பயணிகள் கவனிக்கவும்: வித்தார்த் நேர்காணல்!

பயணிகள் கவனிக்கவும்:  வித்தார்த் நேர்காணல்!

பேட்டி: ராகவ் குமார்.

தமிழ் சினிமாவில் எப்போதாவது சில படங்கள் தந்தாலும் மனதில் நிற்கும் படியான பட ங்களை தந்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார வித்தார்த். இந்த ஆண்டு தொடக்கத்தில் கார்பன் என்ற வித்தியாசமான படத்தில் நடித்தார். இப்போது 'பயணிகள் கவனிக்கவும்' படத்தில், நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

மலையாள படத்தின் ரீமேக்கான 'பயணிகள் கவனிக்கவும்' படம் சிறப்பாக இருப்பதற்கு காரணம் வித்தார்தின் நடிப்புதான் என்று போற்றப்படுகிறது. அந்தளவு – பொதுவாக ஹீரோக்கள் நடிக்கத் தயங்கும் காது கேட்காத, வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார்.

படம் வெற்றிபெற்றதற்கு வித்தார்த்த்துக்கு வாழ்த்துக்கள் வந்து கொண்டே இருக்க, நமக்கு நேரம் ஒதுக்கி பேசினார்.

சில படங்களில் நடித்தாலும் செலக்டிவ்வான படங்களில் நடிக்கிறீங்களே…

உண்மைதான். நான் செலக்டிவ்வாக எனக்கு பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சில படங்களின் திரைக்கதைகள் அதுவாகவே என்னை தேர்ந்தெடுத்து கொள்கின்றன. எது எப்படி இருந்தாலும் நல்ல படங்கள் அமைவது மகிழ்ச்சிதான்.

இப்படத்தில் நடித்தது போல காது கேட்காத வாய்பேச முடியாத நபர்களை சந்தித்தது உண்டா?

எங்கள் ஊரில் ஸ்ரீனிவாஸ் என்று ஒரு நபர் இருந்தார் இவர் காது கேட்காத வாய் பேச முடியாத நபர்.. அவரை கவனித்திருக்கிறேன். நான் சினிமாவில் நடிக்க வந்த பிறகு இவரை போல ஒரு நபரின் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். 'பயணிகள் கவனிக்கவும்' டைரக்டர் சக்திவேல் மூலமாக இந்த ஆசை நிறைவேறியது.

சைகைகள் மூலமாக குறைந்த ஒலியளவில் பேசுகிறீர்கள். .இதற்கு தனியாக பயிற்சி எடுத்தீர்களா?

இந்த பிரச்சனை உள்ளவர்களில் பெரும்பாலும் செவித்திறன் குறைபாடு இருக்கும்.ஆனால் குரல்வளை எனப்படும் வோக்கல் கார்டில் பிரச்சனை இருக்காது. கருவிகளின் துணை கொண்டு காது கேட்கும் போது ஓரளவு பேச ஆரம்பிப்பார்கள். இது போன்றுதான் நான் படத்தில் பேசினேன். இந்த கேரக்டர் என்று முடிவு செய்தவுடன் டைரக்டர்  சக்திவேல் எனக்கு ராமகிருஷ்ணன் என்ற பயிற்சியாளரை ஏற்பாடு செய்து பயிற்சி தந்தார். என் நடிப்பு சிறப்பாக இருப்பதற்கு இவர் தந்த நடிப்பும் ஒரு காரணம்

'மின்னலே' படம் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக நடிக்கிறீர்கள். இன்னமும் பாப்புலராக வரவில்லையே…

ஒரு வேளை நான் கமர்சியல் படங்களில் நடித்து இருந்தால் இன்னமும் பாப்புலர் ஆகி இருக்கலாம்

கூத்துப்பட்டறை முத்துசாமி என்றவுடன் நினைவுக்கு வருவது எது?

எனக்கு முத்துசாமி சார் ஆசான் மட்டும் கிடையாது. வாழ்க்கையை சரியாக  புரியவைத்தவர்.நான் பள்ளியில் படித்ததை விட இவரின் பட்டறையில் படித்ததுதான் அதிகம். ஒரு மனிதன் சரியான பாதையில் செல்ல வழிவகை செய்தவர் என் ஆசான்.

நீங்கள், பசுபதி, விமல் என பல நடிகர்கள் ஒரு இயக்கமாக கூத்து பட்டறையில் இருந்து சினிமாவிற்கு வந்தீர்கள். இப்போது அதிகம் வருவதில்லையே?

முதலில் கூத்து பட்டறை என்பது சினிமாவிற்கு நடிகர்களை தயார் செய்யும் அமைப்பு அல்ல. நிகழ்ச்சிகளுக்கு நடிகர்களை தயார் செய்யும் இடம். ஆனால் கூதுப்பட்டறையிலிருந்து சினிமாவிற்கு வந்தால் கண்டிப்பாக நல்ல நடிப்பை தருவார்கள். அதேசமயம் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அனைவரும் சினிமாவுக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது. அங்கே பயிற்சி பெற்ற முருகன் என்பவர் இப்போது கூத்து கலை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்.இவர் ஏன் சினிமாவிற்கு வர வில்லை என்று கேட்க முடியாது. இப்படி பலரும் பல விதங்களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்…..

மனைவி காயத்ரி தேவி கிரிமினாலஜியில் பி ஹெ ச் டி படிப்பு முடித்தவர். மகள் காதம்பரி பள்ளி படிக்கிறார்.

உங்கள் மனைவியிடம் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதைகள் இருக்குமே.. அதை வாங்கி நடிக்க வாய்ப்புள்ளதா?

என் மனவி சமூக அக்கறை கொண்ட கதையை எழுதி வைத்துள்ளார்.சரியான தயாரிப்பாளரும் இயக்குனரும் கிடைக்கும்போது இந்த கதையை படமாக்கி நடிப்பேன்.-ராகவ் குமார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com