RRR … (ரத்தம், ரணம், ரௌத்ரம்)!

RRR … (ரத்தம், ரணம், ரௌத்ரம்)!

– லதானந்த்

ஒரு அபகரிக்கப்பட்ட சிறுமியை ஆதிவாசி இளைஞன் (ஜூனியர் என்.டி.ஆர்) , மீட்க முயல்வதும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதங்கள் திரட்டுவதற்காக அவர்கள் அரசாங்கத்திலேயே காவல்துறை அதிகாரியாக இன்னோர் இளைஞன் (ராம்சரண்) களமாடுவதும், இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட பிறகு நிகழும் திருப்பங்களும்தான் RRR-ன் ஒன்லைன் ஸ்டோரி!

இதில் 3D தொழில்நுட்ப வசதி மிகத் திறமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நம்மீதே தண்ணீர்த் திவலைகள் தெறிப்பது போலவும், தீக் கங்குகள் பாய்வதுபோலவும், அம்பு மற்றும் தோட்டக்கள் சீறி வருவதுபோலவும் உணரவைக்கிறார்கள். (ஆனால் திரையரங்குகளில் 3D கண்ணாடியின் தற்காலிகப் பயன்பாட்டுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிப்பது டூ மச்.)

டைட்டில் கார்டில், 'கதை, இயக்கம் ராஜமௌலி' எனப் போடும்போதே ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தில்  அனல் பறக்கிறது.

இறுகிய முகத்தோடு வளைய வரும் காவல்துறை அதிகாரி ராம்சரணும், சிறுமியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை முகத்தில் தேக்கியபடி நடமாடும் ஜூனியர் என்டிஆரும் சிறப்பான நடிப்பைப் போட்டிபோட்டுக்கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

வேண்டாதவர்களைக் கொல்வதற்குத் துப்பாக்கியின் தோட்டாவை வீணடிக்கக்கூடாது என்ற விளக்கத்துக்குப் பின்னர் வரும் காட்சி ஈரல் குலையை நடுங்கவைக்கிறது. படத்தின் இன்னோர் இடத்திலும் அதே வசனம் வேறு விதமாகக் கையாளப்பட்டிருக்கிறது.

கல்கத்தாவில் லாலா லஜபதிராயைக் கைது செய்ததன் எதிரொலியாக நடக்கும் டில்லி கிளர்ச்சியை ராம்சரண் ஒடுக்கும் காட்சிகள் பிரம்மாண்டத்துக்கு உதாரணம்.

'ஆட்டுக்குட்டி தொலைந்துபோனால், புலி வாயிலிருந்துகூட மீட்டுவிடுவார்; அப்படிப்பட்டவர் அபகரிக்கப்பட்ட சிறுமியை நிச்சயம் மீட்பார்' என ஆரம்பத்தில் ஜூனியர் என்டிஆரின் வருகைக்கு ஏக பில்டப் கொடுக்கிறார்கள். அதை அவர் நியாயப்படுத்தவும் செய்கிறார்.

படம் ஆரம்பித்தது முதல் முடியும்வரை திரையரங்கில் அசாதாரணமான மௌனம் நிலவுகிறது. பார்பவர்களைப் படத்தோடு அந்த அளவுக்கு ஒன்றிப்போகச் செய்துவிடுகிறார்கள். சபாஷ்! கீழே கைக்குட்டை விழுந்தாலும் குனிந்து எடுக்கவிடாமல் படத்தின் பரபரப்பு நம்மைத் திரையை நோக்கி ஒட்டவைத்துக்கொள்கிறது. அவ்வளவு ஏன்… கட்டக் கடைசியில் படம் முடிந்த பின்னர் கதாநாயகர்கள் இருவரும் சேர்ந்து ஆடும் பாடலின்போதுகூட ரசிகர்கள் எழுந்து செல்லாமல் ரசிக்கின்றனர்.

வெள்ளைக்கார துரையின் மேலை நாட்டு நடனபாணிக்கு சவால்விடும் வகையில் சரணும், ஜூனியரும் ஆடும் 'நாட்டுக் கூத்து' நடனத்தின்போது விசில் பறக்கிறது.

படத்தில் ஆக்‌ஷன் இருக்கும் அளவுக்கு சென்டிமென்ட் இல்லை என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

பீரியட் படம் என்பதை அழுத்தமாகப் பதியவைக்கும் வண்ணம், வாகனங்கள், ஆடையலங்காரங்கள் , கட்டுமானங்கள் போன்றவவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் எவ்வளவு பிரம்மாண்டம்… எவ்வளவு துணை நடிகர்கள்… மலைத்துப்போய்விடுகிறோம்.

இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரம் கதை வேறொரு தளத்தில் சஞ்சரிக்கிறது. ஆனால் அதுவும் மெயின் கதைக்கு உறுதுணையாகவும் விறுவிறுப்பாகவுமே செல்கிறது.

பாடல்காட்சிகளில் – அந்தக் கால காந்தாராவ் தெலுங்கு டப்பிங் படங்களைப்போல – தமிழ் மொழி அந்நியமாகத் தெரிகிறது.

படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கும், கலை இயக்குநர் பாபு சிரிலுக்கும், இசையமைப்பாளர் மரகமணிக்கும் பாராட்டுகள்!

முழங்கால் பெயர்க்கப்பட்ட ராம் சரணைத் தோளில் சுமந்தபடி எதிரிகளை ஜூனியர் என்டிஆர் பந்தாடுகிறார். எல்லாம் சரிதான்… ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு எதிரிகளை ராம்சரண் பாய்ந்து பாய்ந்து எப்படிப் பந்தாடுகிறார் என்று தெரியவில்லை. மேலும் அவரது அம்புறாவின் கொள்ளளவு எவ்வளவு என்றும் வியப்பேற்படுகிறது. காரணம், அம்புகளைத் தொடர்ந்துவிட்டுக்கொண்டே இருக்கிறார்.

ஒற்றைக் காலால் மோட்டார் சைக்கிளை மிதித்து மேலே சுழலச் செய்து, அதைக் கையில் பிடித்து எதிரிகள் மேல் வீசும் காட்சிகள் நகைச்சுவை மிகுந்த காட்சிக்கு உதாரணம்.

வில்லனின் ரத்தம் அந்நிய ஆட்சி சிம்பலின்மேல் சிந்துவது நல்ல குறியீடு!

மொத்தத்தில் RRR = Right, Right, Right

************

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com