
பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி,ராஷி கண்ணா நடித்து வெளிவந்துள்ள படம் சர்தார். தனது தந்தை ஒரு தேச துரோகி என்ற அவ பெயரோடு வாழ்ந்து வருகிறார் இன்ஸ்பெக்டர் விஜய் பிரகாஷ். ஒரு வழக்கில் தந்தை பற்றிய சில தடயங்களை கண்டு பிடிக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை சர்தார் என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் உளவு பிரிவில் இருந்தார் என்று தெரிய வருகிறது.
சீன நாட்டின் உதவியோடு இந்திய உளவு பிரிவில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் நம் நாட்டின் நீர் ஆதாரத்தை கொள்ளையடிக்க பார்க்கிறார்கள். இதை தடுக்க முயற்சிக்கும் சர்தாருக்கு தேச துரோகி என்ற பட்டம் கிடைக்கிறது. பங்களா தேஷ் சிறையில் இருக்கும் சர்தார் முப்பது ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து தப்பிக்கிறார்.
தண்ணீர் கொள்ளை திட்டம் என்ன ஆனது, சர்தார் மீதான அவப் பெயர் நீங்கியதா என்பதை படம் சொல்கிறது. அதே சூட் கோட் அணிந்த கார்ப்பரேட் வில்லன், நிலத்திற்கு பதிலாக நீர்,போராட்டம் என நாம் இதற்கு முன் நாம் பார்த்த பல இயற்கை பிரச்சனை என அப்படியே இப்படத்திலும் இருக்கிறது. ராணுவம், சீனா, பாகிஸ்தான் ரா அமைப்பு என கொஞ்சம் சேர்த்து இருக்கிறார்கள் முதல் பாதி எந்த விறுவிறுப்பும் இல்லாமல் செல்கிறது. இரண்டாம் பாதி வேகம் எடுத்தாலும் கிளைமாக்ஸ் பல படங்களில் பார்த்ததாக உள்ளது.
இரட்டை வேட கார்த்தியில் சர்தார் கார்த்தி ஈர்க்கிறார்.வயதான தோற்றத்தில் ஆக்ஷன் காட்டுவது என வெவ்வேறு தளத்தில் பயணிக்கிறார். ராஷி கண்ணாவிற்கும், லைலாவிற்கும் பெரிய வேலை இல்லை படத்தில் வசனம் வரும் பல காட்சிகளில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை வந்து முழுமையாக வசனத்தை கேட்க முடியாமல் செய்து விடுகிறது. இசை சுகமாக இல்லாமல் சுமையாக இருக்கிறது. கதிரின் கலையில் பங்களாதேஷின் சிறை நேர்த்தியாக இருக்கிறது. நமக்கு தேவையான நீர் பிரச்சனைதான். ஆனால் திரைக்கதை தெளிவாக இருந்திருந்தால் சர்தாரை கொண்டாடி இருக்கலாம். சர்தார் மெசேஜ் மட்டும் சிறப்பு.