந்த படம். தென்திசையில் சேர, சோழ மன்னர்களை வென்று மிகப்பெரிய மன்னராக இருக்கிறார் ரண தீர பண்டியன். எயின குடியில் பிறந்த கொதி என்ற வாலிபன் ரண தீரணை படை சேர்த்து எதிர்க்க துணிகிறான். சோழர்களின் உதவியை கேட்க முயற்சிக்கிறான். தன்னிடம் இருக்கும் சிறு படையை கொண்டு பாண்டிய அரசனின் படையை தாக்கி கோட்டையை கைப்பற்றுகிறான். இதனால் கோபமடையும் ரண தீர பண்டியன் பள்ளிபடைகளின் உதவியை நாடி பெரும் படை திரட்டி, கொதியின் படையை சின்னா பின்னமாக்குகிறார். எதிர் பார்த்த உதவி சோழர்களிடம் இருந்து கிடைக்காததால் நிலைதடுமாறும் கொதி பாண்டியனை நேருக்கு நேர் நின்று போர் செய்ய கூவல் விடுக்கிறான். இருவரும் ஆக் கோராஷமாக மோதிக்கொள்கிறார்கள். இறு தியில் கொதி கொல்லப்படுகிறான்.
எயின கூட்டம், தேவரடியார்கள், பள்ளிபடை என பல விஷயங்களை பேசியிருந்தாலும் எதையும் ஆழமாக பேசாததால் நம்மால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அதீதமான போர் வன்முறை காட்சிகள் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கிறது. படத்தில் வரும் அனி மேஷன் காட்சிகள் தனியாக தெரிகிறது. போருக்கு முந்தய பலியிடும் காட்சிகள் நம்மை சில்லிட வைக்கிறது. ரஞ்சித் குமாரின் கலை 7ஆம் நூற்றாண்டு காலத்தை கண் முன் நிறுத்துகிறது. சக்ரவர்த்தியின் இசைக்கும் சுரேஷ் குமாரின் உடைக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
ரண தீரணாக ஷக்தி மித்ரனும், கொதியாக சேயோனும் உடல் மொழியிலும், நடிப்பிலும் வாழ்ந்திருக்கிறார்கள். பலி செய்யும் சாமியாராக குரு சோமசுந்தரம் குரல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக களத்தை காட்டுகிறார். படத்தில் சில குறைகள் இருந்தாலும் முற்றிலும் புதியவர்களை வைத்து இப்படி ஒரு வரலாற்று படத்தை தந்த முயற்சிக்கு டைரக்டரை பாராட்டலாம்.