0,00 INR

No products in the cart.

தீபா! வள்ளி!

ஜே.எஸ்.ராகவன்

விநாயகரை ஒருமுறையும், சிவனை மூன்று முறையும், பார்வதியை ஐந்து முறையும் பிரதட்சணம் செய்யும் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயர் சுப்பு, குட்டி போட்ட பூனையாக பெட்ரூமைச் சுற்றி சுற்றி வந்தான். சுப்புவுக்கு கொலம்பஸ், மெகல்லன், வாஸ்கோடகாமா மாதிரி எங்கேயாவது சுற்றிக் கொண்டே இருத்தல் வேண்டும். ஒரே இடத்தில் சில நொடித் துளிகள் தொடர்ந்து நின்றால் அவன் தலை ‘கிர்’ என்று சங்கு சக்கரமாகச் சுற்றும்.

தீபாவளிக்காக, ‘கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பா பதத்துக்கு வீட்டில் கிளறிக் காட்டுகிறேன்’ என்று சவால் விட்டுவிட்டு சமையலறை உள்ளே புகுந்த தீபா, “பள்ளி அறை வாசலை சுப்பு தாண்டக் கூடாது” என்று கட்டளை இட்டிருந்தாள்.  நுழைவாசலில் போட்டிருந்த இழைக்கோலத்தை லக்ஷ்மண ரேகையாகப் பாவிக்குமாறு அவனுக்கு உபகட்டளையும் இட்டிருந்தாள். சமையலறை உள்ளே அனுமதித்தால், அவனுக்குப் பிடிச்ச தீபா, தீபாங்கிற திவ்யநாமத்தை சதா ஜபிச்சிண்டே சுத்தி சுத்தி வருவான். மைசூர்பா அடிப்பிடிச்சுப் போயிடும்.

“தீ…பா… ஆஆஆஆ” என்று மலை உச்சியில் நின்று கீழே பரவி இருக்கும் கடற்கரை அலைகளை நோக்கி ஓடும் காதலியை கதாநாயகன் கடைசி ரீலில் கூப்பிடும் குரலில் பள்ளி அறையிலிருந்து பத்தாவது தடவையாகக் கூப்பிட்டான்.

சமையல் அறை அமைதி காத்தது.

யார் கிழித்த கோட்டையும் லட்சியம் செய்யாத சுப்பு, தன் மனைவி கிழித்த கோட்டைத் தாண்ட மட்டும் பீதி அடைந்தான்.

தீபாவளிக்காக மைசூர்பாகு கிளறப்படும் கிச்சனிலிருந்து கும்மென்று நெய் வாசனை கிளம்பி சாதாரண வீட்டை, ‘ஹோம் ஸ்வீட் ஹோமாக’ மாற்ற வேண்டியதுதானே பண்டிகை சாஸ்திரம்? ஆனால், ஆனால்… இதென்ன வித்தியாசமான வாசனை? சுப்பு தன் ரோமன் மூக்கை ‘ஸ்ஸூ, ஸ்ஸூ’ என்று உறிஞ்சி கண்களை மூடி வெளியே வந்த வாசனையை இனம்கண்டுகொள்ள முற்பட்டான்; முடியவில்லை.

“சுப்பு! மைசூர்பாகிற்குக் கடலை மாவுதானே போடணும்?” தீபாவின் குரல் அசரீரியாகக் கேட்டது.

“ஆமாம், பயத்த மாவு, பத்து தேய்க்கிற மாவு, எலும்பு முறிவுக்குக் கட்டுக் போடறமாவெல்லாம் போடக் கூடாது!” சயன அறை பொறுப்புடன் பதில் சொல்லிற்று.

“கடலை மாவு என்ன கலர்?”

“உன்னை மாதிரி ஐஸ்வர்யா ராய் மாதிரி அம்சமா வெளிர் மஞ்சள் கலர்.”

“சுப்பு, நான் போட்டது வெள்ளைக் கலரா இருக்கே. இது என்ன மாவு?”

“வெள்ளைக் கலரா? அது கோல மாவு?”

“இப்போ என்ன செய்யறது?”

“ ‘கோலப்பாகு’ செமி லிக்விட்டா இருந்தா, ‘வேகவைத்த ஸ்வீட் மாவுக் கோலம்’னு பேர் வெச்ச வீடு பூரா இழைக்கோலம் போட்டுடு. டிரைவருக்கும் வேலைக்காரிக்கும் குடுக்கிற மாதிரி எறும்புக்கும் ஸ்வீட் குடுத்த புண்ணியம் இருக்கும்.”

“சுப்பு, நீ என்னை அங்கேயிருந்தே ரிமோட்டிலே கேலி செய்யறே… இங்கே வந்தா கொறஞ்சா போயிடுவே? இந்தக் கரண்டி வேற எடுக்க வரலே.”

“வரேன் தீபா. நீதான் என் காலைக் கட்டிப் போட்டுட்டியே! ஆணை இடு, கோட்டைத் தாண்டி ஓடி வருகிறேன்.”

அடுப்பின் மேலிருந்த வெங்கல உருளியின் நடுவில் ஜுரம் அடித்தவன் வாயில் துருத்திக் கொண்டிருக்கும் தெர்மா மீட்டராக சாய்ந்த நிலையில் கரண்டி நின்று கொண்டிருந்தது.

சுப்பு மட்டும் ஒரு கொத்தனாராக இருந்திருந்தால் வெங்கல உருளியில் இருந்த கலவையை, மினி கொல்லரால் எடுத்து சர் சர் என்று சுவரில் பூசி அங்கிருந்த ஆறு அங்குல விரிசலைக் கச்சிதமாக அடைத்திருப்பான்.

“சுப்பு, டோண்ட் ஒர்ரி. இந்த ப்ராஜக்டை அபார்ட் பண்ணிட்டு மறுபடியும் ஆரம்பிக்கப் போறேன்.”

“ரைட், தீபா, நாளன்னிக்கு தீபாவளிங்கிறதை ஞாபகம் வெச்சுக்கோ.

நரகாசுரனோட கோரிக்கைகளை நிறவேற்ற வேண்டிய நாள்.  வெங்கல உருளியைக் கை கழுவி விடு. இதோ இந்த மைசூர்போணியிலே மறுபடியும் ஆரம்பி. நான் போய் வழக்கம்போல பெட்ரூமிலே ஒளிஞ்சிக்கறேன். ரெடி… ஜூட்.”

அடுத்த முக்கால் மணி நேரத்தில் தயாரான மைசூர் பாகு வில்லைகள் மைசூரிலுள்ள சாமுண்டி ஹில்ஸ் பாறைத் துண்டுகளை நினைவூட்டின. சுப்பு தீபாவைப் பரிதாபத்துடன் பார்த்தான்.

“சுப்பு, கிருஷ்ணா ஸ்வீட் ரேஞ்சை விடு. நீ வேற யாரோ ஒருத்தி பண்ணிக் குடுத்த மைசூர்பாகைத் தின்னுட்டு எங்கிட்டேர்ந்து அது மாதிரி எதிர்பார்க்கிறே, ரைட்!”

“தீபா… அதெல்லாம் ஒண்ணும் இல்லே…

‘ரைட் நீ இலேசில் சொல்ல மாட்டே.  ஆனா, உன் மனசிலே இருக்கிற ஆளை நான் கண்டுபிடிக்கறேன் பாரு.  ஆரு மனஷிலே ஆரு’ அவங்களுக்கு என்ன பேரு? அதை நான் கண்டுபிடிக்கிறேன் பாரு. மிஸ்டர் ஷுப்பு, நீங்க நெனைச்சிண்டு இருக்கிற ஆளு ஆணா?”

“இல்லே.”

“உயிரோட இருக்காங்களா?”

“ஆமாம்.”

“உயிரை வாங்குபவங்களா?”

“இல்லே.”

“அவங்க பேரு ஒரு ஷாமி பேரா?”

“ஆமாம்.”

அந்தப் பெண் ஷாமியோட கணவர் ஷாமிக்கு இன்னொரு ஷாமி மனைவி உண்டா?”

“ம்… ஆமாம்.”

“அவங்க சம்பந்தப்பட்ட வார்த்தைங்க, தினைப்புனம், ஆலோலம், சோ, குருவிங்க இல்லையா?”

“ஆமாம்.”

“மிஸ்டர் ஷுப்பு, அவங்க பேரு ‘வ’லே ஆரம்பிச்சு ‘ளி’லே முடியும். உங்க மனசிலே இருக்கிறவங்க பேரு வள்ளி! கரெக்ட்தானே?”

“தீபா, என்ன விளையாட்டு இது! அவங்க என்னோட வேலை செய்யற கலீக். என் டீமிலே இருக்கிற மெம்பர்!”

“சுப்பு, நீ வள்ளிங்கிற அந்தக் கள்ளி குடுத்த மைசூர்பாகிலே மயங்கிதான் பாகா உருகிட்டே இல்லே?”

“தீபா, நீ இப்படிப் பேசக் கூடாது.”

“சுப்பு… உன் முழுப்பேரு சுப்பிரமணி. உனக்கு அவ வள்ளின்னா நா தெய்வ யானையா?”

“சீச்சீ! கொடி மாதிரி இருக்கிற நீ தெய்வ யானை இல்லேடா? தேவயானை.”

“நேத்து தூக்கத்திலே வள்ளி வள்ளினு ஏன் சொன்னே?”

“தூக்கத்துலே நான் என்ன ஒலிபரப்பினேன்னு எனக்கு எப்படித் தெரியும்?”

“அந்த வள்ளியை ஒரு பிடி பிடிக்கிறேன் பாரு… சுப்பு, நீ நிரபராதின்னா அந்த வள்ளியோட வீட்டு நம்பரைப் பளிச்சுன்னு சொல்லு.”

சுப்பு தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க, தீபா ஸ்பீக்கர் போனில் வள்ளி நம்பரை டயல் செய்கிறாள். குரல் மாத்திப் பேசுகிறாள்.

“ஹலோ, வள்ளி இருக்காங்களா?”

“வள்ளிதான் பேசறேன்.”

“நான் ஜின் டி.வி.லேர்ந்து கிளிமொழி பேசறேன். வள்ளி எப்படி இருக்கீங்க?”

“ஐயோ, நெஜமாவா? கிளிமொழியா பேசறீங்க… என் உடம்பெல்லாம் புல்லரிக்குது”

“வள்ளி, நீங்க எப்படி இருக்கீங்க?”

“நா நல்லா இருக்கேங்க. நீங்க?”

“நானும் நல்லா இருக்கேங்க. வள்ளி ஏதான பேசுங்க.”

“ஐயோ, கிளிமொழியா பேசறீங்க! நம்பவே முடியலீங்க. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.”

“எதை நம்ப முடியலே? நான் அழகா இருக்கேங்கிறதயா?”

“சேச்சே, அப்படிச் சொல்லலீங்க.”

“வள்ளிக்குப் பிடிச்ச ஹாபி என்னது?”

“சமையலுங்க.”

“வாவ், சமையலா…! எனக்கு வரவே வராதுங்க.”

“நான் நல்லாவே செய்வேங்க.”

“வள்ளி நல்லா செய்யற ஐட்டம் எது?”

“எல்லாத்தையும் நல்லா செய்வேங்க.”

“வள்ளி ரொம்பப் பிடிச்சு செய்யற ஸ்வீட் ஐட்டம் எது?”

“மைசூர்பாகுங்க.”

“ஹவ் ஸ்வீட்! வள்ளி செய்ற மைசூர்பாகு எப்படி இருக்கும்?”

“சூப்பரா இருக்குங்க.”

“வாயிலே போட்டா கரையுமா?”

“கண்ணாலே பாத்தாலே கரைஞ்சிடுங்க.”

“ஒங்க மைசூர்பாகை யாரு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்வாங்க?”

“என் பெரிய பையனுங்க.”

“எ…ன்…ன…து? பெரிய பையனா?”

“ஆமாங்க. வயசு இருபது. எம்.காம்., படிக்கிறாங்க. அலோ அலோ லைன் கட் ஆயிடுச்சா?”

தீபா ஃபோனை வைத்துவிட்டு ‘திருதிரு’ என்று விழிக்கிறாள். சுப்பு ஃபான், கூரை, மற்றும் ஒட்டடையைப் பார்க்கிறான்.

“ஸாரி சுப்பு, வள்ளி வயசானவங்கன்னு சொல்லலியே?”

“நீ கேக்கலியே.”

“இந்த அம்மாவையா வள்ளி வள்ளின்னு தூக்கத்திலே கூப்பிட்டே.”

“அதுவா? அன்னிக்கு வேலையிலே நிறையத் தப்பு பண்ணினாங்க. கோவத்திலே திட்டிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சுது, அவங்க பையன் பைக்கிலே விழுந்து மண்டை பிளந்து காயம். ஏழு தையல் போட்டாங்கன்னு. சே! இப்படிக் கத்திட்டேனேன்னு நொந்துண்டே படுக்கப் போனேனா…”

“சுப்பு, மறுபடியும், ஸாரி,”

“ஸாரியை விடு, வள்ளி சாஃப்ட்வேரிலே ஒர்க் பண்றாங்க. அதனாலே அவங்க பண்ற மைசூர்பாகு சாஃப்டா இருக்கு. நீ ஹார்டுவேர்லே ஒர்க் பண்றே. அதனாலே நீ பண்ணினது ஹார்டா இருக்குன்னு அதிரடியா சொல்றதுக்கு முன்னாடி, மைசூர்பாக் ஹார்டா இருக்கணுமா? சாஃப்டா இருக்கணுமா?ன்னு பட்டிமன்ற நடுவர் சாம்ஸன் சுப்பையாவா என்னோட தீர்ப்பைச் சொல்லிடறேன். ஐயா, கேட்டுக்கோங்கய்யா… அம்மாமாரே கேட்டுக்கங்கம்மா… சிக்கலான விஷயம்ய்யா இது.

“தீர்ப்பு சொல்றது ரொம்ப சிரமம். பல்லு போன கௌவனாரும் பல்லு மொளைக்காத கொழந்தையும் கடினமா இருக்கிற மைசூர்பாகை எப்படித் திங்குமய்யா? பல்லு போனா சொல்லு போகும்யா, ஆனா, பல்லு போனா ஜொள்ளு போகுமாய்யா? போகாதே! அதனாலே மென்மையா இருக்கணும்னு சொல்றதிலே நியாயம் இருக்கய்யா, ஹா!  ஆனா முப்பத்திரண்டு பல்லும் இருக்கிற என்னை மாதிரி இளவட்டங்களுக்கு வெடுக்குன்னு கடிக்க கடினமான மைசூர்பாகுதான் சௌகர்யம்யா. மென்மையா இருக்கிறதை வாயிலே போட்டு, அடி, ஆத்தி என்னான்னு பாக்கறதுக்குள்ளே தளதளன்னு கொதிக்கிற பாயச அண்டாலே போட்ட பஞ்சு மிட்டாயா கரைஞ்சிடுது இல்லே. வாழ்க்கைங்கிற மைசூர்பாகு, சில நேரத்திலே கடினமாவும் சில நேரத்திலே மென்மையாவும் மாறி மாறி இருந்தாலும், ஆதாரமா தித்திக்கணும். இனிப்பா இருக்கணும். சுவையா மாத்திக்கணும்கிற என்னோட தீர்ப்பை இந்தத் தீபாவளித் திருநாளில் சொல்லிடறேன்யா. அம்புட்டுத்தேன்.”

 2006-ல் வெளியான கதையின் மீள் பதிவு,

படம் : அமரர்  நடனம்

1 COMMENT

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

2
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...