சைக்கிளில் வந்த கடவுள்!

சைக்கிளில் வந்த கடவுள்!

பி.கே.மகேஷ்

ல வருடங்களுக்கு முன் ஒரு பண்டிகைக்கால விடுமுறையின்போது என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!

நான் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை செய்து கொண்டிருந்த காலம் அது. அன்று சரஸ்வதி பூஜை நாள். அலுவலகத்தில் பூஜையை முடித்து விட்டு, மதியமே வீட்டிற்குக் கிளம்பி விட்டனர். நானும் சில முக்கியமானப் பணிகளை முடித்த பின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். தினமும் நெரிசலான அந்த ரோடு, இன்று ஆயுத பூஜை விடுமுறை தினம் என்பதால் வெறிச்சோடிக் கிடந்தது. வெளிச்சமும் குறைவாகவே இருந்தது.

நான் எனது வண்டியில் ஒரு குறுக்கு சாலையை கடந்தபோது, சற்று தொலைவில் ஒருவர் சைக்கிள் ஓட்டி வருவதைக் கண்டேன். அவர் மிகவும் தடுமாற்றத்துடன் சைக்கிளை ஓட்டி வந்தார். ஒரு கட்டத்தில் திடீரென்று அவரது சைக்கிள் மண்ணில் அழுந்தி தடம் புரண்டு கீழே விழுந்தது. சைக்கிளை ஓட்டி வந்த அந்த ஆசாமியும் கீழே விழுந்து கிடந்தார். சைக்கிள் சாயும்போது அதன் கேரியரில் இருந்து ஏதோ ஒரு கனத்த பொருளும் மண்ணில் உருண்டு விழுந்ததைக் கண்டேன்.

அவருக்கு உதவலாம் என எனது வண்டியை விட்டு இறங்கி ஓடினேன். என்னுடன் உதவிக்கு வர ஒருவரும் அங்கு இல்லை. சைக்கிளில் இருந்து விழுந்த நபருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும். மெலிந்த தேகத்துடன் அழுக்கு படிந்த கட்டம் போட சட்டையும் நீல நிற பூப்போட்ட லுங்கியும் அணிந்திருந்த அவர், மல்லாக்க விழுந்துக் கிடந்தார். வரிடம், ''என்னப்பா? அடி பலமாகப் பட்டிருக்கா?" என்றேன்.

''ம்ம்கீழரோட்டிலே ம்ம்…" என்று முனகினார். அவர் பேசுவது தெளிவாகப் புரியவில்லை. அவரை மெதுவாகத் தூக்கி, கையைப் பிடித்து ரோட்டின் ஓரமாக உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தேன். எப்படி அவர் விழுந்தார் என்று பார்த்தபோது, அங்கே மண்ணும் சகதியுமாக இருந்தது.

''எங்கிருந்து வர்றீங்க? திரும்பவும் உங்களால சைக்கிள்ல போக முடியுமா?" என்று கேட்டேன். அதுக்கு அவர், ''அங்கே... உடுப்பி ஓட்டல்ல வேலை செய்றேன் சார்ம்ம்அப்பாலேசரக்கு மாஸ்டர்கொய்வி…" என்று முனகினார். அவர் பேச்சிலிருந்து அவர் சாராயம் குடித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அதோடு, அவர் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் சரக்கு மாஸ்டருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்தது. கிரைண்டர் பழுது அடைந்ததால் அதன் குழவியை சரிசெய்ய தனது சைக்கிள் கேரியரில் கட்டி, ரிப்பேர் சரி செய்து வருவதற்குக் கிளம்பினார். ரிப்பேர் கடைக்குப் போகும் வழியில்தான் இந்த சம்பவம் நடந்தது.

''கீழே விழுந்த குழவி எங்கேன்னு பார்?" என்று அவரிடம் தேடச் சொன்னேன். அங்கே ஒரு சிறிய ஆலமரம் இருந்தது, அதன் அருகே புல்வெளி அடர்த்தியாய் இருந்ததினால் கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை. அவர் காலால் தடவி புல் புதர்களில் தேடிப் பார்த்தார். எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து, புல்வெளியை காலால் எட்டி உதைத்தார். சுய நினைவு இல்லாததால் பொத்தென்று மறுபடியும் கீழே விழுந்தார். சிறிது நேரம் அப்படியே விழுந்து கிடக்க, நான் அருகில் சென்று கை கொடுத்து தூக்க முயன்றேன். உதவி மறுத்து அவரே மெல்ல எழுந்தார்.

சைக்கிளை ஓரமாக நிற்க வைத்து, ஸ்டாண்ட் போட முயன்றார். காலால் பின் சக்கரத்தின் கீழே இரண்டு மூன்று முறை தேய்த்து ஏதோ செய்தார். பிறகு சைக்கிளை கையிலிருந்து விட அது, 'தொப்'பென்று சாய்ந்து விழந்தது. நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, சைக்கிள்காரர் தொலைத்த குழவியைத் தேடச் சென்றேன்.

மாலை வெளிச்சம் மெல்ல மெல்லக் குறைய, இருட்டு கவிழ்ந்தது. பொறுமை இழந்த அந்த நபர், ''சார் நான் அப்பாலே வந்து தேடறேன்" என்றவாறு சைக்கிளை கஷ்டப்பட்டு நிற்க வைத்து, ஒருவழியாக வந்த வழியே ஏறிச் சென்றார். இடமும் வலமும் என, ரோட்டில் போராடிக்கொண்டு மெல்ல என் கண்களிலிருந்து மறைந்தார். அப்பொழுது காக்கி உடை அணிந்த ஒரு பெரியவர், என்னிடம் வந்து, ''என்ன சார் ஏதாவது பிரச்னையா?" என்று கேட்டார்.

"இல்லை ஒருத்தர் சைக்கிள்ல கொண்டு வந்த குழவியை தவற விட்டுட்டு, எடுக்க முடியாம போய்விட்டார் " என்றேன்.

"அவன் பெரிய குடிகாரன் சார் எட்டு வருஷமா குடிச்சு குடிச்சு, அவன் சொத்த பூரா அழிச்சிட்டான். அவன் பொண்டாட்டி தூக்கு மாட்டிக்குனு செத்துப்போச்சு. ஒரு பெண் குழந்தை வேற இருக்குது. அது அவங்க ஆயா வூட்லே படிக்கிது" என்று கூறினார்.

''உங்களுக்கு ரொம்பப் பழக்கமானவரா? அவரைப் பத்தி நிறைய தெரிஞ்சு வெச்சு இருக்கீங்க…" என்றேன்.

''நான் பக்கத்துல இருக்கிற எஸ்.கே.ஸ்டீல் பாக்டரியிலே செக்யூரிட்டியா வேலை செய்றேன் சார்…." என்று சொல்ல ஆரம்பித்தார்.

''இவன் பேரு சங்கர்மெயின் ரோட்ல காயலாங்கடை வச்சுக்கினு இருந்தான் சார். எங்க பாக்டரிக்கும் அடிக்கடி வந்து போவான். வண்டி எல்லாம் வெச்சிகினு நல்லதான் வாழ்ந்தான் சார். என்ன ஆச்சுன்னு தெரியலே போதாத நேரம் குடி போதைக்கு அடிமை ஆயிட்டான்" என்ற அவரது குரலில் வருத்தம் தெரிந்தது.

''எல்லாத்தையும் அழிச்சுட்டு, இப்போ அந்த ஓட்டல் வேலைக்கு வந்து இருக்கான். அந்த ஓட்டல் ஓனர் மட்டும்தான் இவன் செய்ற அமர்க்களத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டு இருக்காரு" என்று சொன்னவாறு மெதுவாக நடக்கத் தொடங்கினர்.

அந்த சைக்கிள்காரரின் கதையைக் கேட்க, கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது. அன்று வீட்டிற்குச் சென்று இரவு உணவிற்குப் பின் கட்டிலில் சோர்வாகச் சாய்ந்தேன். மாலை நடந்த சம்பவங்கள் அனைத்தும் காட்சிகளாக எனது மனத்திரையில் ஓடின. பிறகு தூக்கத்தில் அசந்து விட்டேன்.

நான்கு நாட்கள் விடுமுறை எப்படிக் கழிந்தது என்றே தெரியவில்லை. அன்று திங்கட்கிழமை வழக்கம் போல் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எனது வண்டி வழக்கமான ஒரு குறுக்கு சந்திலிருந்து விரிவான சாலையை நெருங்கியதும், சற்று தொலைவில் சாலை ஓரமாக ஒரு மரத்தடியில் பரபரப்பாக ஒரு ஜனக் கூட்டம். அனைவரும் ஆவேசத்துடன் காணப்பட்டனர்.

அந்த மரம், ரோட்டோர புல்வெளி எனக்கு ரொம்பப் பழக்கமான இடமாகத் தெரிந்தது. 'அட, ஆமாம் நான்கு நாள் முன் இங்குதான் ஒரு ஆசாமி சைக்கிளில் இருந்து விழுந்தார். நானும் அவருக்கு உதவி செய்தேன். பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லையே' என்று நினைவுக்கு வந்தது.

வண்டியை சாலை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, நடக்கும் சம்பவத்தை கவனித்தேன். அந்த மரத்தின் கீழ் நான்கு கம்பங்கால் நட்டு, மஞ்சள் துணி ஒன்றை சுற்றி இருந்தனர். அங்கு காவி அணிந்து, தாடியும் ஜடாமுடியும் கொண்ட ஒரு ஆசாமி உரக்க மந்திரங்களும், கூட சில சாமி பாடல்களை உச்சிரித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவர் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தார். வந்தவரிடம், ''என்னப்பா அங்கே கூட்டம்? ஏதாவது பிரச்னையா?" என்று கேட்டேன். என் அருகில் நின்றிருந்தவர்களும் அவரிடம் இருந்து ஆவலுடன் பதிலை எதிர்பார்த்தனர்.

''ஒண்ணும் பிரச்னைல்லை சார். இன்னிக்குக் காலைலே அந்த ஆலமரத்துக்குக் கீழே சுயம்பு லிங்கம் ஒண்ணு தென்பட்டுச்சாம். அந்த ஜடா சாமியார் அதைப் பத்தி குறி சொல்ல, இந்தத் தொழில்பேட்டைக்கு ஏதோ நல்லது நடக்கப்போகுதாம்" என்றார். பக்கத்தில் இருந்த சிலர் பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டனர். இன்னும் சிலர் கடவுளின் நாமத்தை ஆவேசத்துடன் உச்சரித்தனர்.

பத்து நிமிடங்களுக்கு மேலாயிற்று. அலுவலகத்திற்கு நேரமாக, குழப்பத்துடன் கிளம்பத் தயாரானேன். அப்பொழுது அந்த ஆலமரத்தடியிலிருந்து, ''சார்" என்று ஒரு குரல் வந்தது. திரும்பிப் பார்க்கையில் ஒரு ஆசாமி என்னை நோக்கிக் கையைக் காண்பித்தார். மெலிந்த முகம், நெற்றியில் திருநீறு பட்டை, தலை முடி ஈரத்துடன் வாராமல் விரித்து விடப்பட்டவாறு காணப்பட்டார். யார் எனப் புரியாமல் அலுவலகத்தை நோக்கி நகர்ந்தேன்.

'பழக்கப்பட்ட ஒரு முகம்யாராக இருக்கும்?' மனது அதைப் பற்றி அலசத் தொடங்கியது. அந்த ஆசாமி முகத்தை யோசனை செய்தேன். "அட, நம்ம சைக்கிள்காரர்தானே அங்கே கூட்டத்திலிருந்து எனக்குக் கை காட்டினது!"

லுவலகத்தில் அன்று வேலை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. மாலை வீட்டுக்குப் புறப்பட்டேன். தொழில்பேட்டை சாலை வந்ததும் மனம் விழித்துக் கொண்டது. காலையில் கண்ட சம்பவம் நினைவிற்கு வந்தது. 'இந்தக் காலத்திலும் இதுபோல் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதா?' என்று எண்ணினேன்.

அந்த குறுக்கு சாலையில் நுழைந்ததும் ஒரு அம்பது மீட்டர் தூரத்தில் சாலையின் இடப்பக்கம் மின்விளக்கின் வெளிச்சம் கண்களைப் பறித்தது. மெதுவாக வண்டியை நிறுத்திவிட்டு, ஜனக்கூட்டத்தை நோக்கி நகர்ந்தேன். திருவிழா கோலமாகக் காணப்பட்டது. அந்த ஆலமரத்தின் கீழ் ஒரு சிறிய கட்டமைப்பு நான்கடி உயரத்திற்கு அமைக்கப்பட்டு இருந்தது. வெள்ளை நிற பீங்கான் ஓடுகள் கொண்டு வெளிப்புறத்தை அழகாக வடிவமைத்திருந்தனர். பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். ஒரு கம்பீரக் குரல் கடவுளைப் போற்றி உடுக்கை அடித்துக்கொண்டு, பாட்டு பாடிக்கொண்டிருந்தது. கூட்டத்தை எட்டிப் பார்த்தபோது, காலையில் பார்த்த சடை முடி சாமியார்தான் உடுக்கையுடன் பரவசமாகப் பாடிக்கொண்டிருந்தார். குழப்பத்துடன் சற்று நடந்தவற்றை பின்னோக்கி ஆலோசித்தேன்.

போன வரம் ஒரு சைக்கிள்காரர் நழுவவிட்ட மாவாட்டும் இயந்திரத்தின் குழவி இன்று காலை அதே இடத்தில் ஒரு சிவன் கோயில் எழும்பி விட்டது.

என் சிந்தனை பல கோணங்களில் செல்லத் தொடங்கியது. அப்பொழுது ஒரு மணி சத்தம் எனது கவனத்தை ஆலமரத்தடி பக்கம் திருப்பியது. அந்தணர் ஒருவர் மந்திர உச்சரிப்புடன் சிவலிங்கத்திற்கு ஆரத்தி எடுக்க, கூடி இருந்த ஜனங்கள் பக்திப் பரவசத்தில் கன்னத்தில் போட்டுக்கொண்டு, கடவுள் நாமத்தை உச்சரித்தார்கள். நானும் குழப்பத்துடன் அந்த பரம்பொருளை நோக்கிக் கும்பிட்டேன்.

ஏதோ ஓர் இயந்திரம் தயாரித்ததுபோல் மழு மழுவென்று இரண்டு பக்கமும் சமமாகக் கட்சி அளித்த, ஒன்றரை அடி உயரத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்திருந்தனர். பூசாரி அங்கிருந்த ஜனங்களுக்கு ஆரத்தியுடன் விபூதியும் கொடுத்துக்கொண்டு இருந்தார். வேறு ஒருவர் பிரசாதத்தை தொன்னையில் வழங்கிக் கொண்டு வந்தார். ஜனங்கள் அவர் முன் கை நீட்ட ஆரம்பித்தனர். அவர் சற்று எரிச்சலுடன், "எல்லாருக்கும் இருக்குது, பொறுமையா வாங்குங்க" என்றபடி சொல்லி, ஏன் அருகில் வந்தார். பழக்கமான குரல் ஆனால், முகஜாடை சட்டென்று புரியவில்லை... அட, நம்ம சைக்கிள்காரர்!

''என்ன சார்நீங்களும் இங்க இருக்கீங்க? சக்தியான கடவுள் சார்" என்று என் அருகில் வந்தார். பக்கத்தில் இருந்த சிலர் என்னை விட்டு கொஞ்சம் நகர்ந்து சைக்கிள்காரருக்கு வழி விட்டனர். நான் ஏதோ முக்கிய நபர் என்று எண்ணி ஒரு மதிப்புடன் பார்த்தனர்.

''போன வாரம்தான் இதே இடத்தில் சைக்கிள்ல இருந்து நான் வி, இவருதவி பண்ணாரு" என பக்கத்திலிருந்தவரிடம் சொன்னார். ''அப்பாலே ரெண்டு நாள் முன்னாடி தான் நம்ம சாமியார் இங்கே சொயம்பு லிங்கத்தைப் பாத்தாரு" என்று எனக்குத் தெரியாத ரகசியத்தைக் கூறினார். நானும் ஆச்சரியத்துடன் அவர் உணர்ச்சிபூர்வமாகச் சொன்னவற்றை உள்வாங்கிக் கொண்டேன்.

"ஆமாம் சார் என்னைத்தான் அந்த சாமியார் கோயிலை பாத்துக்கச் சொன்னாரு" என்றவாறு, எனது காதருகே வந்து ''இப்பவெல்லாம் நான் சாராயம் குடிக்கறதை விட்டுட்டேன்" என்று சொல்லி, எனக்கும் ஒரு தொன்னை பிரசாதத்தை நீட்டினார். "இந்தா இத்த புடி சார்" என்று அந்த சிரித்த முகம், நெற்றியில் விபூதி பட்டை அணிந்து, ஒரு வகை தேஜஸுடன் என் கையில் நெய் மணக்கும் கேசரி இனிப்பை திணித்தார்.

அந்த சைக்கிள்காரரின் புதிய அவதாரத்தை நான் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு அடுத்திருந்த மற்ற ஜனங்களுக்கும் பிரசாதத்தை விநியோகம் செய்து, அக்கூட்டத்தில் மறைந்து போய்விட்டார். பிரசாதத்தை கையில் வாங்கிவாறு மனதில் ஒரு பிரம்மிப்புடன் அந்த சைக்கிள்காரரின் உள்ளிருக்கும் கடவுளை வணங்கினேன்.

இந்தப் பிரபஞ்சத்தில் நடப்பது பலதும் ஆச்சரியத்துக்குரியவைதான். ஒரு வாரம் முன்பு வரை குடிகாரராக இருந்த ஒருவரை, குழவி வடிவில் வந்து கோயில் கொண்ட சிவபெருமான், தம் பணி செய்ய திருவுளம் கொண்டு ஆட்கொண்டார் என்பதை நினைத்து வியந்தேன். இதைத் தான், 'கடவுளின் திருவிளையாடல்' என்பார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com