தீபத் திருநாளில் முருக தரிசனம்!

தீபத் திருநாளில் முருக தரிசனம்!

தொகுப்பு : ஆர்.ஜெயலெட்சுமி

திருச்செந்தூரில் கொடி மரத்திலிருநது வலமாக அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று வந்தால், 'ஓம்' என்ற வடிவில் அப்பாதை அமைந்துள்ளதை உணரலாம்.

திருச்செந்தூரில் மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்துத் தருவார்கள். இந்தப் பன்னீர் இலையைப் பிரித்தால் பன்னிரெண்டு நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் பன்னிரெண்டு திருக்கரங்களாகும்.

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அழகாபுத்தூர் கோயிலில் கையில் சங்கு சக்கரத்துடன் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார்.

தமது திருக்கரத்தில் மாம்பழம் ஏந்தி வித்தியாசமான திருக்கோலத்தில் முருகன் காட்சி தரும் திருத்தலம், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்.

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி கோயிலில் முருகப்பெருமான் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் காட்சி தருகிறார்.

செஞ்சேரிமலை திருத்தலத்தில் முருகப்பெருமான் சேவல் கொடிக்கு பதிலாக, சேவலையே ஏந்தி தரிசனம் தருகிறார்.

கையில் கிளி ஏந்திய முருகப்பெருமானை திருப்பூருக்கு அருகிலுள்ள கனககிரி என்னும் தலத்தில் தரிசிக்கலாம். தாமரை ஏந்திய முருகனை செங்கல்பட்டு அருகே, ஆனூரில் தரிசிக்கலாம்.

கும்பகோணத்திலுள்ள சோமேஸ்வரர் ஆலயத்தில் காலில் பாதரட்சையுடன் முருகன் காட்சி தருகிறார்.

முருகத் திருத்தலங்களுள் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. காரணம், முருகன் சினம் தணிந்து அமர்ந்த தலம் இது.

சிக்கல் திருத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் கந்த சஷ்டி திருநாளன்று முருகப்பெருமானின் விக்ரஹத்தில் இருந்து வியர்வை வழியும். துணியால் எவ்வளவு துடைத்தாலும் வற்றாமல் வியர்வை வழிந்துகொண்டே இருக்குமாம்.

பாம்பு வடிவில் முருகன் காட்சி தரும் கோயில் கர்நாடகத்தில் உள்ள, 'காட்டி சுப்ரமணியர்' ஆலயம்.

குன்றக்குடி கோயில் கருவறையில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி இருக்க, அருகே வள்ளி தெய்வானை தேவியரும் தனித்தனி மயில்களில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

சதுர்முக முருகனாக நான்கு முகங்களுடன் கந்தன் காட்சியளிக்கும் திருத்தலம் திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளப்பட்டி.

திண்டுக்கல் அருகே உள்ள திருமலைக்கேணி என்னும் ஊரில் உள்ள முருகன் கோயிலில் வள்ளி சுனை, தெய்வானை சுனை என்று இரண்டு சுனைகள் அருகருகே உள்ளன. தெய்வானை சுனை நீர் இரவு, பகல் எப்போதும் குளிர்ந்தும், வள்ளி சுனை நீர் எந்த நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

விராலிமலை மூலவர் சண்முகர் மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இத்தலப் பெருமானுக்கு சுருட்டு நிவேதனம் செய்யப்படுவது விசேஷம்.

குன்றக்குடி முருகன் ஆலயத்தின் கருவறை அமைப்பு மிகவும் சிறப்புப் பெற்றதாக உள்ளது. கருவறையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை, மூவராக இருந்தாலும், ஒருசேர தரிசிக்க முடியாது. ஒருபுறம் நின்று பார்த்தால் தெய்வானை முருகனும், மறுபுறம் நின்று பார்த்தால் வள்ளி முருகனும், நேரெதிரே நின்று பார்த்தால் முருகனை மட்டுமே முழுமையாகப் பார்ப்பது அதிசயம்.

திருத்தணியில் வழங்கப்படும் விபூதி மற்றும் 'ஸ்ரீபாதரேணு' எனும் சந்தனம் ஆகியவற்றுக்கு தீராத நோயைத் தீர்க்கும் தன்மை உண்டு.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி அன்று இரவில் செந்தில் நாயகரை 108 மகாதேவர் முன் அமர்த்தி, யாகசாலையில் உள்ள கும்பத்தின் நீரைக் கொண்டு வருவர். செந்தில் நாயகர் முன் கண்ணாடியைப் பிடித்து கண்ணாடிக்கு முன் அபிஷேகம் நடைபெறும். ஆறுமுகப் பெருமானை பன்னிரெண்டு கைகளோடு (மற்ற நாட்களில் கைகள் துணிகளால் மூடப்பட்டு இருக்கும்.) இந்த ஆறு நாட்கள் மட்டுமே தரிசிக்கலாம்.

திருச்செந்தூரில் முருகனின் சூரசம்ஹாரம் நடைபெறும் நிகழ்வுக்கு வசதியாக கடல் உள்வாங்கிச் செல்லும். சூரசம்ஹாரம் முடிந்து, முருகன் கோயிலுக்குத் திரும்பும்போது கடல் பழைய நிலையை அடையும். இந்த அரிய காட்சி இன்றும் நடைபெறுகிறது.

வஜ்ராயுதம் ஏந்திய முருகனை சுவாமிமலை, திருவிடைக்கழி தலங்களில் தரிசிக்கலாம். சக்கர வடிவில் காட்சி தரும் முருகனை விருத்தாசலம் மணவாளநல்லூரில் தரிசிக்கலாம்.

திருச்செந்தூரில் கந்த சஷ்டிக்கு மறுநாளிலிருந்து பங்குனி உத்திரம் வரை நடைபெறும் விழாக்களில் தெய்வானையே முருகனுடன் எழுந்தருள்வார்.

முருகனுக்கு ஆறு முகங்கள் ஏன் தெரியுமா? கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம், பாதாளம் ஆகிய ஆறு திசைகளிலிருந்தும் வரும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் கவனித்து தீர்ப்பதற்காகத்தான் அவருக்கு ஆறு முகங்கள் என்கிறது கந்த புராணம்.

அசுர சேனைகளை அழித்தொழித்த முருகப்பெருமான், அவர்களை மூன்று இடங்களில் எதிர்கொண்டாராம். அவை : நீரில் போர் புரிந்த இடம் திருச்செந்தூர், நிலத்தில் போர் புரிந்த இடம் திருப்பரங்குன்றம், இறுதியாக, விண்ணிலே போர் புரிந்த இடம் திருப்போரூர்.

தென்காசிக்கு அருகில் உள்ள இலஞ்சியில் மாதுளை முத்துக்களால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடியை பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

கேரளாவில் ஆலப்புழைக்கு அருகில் உள்ள ஹரிப்பாடு எனும் இடத்தில் பாலமுருகனாகவும், வைக்கம் அருகில் உதயணபுரம் என்னும் இடத்தில் பேரழகுடன் கூடிய வாலிபனாகவும், திருவனந்தபுரம் அருகே தைக்காட்டில் ஆண்டியாகவும் முருகப்பெருமான் அருள்புரிகிறார்.

கழுகுமலை முருகன் ஆலயத்தின் நூறு தூண்களிலும் ராமர் மற்றும் ஆஞ்சனேயரின் உருவங்கள் காட்சியளிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com