0,00 INR

No products in the cart.

தன திரயோதசி திருநாள்!

மாலதி சந்திரசேகரன்

தீபாவளித் திருநாளுக்கு முதல் நாள் திரயோதசி. இந்தத் திரயோதசி திதியில் எம தீபம் என்று கூறப்படும் தீபத்தை ஏற்றுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. நிறைய தீபங்களின் பெயர்களைக் கேட்டிருக்கிறோம். புதியதாக எம தீபம் என்பது என்ன? எமன் என்றாலே ஒரு பயம் எல்லோருக்கும் உண்டு. அதிலும் எம தீபம் என்பது கொஞ்சம் பயத்தைத் தரும் வார்த்தை என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால், அப்படி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது யமன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டால் பயம் இன்றி சந்தோஷமாக இந்த தீபத்தை நம் வீடுகளில் திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏன் மாலை நேரத்தில் ஏற்ற வேண்டும்? அன்றைய நாள் முடிந்து சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தான் ஏற்ற வேண்டும் என்பது நியதி.
எம தீபத்தை எங்கு ஏற்ற வேண்டும்?
இந்த தீபத்தை கோயிலிலும் ஏற்றலாம்; வீடுகளிலும் ஏற்றலாம். கோயில்களில் நவக்கிரக

சன்னிதியில் சனி பகவானுக்கு அருகாமையிலோ, அல்லது கால பைரவர் சன்னிதி இருந்தால் அவ்விடத்திலோ அல்லது யமுனா நதி தீரத்திலோ தெற்கு திசை நோக்கி இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

சரி, வீடுகளில் எப்படி ஏற்ற வேண்டும்? இந்த தீபம் எரியும்பொழுது மேற்புறம் எந்தவித தடுப்பும், அதாவது கூரையும் இல்லாமல் இருப்பதுதான் உசிதம். அதனால், மொட்டை மாடியிலோ அல்லது வீட்டின் வெளிப்புறம் அல்லது பின்புறம் திறந்த வெளியிலோ இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

ந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு முறை இருக்கிறது. நல்ல பெரிய மண் அகலாக (மடக்கு என்று சொல்வார்களே, அந்த அளவில்) ஓட்டை இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது எரிய வேண்டும் என்பதால், எண்ணெய் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும். அந்த மண் அகலை, ஒரு நாள் முன்னதாக தண்ணீரில் போட்டு வைத்தால், அந்த மண் ஈரத்தை எல்லாம் உறிந்து கொள்ளும். பிறகு வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். புது அகலில் எண்ணெய்யை அப்படியே ஊற்றினால் களி மண் எண்ணெய்யை ஊறிந்து விடும். அதிக நேரம் நின்று எரியாது. அப்படி காய்ந்த அகல் விளக்கில் சந்தனம், குங்குமம் இட்டு, நல்லெண்ணெய் விட்டு, கனமான திரியைப் போடவும்.

ஒரு தாம்பாளத்தில், சந்தனம், குங்குமம் இட்டு, இந்த அகலின் முகப்பை தெற்கு திசை நோக்கி இருப்பது போல் வைக்கவும். ஏனென்றால், தெற்கு என்பது எமனுக்கு உண்டான திசை. அதனால்தான் வீட்டில் சாதாரணமாக விளக்கேற்றுவதும், நல்ல காரியங்கள் செய்வதும், தெற்கு திசை நோக்கி செய்யக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவது உண்டு. விளக்கைச் சுற்றி தாம்பாளத்தில் உதிரிப் பூக்களைப் போடவும். பிறகு விளக்கிற்கு பின்புறமாக அதாவது முகப்பிற்கு எதிர்ப்புறம் நின்றவாறு விளக்கை ஏற்றவும்.

விளக்கை ஏற்றும்பொழுது கீழ்க்கண்ட இந்த ஸ்லோகத்தை அவசியம் கூற வேண்டும். குறைந்தது மூன்று முறைகளாவது இந்த ஸ்லோகத்தைக் கூற வேண்டும். மனப்பாடமாக இந்த ஸ்லோகம் தெரியாது என்றால், விளக்கை ஏற்றிய பின்பு கைகளைக் கூப்பிக் கொண்டு, நம் முன்னோர்களையும், எம பகவானையும் நினைத்துக்கொண்டு கூற வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:’

தீபத்தை ஏற்றிய பிறகு, வெற்றிலை பாக்கு, பழம் ஏதாவது ஒரு நைவேத்தியம் (கற்கண்டாய் கூட இருக்கலாம்) செய்து விட்டு, தீப ஆராதனை காட்ட வேண்டும்.

அலங்காரமாகவும், அனுகூலங்களைப் பெற வேண்டியும் விளக்குகளை வைக்க வேண்டும் என்று விரும்பினால், எட்டு விளக்குகளை ஏற்றலாம். மேற்சொன்னது போல், அகல், தாம்பாளம் இரண்டையும் அலங்காரம் செய்து வைத்து, தீபத்தை ஏற்ற வேண்டும். அந்த எட்டு தீபங்களையும், எட்டு திக்குகளில் அகலின் முகப்பு பாகம் இருப்பது போல் அமைக்க வேண்டும்.

ட்டு திக்குகளைப் பார்த்தாற்போல் ஏன் தீபங்களை வைக்க வேண்டும்?
எட்டு தீபங்கள் வைத்தாலும், ஒரே இடத்தில் எல்லாவற்றையும் வைத்து, ஒரே நைவேத்தியமாக செய்து, தீபாராதனை காட்டி, பிறகு அந்தந்த திக்குகளில் திருப்பி வைக்கலாம்.

1. இந்திரன் கிழக்கு திசைக்கு அதிபதி. இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் பெறலாம்.
2. அக்னி தேவன் தென்கிழக்கு திசையின் அதிபதி. இவரை வழிபாடு செய்தால், தேக வனப்பு மற்றும் தேக பலம், மன அமைதி, குடும்ப மேன்மை உண்டாகும்.
3. எமதருமன் தெற்கு திசையின் அதிபதி. இவரை வழிபட, நம்மை அண்டியிருக்கும் தீவினைகள் அனைத்தும் நீங்கி, நல்வழி பிறக்கும்.
4. வருண பகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரை வழிபட, பூமிக்குத் தேவையான மழை கிடைத்து, உணவு பஞ்சம் நீங்கும்.
5. நிருதி பகவான் தென்மேற்கு திசையின் அதிபதி. இவரை வழிபாடு செய்தால், எதிரிகளின் பயம் நீங்கும். வீரம் பிறக்கும்.
6. வாயு பகவான் வடமேற்கு திசையின் அதிபதி. இவரை வழிபாடு செய்தால், ஆயுள் விருத்தியாகும்.
7. குபேரன் வடக்கு திசையின் அதிபதி. இவரை வழிபடுவதால், சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும்.
8. ஈசானன் வடகிழக்கு திசையின் அதிபதி. இவரை வழிபாடு செய்வதன் மூலமாக ஞானத்தைப் பெற முடியும்.
மேற்சொல்லப்பட்ட எட்டு தேவர்களும், அஷ்டதிக் பாலகர்கள் எனப்படுவார்கள். அவர்களின் அருளாசி நமக்கு என்றும் வேண்டும்.

ட மாநிலங்களிலும், எம தீபம் என்பது திரயோதசி திதியில் ஏற்றப்படுகிறது. திருப்பாற்கடலை கடைந்தபொழுது, வைத்தியர்களுக்கு வைத்தியரான தன்வந்திரி பகவான், அன்றைய தினம்தான் அமிர்த கலசத்துடன் வெளிவந்தார் என்று கூறப்படுகிறது. அரவமான வாசுகியின் விஷக்காற்று எல்லோர் மீதும் பட்டபொழுது மயங்கி விழுந்தவர்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து மகாவிஷ்ணு தான் தன்வந்திரியாகத் தோன்றினார்.

தந்தேரஸ் அன்று இரவு முழுவதுமே விளக்குகளை ஏற்றிவைத்தால், எம பயம் இருக்காது என்பது வடநாட்டவர்களின் நம்பிக்கை. எம தீபமானது தந்தேரஸ் திருநாளன்று ஏற்றப்படுகிறது.

வட மாநிலங்களில், ‘தந்தேரஸ்’ என்று கூறப்படும் தன திரயோதசி திருநாள் தீபாவளிக்கு முன் தினம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தங்கத்தையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி, தீபாவளி அன்று மாலை லட்சுமி குபேர பூஜை செய்தால் வீட்டில் மென்மேலும் தங்கம் சேரும் என்று நம்பப்படுகிறது.

எமதர்மராஜனின் சகோதரியான யமுனா தேவி, தனது சகோதரன் எமனுக்கு, விருந்து உபசாரம் செய்து நமஸ்காரம் செய்யும்பொழுது, ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று எமதர்மன் ஆசீர்வதித்தார். அதனால், தனது சகோதரனால், தன் கணவருக்கு மரண பயம் இருக்காது என்று அவள் திடமாக நம்பிக்கை கொண்டாள். அன்றைய தினம் சகோதரன், சகோதரிக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவதும், சகோதரி சகோதரனுக்கு விருந்து படைப்பதும் வழக்கத்தில் வருகிறது. அதிலிருந்துதான் தீபாவளிக்குப் பிறந்த வீட்டு சீதனம் என்று சகோதரனால் சகோதரிக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

எமதர்மராஜனும் சனீஸ்வர பகவானும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், இந்த திரியோதசி திதி அன்று மட்டும் இருவருமே ஒன்றாக எல்லோருக்கும் ஆசிகளை வழங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.

திரயோதசி திதி அன்று மட்டும் எம தீபம் ஏற்றுவது ஏன்?
மகாளயபட்ச நாட்களில் நம் முன்னோர்கள் பூலோகத்துக்கு வந்திருந்து, அமாவாசையன்று நாம் கொடுக்கும் திதியை ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லவா? பித்ரு லோகம் விட்டு, பூலோகம் வந்த நம் முன்னோர்கள், திரயோதசி திதி அன்றுதான் மீண்டும் பிதுர் லோகத்திற்குச் செல்வதாக ஐதீகம். அதனால் அவர்கள் செல்லும் பாதைக்கு வெளிச்சம் கொடுக்கும் பொருட்டு, தீபத்தை நம் இல்லங்களிலோ அல்லது கோயில்களிலோ அவர்களை மனதில் நினைத்துக்கொண்டு ஏற்றி வைக்கிறோம்.

இப்படி ஏற்றி வைப்பதால் குடும்பத்தில், எதிர்பாராத மரணம், விபத்துக்களால் உண்டாகும் மரணம், இளம் வயது மரணங்களிலிருந்து எமன் நம்மைக் காத்தருள்வார் என்பது நம்பிக்கை.

நமது முன்னோர்கள் நமக்குப் பல நல்ல பழக்கங்களை ஏற்படுத்தியும், அதைச் செய்துக் காண்பித்துவிட்டும் மறைந்திருக்கிறார்கள். ஆகையால், அவர்களை நாமும் பின்பற்றி, வாழ்வில் ஏற்றத்தைப் பெறுவோம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

தகனத் திருவிழா!

0
- எம்.கோதண்டபாணி தென்றலெனும் தேரை கொஞ்சும் கிளிகள் இழுத்து வர, ரீங்காரம் பாடும் வண்டுகள் உடன் அணிவகுக்க, ரதி தேவியுடன் உல்லாசமாக இச்சை வீதியில் பவனி வருபவன் காதல் கடவுளாம் மன்மதன். கரும்பு எனும்...

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

2
- எ.எஸ்.கோவிந்தராஜன் இறை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது...