கடைசியாக 2016இல் டி20 ஐசிசி உலகக் கோப்பை நடந்த பிறகு, 2018இல் உலகக் கோப்பை டி20 நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், அணிகளின் பரஸ்பர திட்டங்கள் காரணமாக அது நடக்கவில்லை.2020இல் டி20 உலகக் கோப்பை திட்டமிடப்பட்டபோதும், கொரோனா பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக நடைபெறவில்லை. கடைசியில் ஐந்து ஆண்டு இடைவேளைக்குப் பிறகு டி20 போட்டிகள் தொடங்கின. போட்டியை இந்தியா நடத்துகிறது என்றாலும், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த உலகக் கோப்பை நீண்டதாக இருக்கப் போகிறது. அதாவது, மொத்த ஆட்டத்தின் காலம் 29 நாட்களுக்கு இருக்கும். இதில் 16 அணிகள் 45 ஆட்டங்களில் எதிர்கொள்ளும். முதலாவது ஆட்டம் அக்டோபர் 17ஆம் தேதி துபாயில் தொடங்கியது. ஆடும் அணிகள் இந்தியாவும் – பாக்கிஸ்தான் என்பதால் இரண்டு நாடுகளிலும் மிகுந்த எதிர்பார்ப்பு… பரபரப்பு… தீவிரமான பயிற்சிகள்… விசேஷ பிரார்த்தனைகள்… போன்றவை இரண்டு நாடுகளிலும் ரசிகர்களை ஆர்வத்தின் விளிம்பில் நிறுத்தியிருந்தன.